காலங்காலமாக இந்துத்துவ கும்பல் செய்யும் அதே புரட்டு வேலைக்குத் தான் “மோடி ஆப்”!
மோடி செயலி (app):
மோடி தன் அறிவாற்றலை பயன்படுத்தி, உருவாக்கியுள்ள மற்றுமொரு உத்திதான் இந்த மோடி ஆப் என்னும் ஸ்மார்ட்போன் செயலி.
அதாவது இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளிட்டு இயக்கினால், முதலில் அழகிய மோடி முகம் தோன்றும். அதற்கு பிறகு நீங்கள் விடையளிக்கும் வண்ணம் சில கேள்விகள்! Demonetization பற்றிய உங்கள் கருத்தை இந்த கேள்விகளின் வழி மோடி அறிந்து கொள்ள விரும்புகிறாராம். மக்களின் கருத்தை கேட்காமல் எதையும் செய்யாத நல்லவர் இல்லையா அவர்?
போகட்டும். இந்த கேள்விகள் எப்படிப்பட்டவை?
அரசுக்கு தேவையான பதில்கள் மட்டும் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட கேள்விகள்.
அதாவது, ஆம் அல்லது இல்லை என இரண்டு தேர்வுகளை மட்டும் கொடுத்து ‘உன் நண்பனுக்கு நீ முட்டாள் என்பது தெரியுமா?’ என கேள்வி கேட்பது போல். மோடி தன் நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியாக நம்மை இந்த கேள்விதான் கேட்டு கொண்டிருக்கிறார் என்பதால் இதை பற்றி கூட பேச வேண்டாம்.
இந்தியாவின் மக்கள் தொகை சுமாராக 120 கோடி. தற்போது ஏறியிருக்கலாம். அதில் எத்தனை பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்?
கூகிளை தட்டி தேடி பாருங்கள். முதலில் வரும் தகவலை உண்மை என எடுத்துக் கொண்டாலும் 31.4 கோடி பேர்!
இந்த எண்ணிக்கையை அதிக பட்சமாக வைத்து கொள்வோம். ஏனெனில் இதில் பலர் ஸ்மார்ட்போனின் முழு பயன்பாட்டை அறியாதவர்களாக இருப்பர். இணையம் இல்லாதவர் இருப்பர். அப்படி இருந்தாலும் இந்த செயலியின் திருட்டுத்தனம் புரிந்து அதை பயன்படுத்தாத என்னை போன்றோரும் இருப்பர். இருந்தாலும் பக்தகோடிகளின் ஆறுதலுக்காக 31.4 கோடியாகவே எண்ணிக்கை இருக்கட்டும்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத மீத மக்கள்தொகை கிட்டத்தட்ட 80 கோடி பேர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை விட இரண்டு மடங்கு அதிக மக்கள்தொகை. இவர்களின் கருத்து எதுவுமே மோடிக்கு வேண்டாம். வெறும் 31 கோடி கூட்டத்தின் கருத்து மட்டும் போதும். இது என்ன அகங்காரம்… என்ன கயமை?
இந்த ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களில் பெரும்பான்மையின் கருத்து என்ன என்பதுதான் ஏற்கனவே தெரியுமே! ராணுவ வீரர்களின் பெற்றோரை காட்டிலும் இவர்கள்தானே ‘எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள்’ என அதிகமாக கவலைப்பட்ட கும்பல்? இது என்ன கருத்தை தந்துவிட போகிறது?
சரி, இந்த கருத்தால் என்ன லாபம்?
ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கும்பல் செய்யும் அதே புரட்டுதான். இத்தனை பேர் இந்த நடவடிக்கையை ஏற்று கொண்டுவிட்டனர், இவர்கள் எல்லாம்தான் மக்கள், இவர்கள் எல்லாம் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டுவிட்டனர், பாராட்டுகின்றனர் என கணக்கு சொல்லி தப்பிக்க விரும்பும் நோக்கம்தான். பாராளுமன்றத்தின் கடைசி நாளில் மோடி வீர கணக்கு காட்டுவதற்கான அத்தாட்சிதான் இந்த செயலி.
Godfather படத்தில், நாயகனின் அண்ணனை கொல்வதற்கு உதவியவன், தனக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்னும்போது, நாயகன் சொல்லுவான், “Don’t tell me you are innocent, because it insults my intelligence. Makes me very angry” என்று. எனக்கும் இன்னும் பலருக்கும் இப்படித்தான். ஆனால் இந்த கோபம் வராத பல பேர் இருக்கிறார்கள். நாங்கள் முட்டாள்களாக இருப்பதை சாபம் என நினைக்கையில் அது வரம் என நினைப்பவர்கள் அவர்கள். அந்த கூட்டம் இந்த செயலி, surgical strike எல்லாவற்றையும் தூக்கி தலையில் வைத்து கொண்டாடலாம். மோடி அவர்களுக்கு சிறந்த தலைவராகவும் தெரியலாம், கடலில் விழ போகும் எலிகளுக்கு குழல் ஊதி சென்ற piper தெரிந்ததை போல். ஆனால்..
சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம். எல்லாரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது!
– RAJASANGEETHAN JOHN