சார்பட்டா பரம்பரை – விமர்சனம்

சினிமாவில் இருக்கும் ஒரு தோழரிடம் பேசுகையில் அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார். “சினிமாவில் கதையாக மக்கள் விரும்புவது பொதுவுடமை பேசும் கதைகளைதான். சினிமா தயாரிப்பு நிறுவனங்களும் மக்களுக்கு நன்மை செய்யும் பொதுவுடமை சிந்தனை கொண்ட கதைகள் நாயகர்களுக்கு பிடிப்பதால் அவற்றை உடனே ஏற்கின்றன” என்றார்.

கேரளாவுக்கு இணையாக தமிழ்நாட்டில் பொதுவுடமை கருத்துகள் கொண்ட படங்கள் வருகின்றன. மக்கள் அதை கொண்டாடவும் செய்கின்றனர். ஏனெனில் களத்தில் எப்போதும் எங்கும் ஏதோவொரு சிவப்பு துண்டு இயங்கிக் கொண்டிருக்கும். அந்த தோழருடன் நாம் நேரடியாக பேசவில்லை என்றாலும் புறக்கணித்தாலும் நம் மனதுக்கு பின்னால் அவரின் தேவையை புரிந்து வைத்திருப்போம்.

ஒரு குறை மட்டும் நெருடிக் கொண்டே இருந்தது. பொதுவுடமைக்கு நிகராக மக்களின் சிந்தனைப் போக்கில் ஊறியிருப்பது திராவிடம். தமிழ்ச்சூழலில் அதிகம் கோலோச்சிய திராவிட சித்தாந்தத்தை பேசும் படங்களோ திமுக ஆதரவு படங்களோ அதிகம் வந்ததில்லை. மிகச் சிலவை வந்திருந்தாலும் அவை வெகுஜனப் பூர்வமாக இல்லாமல் பக்கா கட்சி மெட்டீரியலாக மட்டுமே வந்திருக்கின்றன.

அந்த குறை நிவர்த்தியாகி இருக்கிறது.

முதன்முறையாக வெகுஜனம் கொண்டாடும் கமர்ஷியல் கதையில் திமுகவின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. அதுவும் நேர்மறையாக. சரியான வரலாற்று புரிதலுடன். இன்று இருக்கும் தேவைக்கு ஏற்ப.

காரணம் பா.ரஞ்சித்!

இந்திய தேசியத்துக்கு திராவிட அரசியலை பலி கொடுக்க எம்ஜிஆர் எப்படி துணை போனார் என்பதை சார்பட்டா பரம்பரையை விட சிறப்பாக சொல்லிவிட முடியாது. பட்டியல் சாதி மக்களிடம் எந்த அரசியல்படுத்துதலையும் நிகழ்த்தாமல் பகடைகளாக பயன்படுத்தியதும் மறுபக்கத்தில் இடைச்சாதிகளின் ஆதிக்கத்துக்கு வழிகோலியதும் எம்ஜிஆரின் முக்கியமான குற்றங்கள். அவை படத்தில் மிகச் சரியாக கடத்தப்பட்டிருக்கின்றன.

அதிமுக உருவாக்கத்துக்கு முன் வரை தமிழ்நாட்டில் முக்கியமான சீர்திருத்தங்களையும் முற்போக்கு சிந்தனைப் போக்கையும் திமுக வெகு விரைவாகவும் சிறப்பாகவும் கட்டி எழுப்பியது. அதிமுக அரியணை பிடித்த பிறகு அவை மிகப் பெரிய தேக்கத்தை அடைந்து ரவுடித்தனம், ரசிக மனப்பான்மை, சாராயம் என வீழ்ந்தது. அதிமுகவின் தோற்றத்துக்கு பின்னிருந்து திமுகவும் அதிமுக அரசியலுக்கு தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது.

திமுகவின் தொடக்க கால தொண்டர்கள் பேசும் அரசியலை இன்றைய திமுக தொண்டர்களின் ஒரு பகுதி புறக்கணிக்கலாம். அதெல்லாம் காலாவதியாகி விட்டது என வியாக்கியானம் பேசிக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் நெஞ்சுரமும் நேர்மையும் பரந்த மனப்பான்மையும் இன்றைய தலைமுறை தொண்டர்கள் அறிந்திராதவை. அறிந்தாலும் புரிந்திட முடியாதவை.

ரங்கன் வாத்தியார்களின் உரம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வட்டத்திலும் மாவட்டத்திலும் இன்னும் இருக்கிறது. தமிழ்ச்சமூகத்தின் மண்ணும் அரசியலும் இன்னும் வீறு கொண்டிருப்பதற்கு ரங்கன் வாத்தியார்களும் பொதுவுடமை தோழர்களும்தான் காரணம்.

அந்த வரலாற்று சரடை மிகச் சரியாக புரிந்து கொண்டதால்தான் இயக்குநர் ரஞ்சித்தால்,

“இவ்ளோ நல்லா ஆடறே.. உன்னை போய் அசிங்கப்படுத்திட்டேனேடா?”

என வருந்தும் ரங்கன் வாத்தியாருக்கு

“எல்லாம் நீ சொல்லிக் கொடுத்த ஆட்டம்தான் வாத்தியாரே!”

என்ற கபிலனின் பதிலை வசனமாக்க முடிகிறது.

டான்சிங் ரோஸ், படத்தை ரீவைண்ட் செய்து ரசிக்க வைக்கும் பாத்திரம். டாடியின் பாத்திரம், தமிழ்ச்சூழலில் மிஷனரிகளின் வழிவந்த ஆங்கிலோ இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்க தூண்டும் கதாபாத்திரம். குறிப்பாக படத்தில் வரும் பெண்கள் அனைவருமே தெளிவான அரசியல் பேசுகிறார்கள். பசுபதியின் நடிப்பை பற்றி புதிதாக சிலாகிக்க வேண்டியதில்லை.

சார்பட்டா பரம்பரை தமிழ்நாட்டின் மிக முக்கியமான காலகட்டத்தை சிறப்பாக பதிவாக்கியிருக்கும் தரமான படம். அனைவரும் பார்த்து விடுங்கள்.

ஏனெனில்,

“அடிப்படை நல்லா இருந்தாதான் ஆட்டம் நல்லா இருக்கும்!”

RAJASANGEETHAN

 

 

Read previous post:
0a1b
வாழ் – விமர்சனம்

சகல தரப்பினராலும் கொண்டாடப்பட்ட ’அருவி’ என்ற யதார்த்த திரைப்படத்தை படைத்தளித்த இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது ‘வாழ்’. ’வாழ்’

Close