பேரன்பு – விமர்சனம்

வெளிநாட்டில் வேலை செய்பவர் மம்மூட்டி. அவரது மனைவி இந்தியாவில் இருக்கிறார். அவர்களது மகள் (‘தங்க மீன்கள்’ சாதனா), மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். முடங்கிப் போயிருக்கும் மகளை தாய்தான் பராமரித்து வருகிறார். குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததாலும், தொடர் பராமரிப்பில் ஏற்பட்ட சலிப்பாலும் வெறுத்துப்போன அந்தப் பெண், தனது குழந் தையை அப்படியே விட்டுவிட்டு வேறொரு துணையைத் தேடிக்கொள்கிறாள். குழந்தை யைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, மம்மூட்டி யிடம் வருகிறது. தந்தையும், மகளும் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் என்பதே ‘பேரன்பு’.

தந்தை – மகள் பிணைப்பை ஏற்கெனவே ‘தங்க மீன்கள்’ படத்தில் அழகாக, எதார்த்தமாக காட்டியிருந்தார் ராம். இங்கும் அதே அன்புதான். ஆனால், வேறு பரிமாணம். மாற்றுத்திறன் குழந்தைகளோடு வாழ்நாள் முழுக்க பயணப் படும் பெற்றோரின் நிலையை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார். அந்தரங்கமான மையக் கருவை அருவருப்பு இல்லாமல் கடந்துபோன விதத்துக்காகவே இயக்குநரை தனியாகப் பாராட்ட வேண்டும்.

தன் மகளுடனான அனுபவங்களைப் பிறருக் குச் சொல்லும் முனைப்புடன் ஒரு கதை எழுது கிறார் மம்மூட்டி. அதன் அத்தியாயங்களாகவே விரிகிறது திரைக்கதை. படத்தை நாவல் தன்மையில் நகர்த்தியது சிறப்பு. ஆனாலும், தொடர்ந்து திரையில் மம்மூட்டியையும், அவரது மகளையும் மட்டுமே பார்ப்பதால், ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டுகிறது. இவர்களது வாழ்க்கைக்கு நடுவே அஞ்சலி வரும்போது, படம் சுவாரஸ்யத் தருணங்களை நோக்கி நகர்கிறது. ஆனால் அதுவும் சீக்கிரமே முடிந்துவிடுகிறது.

மெகா ஸ்டார் மம்மூட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் நேரடி தமிழ் படம். மாற்றுத் திறன் குழந்தையின் தந்தையாகவே வாழ்ந்திருக் கிறார். கதாபாத்திரத்துடன் ஒன்றிவிடுகிற அவரது அர்ப்பணிப்பு உணர்வும், நுட்பமான உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டும் விதமும் கவிதை.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியாக ‘தங்க மீன்கள்’ சாதனாவின் நடிப்பு பிரமிப்பு. இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்க துணிந்ததற்காகவே தனியாகப் பாராட்டலாம்.

குறுகிய நேரமே வந்தாலும், பார்வையாளர் களின் நெஞ்சில் குடியேறுகிறார் அஞ்சலி. அவரது கதாபாத்திரம் கச்சிதமான வார்ப்பு.

அஞ்சலி அமீர் ஏற்றிருக்கும் மீரா கதாபாத்திரமும் முக்கியமானது. ஆபத்து தருணத்தில் மனிதாபிமானமாக நடந்துகொண்ட காரணத்தால் மம்மூட்டி மீது கொண்ட பிரியத்தை வெளிப்படுத்துவதுபோல, மம்மூட்டியால் பெற்ற ஏமாற்றத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். வழக்கமான கதாபாத்திரங்களில் சமுத்திரகனி, சண்முகராஜன்.

திருநங்கைகளின் கபடமில்லாத அன்பும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனித மனங்களுக்குள் மறைந்திருக்கும் வன்மம், கோபம், குரோதத்தை வன்முறை இல்லாமல் படம் நெடுகிலும் காட்சிப்படுத்தி இருப்பது புதிது. பிரிந்து சென்ற தன் மனைவியை மம்மூட்டி காணச் செல்லும் காட்சியும் அருமை. மாற்றுத்திறன் மகளை விட்டுவிட்டு, ஒரு தாய் தேடிக்கொண்ட புதிய துணையும், வாழ்வும் மிகச் சாதாரணமானவைதான். ஆனால் அவளுக்கான நிம்மதியான வாழ்க்கை அங்கு கிடைக்கிறது. அந்த கதாபாத்திரம் மீது வெறுப்பு ஏற்படுத்தாத வகையில் வெகு இயல்பாக இதை காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் மனநிலையை பார்வையாளருக்குப் பெற்றுத் தருவதில் பேரளவுக்கு உதவுகிறது ஒளிப்பதிவு. பரந்த வெளி, சிறிய அறை என எந்தப் பாகுபாடும் இன்றி, காட்சிக்கு தேவையானதை அப்படியே அள்ளித் தருகிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தோடு பார்வையாளர்களை வெகுவாக ஒன்ற வைக்கிறது. பல இடங்களில் காட்சிக்கு ஊறு செய்யாத வகையில் இசைப் பங்களிப்பு செய்துள்ளார். சில இடங்களில் இசை இல்லாத மவுனமே அழகாக இருக்கிறது.

இயற்கை அதிசயமானது, அற்புதமானது, புதிரானது, கொடூரமானது எனச் சென்று இயற்கை பேரன்பானது என்பதாக நிறை வடையும் படம், அந்த உணர்வை பார்வை யாளர்களிடமும் ஏற்படுத்திவிடுகிறது.