”விக்ரம்’ படத்துக்குப் பிறகு ‘பத்து தலை’ படத்தில் அனைத்து நடிகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்!” – சிலம்பரசன்

சிலம்பரசன் டி.ஆர், கெளதம் கார்த்திக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தை கிருஷ்ணா இயக்க, ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா உலகம் முழுவதும் வைரலாகியுள்ள நிலையில், படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பிரத்யேகமாக பத்திரிகையாளர்களை ‘பத்து தல’ படக்குழுவினர் நேற்று சென்னை கமலா திரையரங்கில் சந்தித்தனர். இதில், சிம்பு, இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனஞ்செயன், நடிகை சாயிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

0a1b

நிகழ்ச்சியில் பேசிய படக்குழுவினர் அனைவரும் ”’பத்து தல’ படம் சிம்பு ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருப்பதோடு, மிகப் பெரிய வெற்றிப்படமாகவும் இருக்கும்.” என்று கூறியதோடு, ’நாயகன்’ கமலாகவும், ’தளபதி’ ரஜினியாகவும் ‘பத்து தல’ சிம்பு இருப்பார் என்றும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பேசுகையில், “இசை வெளியீட்டு விழாவின்போது பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்பதால் தான் இப்போது சந்திக்கிறேன். சிம்பு சார் வர மாட்டாரா என்று சிலர் கேட்டதாக சொன்னார்கள். எப்படி நான் வராமல் இருப்பேன்? நிச்சயம் பத்திரிகையாளர்களை சந்திக்க வருவேன். இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சிலரை மறந்திருப்பேன், அவர்கள் குறித்து இங்கே பேச விரும்புகிறேன்.

இயக்குநர் கெளதம் மேனன் பற்றி சொல்ல வேண்டும். அவர் முக்கியமான வேடம் ஒன்றில் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகம் பண்ண முடியாது என்று நினைக்கிறேன், அந்த அளவுக்கு கெளதம் மேனன் அனைத்து படங்களிலும் இருக்கிறார். படம் இயக்கும்போது நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் இயக்குநர்களில் கெளதமும் ஒருவர், அப்போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும், அதனால் தான் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குநர் கிருஷ்ணா இந்த படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறினார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா அனைவரையும் மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார். கடைசியாக ’விக்ரம்’ படத்தில் தான் அப்படி அனைத்து நடிகர்களுக்கும் சரியான வாய்ப்பு கொடுத்திருப்பார்கள். அது மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்திற்கு பிறகு ’பத்து தல’ படத்தில் அதை கிருஷ்ணா செய்திருக்கிறார். படப்பிடிப்பின்போதே நான் அவரிடம் கெளதமுக்கு அதிகமான காட்சிகள் வைங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். காரணம், பட வெளியீட்டுக்கு முன்பு எதை வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் படம் வெளியான பிறகு பேசக் கூடாது அதனால் தான் கிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன், அவர் நான் நினைப்பதை புரிந்துக்கொண்டு, ’பயப்படாதீங்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு படத்தில் இருக்கும்’ என்றார். படப்பிடிப்பின்போது அது தெரியவில்லை, படம் பார்த்த பிறகு அனைவருக்கும் முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் எதாவது ஒரு இடத்தில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் கிருஷ்ணா படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய திறமைக்கு அவர் இந்த படத்திற்கு பிறகு பல உயரங்களை தொடுவார்.

சாயிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். அவர் சிறந்த டான்ஸர் என்பது நமக்கு எல்லாம் தெரியும். இந்த படத்திற்காக அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதற்கு நன்றி. அவருடைய நடனம் படத்திற்கு பலம் சேர்த்திருப்பதை மறுக்க முடியாது.

கெளதம் கார்த்திக் பற்றி நான் இசை வெளியீட்டு விழாவிலே பேசினேன். அவருக்காக தான் இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.  இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த கஷ்டங்களை ஜாலியாக எடுத்துக் கொள்வார் என்று சொல்கிறார்கள். கஷ்டமான விஷயங்களை ஜாலியாக எடுத்துக் கொள்பவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள், அது தான் உண்மை. கெளதம் கார்த்திக் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். சண்டைக்காட்சியில் நடிக்கும்போது சிலருக்கு செட்டாகாதது போல் தோன்றும். ஆனால், கெளதம் கார்த்திக் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது மிக சிறப்பாக இருக்கும். டூப் இல்லாமல் நடிப்பது என்பது வேற விஷயம், நான் கூட பல படங்களில் செய்திருக்கிறேன். ஆனால், எது நடந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ஒருவர் சண்டைக்காட்சியில் நடிப்பது என்பது வேற லெவல், அப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளில் தான் கெளதம் நடித்து வருகிறார். அவர் பல படங்களில் சண்டைக்காட்சிகளில் நடித்தாலும், இந்த படத்தில் அவருடைய சண்டைக்காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும். நானே படப்பிடிப்பில் அவரது சண்டைக்காட்சிகளை ரசித்து பார்த்துக்கொண்டு இருப்பேன்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எனக்காக பல கஷ்டங்களை தாங்கிக்கொண்டார். அவர் இல்லை என்றால் இந்த படம் இவ்வளவு பெரிய படமாக வந்திருக்காது, படம் பற்றி இப்படி பேசவும் மாட்டார்கள். மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்திருக்கிறார். அவருக்காகவே படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

ஏ.ஆ.ரஹ்மான் சார் எனக்காக சிறப்பாக பணியாற்றிக் கொடுப்பார். இந்த படத்திலும் அவருடைய பங்கு பெரியது. இந்த படத்தின் டிரைலர் பணியை இரண்டு நாட்களில் முடித்துக்கொடுத்தவர், இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, பிறகு அவருடைய இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு ’பொன்னியின் செல்வன்’ பணியை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் இங்கு வந்து ’பத்து தல’ பின்னணி இசை சேர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார். அவரைப் போன்று ஒரு மனிதரை பார்க்க முடியாது. அவரிடம் பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய மகன் அமீன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.

இறுதியாக தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் எது சொன்னாலும் நான் கேட்பேன் என்ற இமேஜ் உருவாகியிருக்கிறது. அதற்கு காரணம் அன்பு தான். என்னை அன்பால் கட்டிப்போட்டு விட்டார். அதனால் தான் அவர் சொல்வதை நான் கேட்கிறேன். அவர் போன்று அனைவரும் இருந்து விட்டால் நன்றாக இருக்கும். ஆனால், அப்படி யாரும் இருப்பதில்லை. அவருடைய அன்புக்காக நிச்சயம் அவர் சொல்வதை நான் கேட்பேன்.

என்னுடைய சிறு வயது முதல் இப்போது வரை பல இக்கட்டான சூழலில் எனக்கு பத்திரிகை நண்பர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். தற்போது எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதை நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இந்த படத்துக்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி” என்றார்.

 

Read previous post:
0a1g
செங்களம் (இணையத் தொடர்) – விமர்சனம்

நடிப்பு: வாணி போஜன், கலையரசன், சரத் லோகிதாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி, வேல ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியேல் ஆன்னி போப், பிரேம் மற்றும் பலர் எழுத்து

Close