கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர்.

மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாண்டு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவியும், அவரது நண்பர் ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயதான இளைஞரும், பீளமேடு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் உள்ள காலி இடத்துக்குச் சென்று காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர், இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை அருகிலுள்ள புதருக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர்.

மயக்கம் தெளிந்து எழுந்த இளைஞர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சில மணி நேரம் தேடி மாணவியை மீட்டு, இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இளைஞர் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் உத்தரவின்பேரில், துணை ஆணையர் தேவநாதன் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது, தாங்கள் வந்த மொபட்டை அங்கேயே நிறுத்திச் சென்றனர். போலீஸாரின் விசாரணையில் அது திருட்டு மொபட் எனத் தெரிந்தது.

நள்ளிரவில் சுற்றிவளைப்பு:

தொடர்ந்து போலீஸாரின் புலன் விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேர், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர்கள் அர்ஜூன், ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளக்கிணறு பகுதியில், குற்றவாளி கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

போலீஸார் வருவதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். சரணடையும்படி போலீஸார் எச்சரிக்கை செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் போலீஸாரை வெட்டினர். அதில் தலைமை காவலர் சந்திரசேகர் காயமடைந்தார். இதையடுத்து போலீஸார் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக 3 பேர் காலிலும் சுட்டுப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) என்பது தெரிந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

மாநகர காவல் ஆணையர் விளக்கம்:

கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகியோர் அண்ணன் – தம்பிகள். இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. க.க.சாவடி போலீஸில் திருட்டுவழக்கு, துடியலூர் போலீஸில் அடிதடி வழக்கு, கோவில்பாளையத்தில் வாகனத்திருட்டு வழக்கு, சத்தியமங்கலத்தில் திருட்டு வழக்கு உள்ளது. போலீஸாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், கடந்த 30 நாட்களுக்கு முன்னர் வெளியே வந்தனர். தவசி இவர்களது உறவினர். காயமடைந்த இளைஞரும், பாதிக்கப்பட்ட மாணவியும் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வருகின்றனர். அவருக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கைதானவர்களிடம் இருந்து மாணவியின் செல்போன், மோதிரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தவசி, கருப்புசாமிக்கு 2 கால்களிலும் குண்டு பாய்ந்தது.காளீஸ்வரனுக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்தது. விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. 296 (பி),180, 324, 140, 309, கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.