பூ சாண்டி வரான் – விமர்சனம்

நடிப்பு: மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேஷிணி

 இயக்கம் & படத்தொகுப்பு: ஜே.கே.விக்கி

தயாரிப்பு & தயாரிப்பாளர்: ’திரியும் ஸ்டூடியோ’ எஸ்,சாண்டி & ’வெள்ளித்திரை’ முஜிப்

ஒளிப்பதிவு: அசலிஷம் பின் முகமத் அலி

இசை: டஸ்டின் ரிறுடுங் ஷ்

மக்கள் தொடர்பு: பி.ஸ்ரீ வெங்கடேஷ்

”சிவனாண்டி (சிவனடியார்) பூச்சாண்டியாக மாறிப்போன கதை” என்பது இப்படத்தின் ஒருவரிக் கதை. அதை நேரடியாக சித்தரித்தால் போரடிக்கும் என்று, சுவாரஸ்யத்துக்காக பேய், கொலை, பழங்கால நாணயம், கடாரம் போன்றவற்றையெல்லாம் திரைக்கதையில் சேர்த்து விறுவிறுப்பான அமானுஷ்ய க்ரைம் த்ரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

அமானுஷ்ய விஷயங்களிலும், புராதன சமாச்சாரங்களிலும் ஆர்வம் கொண்ட மதுரை இளைஞர் முருகன் (மிர்ச்சி ரமணா), அத்தகைய விசித்திர சம்பவங்களைச் சேகரித்து, ஆராய்ந்து, பத்திரிகையில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். இதுபோன்ற ஆய்வுக்காக மலேசியா செல்லும் அவர், அங்கு ஷங்கர் (தினேஷ் சாரதி கிருஷ்ணன்) என்பவரைச் சந்திக்கிறார். ஷங்கர் தன் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை விவரிக்கிறார்.  அது என்னவென்றால்…

ஷங்கர், அன்பு (லோகன் நாதன்), குரு (கணேசன் மனோகரன்) ஆகிய மூவரும் நண்பர்கள். அவர்களில் அன்பு நடமாட இயலாத மாற்றுத் திறனாளி. பழங்கால நாணயங்களை விலைக்கு வாங்கி  சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

0a1b

மூன்று நண்பர்களும் ஒரு வித்தியாசமான முயற்சியாக ஆவியுலகத்துடன் தொடர்புகொள்ள விரும்புகிறார்கள். அன்புவிடம் உள்ள பழங்கால நாணயம் ஒன்றை ’ஓஜோ போர்டு’ மீது பயன்படுத்தி, அந்த நாணயத்தோடு தொடர்புடைய ஆவியுடன் பேச முயற்சி செய்கிறார்கள். அந்த ஆவி பெண்ணின் ஆவியாக இருக்க வேண்டும் என்று ஜொள்ளுகிறான் குரு. என்ன ஆச்சரியம்! குருவின் விருப்பத்துகேற்ப ஒரு பெண்ணின் ஆவியே அவர்களுடன் பேசுகிறது. தன்னுடைய பெயர் மல்லிகா (ஹம்சினி பெருமாள்) என்றும், தான் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் கூறுகிறது. இந்த ஆவிக்கும் நண்பர்களுக்கும் இடையிலான உரையாடல் சில நாட்கள் தொடருகிறது. ஒருநாள் குரு திடீரென மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அவரது இறப்புக்கு மல்லிகாவின் ஆவிதான் காரணம் என்ற முடிவுக்கு ஷங்கரும், அன்புவும் வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை ஷங்கர் மூலம் தெரிந்துகொள்ளும் ஆராய்ச்சியாளர் முருகன், “மல்லிகா யார், எப்படிப்பட்டவர், ஏன் இறந்தார், அவருக்கும் அந்த நாணயத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற விவரங்கள் தெரிந்தால், மல்லிகாவின் ஆவி ஏன் குருவை கொன்றது என்பது தெரிந்துவிடும்” என்கிறார். மல்லிகா பற்றிய விவரங்கள் சேகரிப்பதற்காக முருகன், ஷங்கர், அன்பு ஆகிய மூவரும் அந்த பெண் வாழ்ந்த இடத்தை தேடிப்போனால், அங்கே மல்லிகா  உயிரோடு இருக்கிறார். மூவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மல்லிகாவின் ஆவி என சொல்லிக்கொண்டு வந்த ஆவி யார்? குருவைக் கொன்றது யார்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பல திருப்புமுனைகளுடன் விடை சொல்லுகிறது மீதிக்கதை.

அமானுஷ்ய விஷயங்களை ஆய்வு செய்யும் முருகன் என்ற நாயக பாத்திரத்தில் மிர்ச்சி ரமணா நடித்திருக்கிறார். தன்னுடைய பாத்திரத்தின் தன்மையையும், முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு சரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் நடிப்புக் கலைஞர்களில் இவர் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஏனையோரெல்லாம் மலேசியாவை சேர்ந்தவர்கள்.

மல்லிகாவின் ஆவி பற்றிய கதைப்பகுதியை முருகனிடம் விவரிக்கும் ஷங்கராக தினேஷ் சாரதி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். கதைக்களம் நிர்பந்திக்கும் எல்லா உணர்வுகளையும் தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்துகிறார். நகைச்சுவை, கோபம், பதற்றம், வில்லத்தனம் என எந்த நடிப்பையும் விட்டு வைக்கவில்லை.

0a1c

நடமாட இயலாத அன்பு என்ற மாற்றுத் திறனாளியாக வரும் லோகன் நாதன் தன் இயலாமையை விவரிக்கும்போதும், வில்லனாக மாறும்போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குருவாக கணேசன் மனோகரன், மல்லிகாவாக ஹம்சினி பெருமாள் குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பைத் தந்துள்ளார்கள்.

குழந்தைகளை பயமுறுத்தும் ‘பூச்சாண்டி’ என்ற இன்றைய அருவத்தின் பண்டைய உருவம் என்ன என்ற கேள்விக்கு விடை தர இயக்குனர் ஜே.கே.விக்கி மேற்கொண்டுள்ள முயற்சியை பாராட்டலாம். அதுபோல நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி, குறைந்த பட்ஜெட்டில், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், பல சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் கதையை நகர்த்திச் சென்றிருப்பதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.

ஆனால், சிவனடியார்களை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக களப்பிரர்களை தாழ்த்தியிருப்பது பெரும் வரலாற்றுப் பிழை. களப்பிரர் காலம் ‘இருண்டகாலம்’ என்று தூற்றும் சனாதன சரித்திர ஆசிரியர்களாலும், வருணாசிரம மனுவாதிகளாலும் இயக்குனர் ஈர்க்கப்பட்டிருப்பதே இப்பிழைக்குக் காரணம். தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான மன்னர்களைப் போல களப்பிரர்களும் சைவம், வைணவம், சமணம், பவுத்தம் போன்ற அனைத்து மதங்களையும் சரிசமமாகவே நடத்தினார்கள் என்பதை வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்ற நூல், வரலாற்றாய்வாளர் அ.மார்க்ஸ் எழுதிய ‘’களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: ஒரு பார்வை’ என்ற கட்டுரை போன்றவற்றை படித்தால் தெரிந்துகொள்ள முடியும்.

படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகிய இருவரின் பங்களிப்பும் படத்துக்கு நேர்த்தியை தருகிறது.

பூ சாண்டி வரான் – வித்தியாசமான முயற்சி! ரசிக்கலாம்!!