ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் – விமர்சனம்

நடிப்பு: மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன்

இயக்கம்: அரிசில் மூர்த்தி

தயாரிப்பு: 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா, சூர்யா

ஒளிப்பதிவு: சுகுமார்

இசை: கிருஷ்

சமூக அக்கறை உள்ள தரமான படங்களை மட்டுமே தயாரிப்பது என்ற லட்சியம் கொண்ட நடிப்புக்கலைஞர்களான ஜோதிகா – சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் படநிறுவனம் தயாரித்துள்ள மற்றுமொரு தரமான படம் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்” படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல்வரியை தலைப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, பிரபல ஓ.டி.டி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படம், இரண்டு காளைமாடுகளை முதன்மையாக முன்வைத்து இன்றைய சமூக – அரசியல் அவலங்களை எள்ளி நகையாடி இருக்கிறது.

நாயகன் குன்னிமுத்துவை (மிதுன் மாணிக்கத்தை) கரம் பிடிக்கும் கிராமத்துப்பெண்ணான  நாயகி வீராயி (ரம்யா பாண்டியன்), திருமணச் சீராக கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு காளைமாடுகளைத் தன்னுடன் கொண்டு வருகிறார். கணவனும், மனைவியும் உயிருக்குயிராக நேசித்து குழந்தைகள் போல் பாவித்து பாசமாக வளர்க்கும் அந்த இரண்டு காளைமாடுகளும் ஒருநாள் காணாமல் போய்விடுகின்றன. மாடுகள் காணாமல்போக யார் காரணம்? அதிர்ச்சியுடன் மாடுகளைத் தேடி அலையும் குன்னிமுத்துவும், வீராயியும் எதிர்கொள்ளும் தடங்கல்கள், கேலி கிண்டல்கள் என்ன? இறுதியில் கருப்பனையும், வெள்ளையனையும் அவர்கள் கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பது கதை.

இதுதான் முதல் படம், இந்த படத்தில் தான் அறிமுகம் என்பதற்கான சுருதிபேதம் எங்குமே தெரியாத அளவுக்கு நாயகன் குன்னிமுத்துவாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் மிதுன் மாணிக்கம். கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களைக் கிறங்கடித்துவந்த ரம்யா பாண்டியன், இதில் முற்றிலும் மாறுபட்ட கிராமத்துப்பெண்ணாக சிறப்பாகத் தோன்றி, நாயகி வீராயி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் நண்பனாக வரும் வடிவேல் முருகனின் டைமிங் காமெடி – சரவெடி!

0a1e

தொலைக்காட்சி செய்தியாளர் நர்மதா பெரியசாமியாக வரும் வாணி போஜன் ஒரு மீடியாக்காரருக்கு உரிய சாதுரியத்தை தன்  நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். ஏனைய கதாபாத்திரங்களில் வரும் நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

மெலிதான சின்னஞ்சிறு ஸ்டோரிலைனை வைத்துக்கொண்டு இரண்டு மணிநேர திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. அரசியலை, அரசியல்வாதிகளை, அரசாங்கங்களை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியிருக்கும் இயக்குனர் அரிசில் மூர்த்தி அனைத்து தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்படுவார் என்பது நிச்சயம்

கிருஷின் பின்னணியிசையும், பாடலிசையும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா கதையின் மூடுக்கு உட்பட்டு கிராம்ப்புற அழகை ஆராதித்திருக்கிறது.

படத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறுசிறு குறைகள் தென்பட்டாலும், அவற்றை பொருட்படுத்த தேவையில்லை எனும் அளவுக்கு நிறைகள் நிறைந்திருக்கின்றன.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ – பார்க்கலாம், ரசிக்கலாம்!