பன்னி குட்டி – விமர்சனம்

நடிப்பு: கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை மற்றும் பலர்

இயக்கம்: அனுசரண் முருகையன்

தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்’ சுபாஸ்கரன்

இசை: கிருஷ்ணகுமார்

மக்கள் தொடர்பு: நிகில்

தமிழ் திரைத்துறையில் யானை, குரங்கு, நாய், கழுதை உள்ளிட்ட பல வகையான விலங்குகளை மையமாக வைத்து பல வெற்றிப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் வித்தியாசமான முயற்சியாக, வெள்ளைப் பன்றிக்குட்டியை மையமாக வைத்து முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள காமெடி திரைப்படம் ‘பன்னி குட்டி’.

கிராமத்து இளைஞனான உத்திராவதிக்கு (கருணாகரன்) எல்லாமே பிரச்சனையாக இருக்கிறது. அவரது தங்கை நிலாவதி (ஷாதிகா) கணவரோடு சண்டை போட்டுவிட்டு வந்து பிறந்தவீடே கதி என தங்கிவிடுகிறார். அப்பா பெரிய கருப்பு (டி.பி.கஜேந்திரன்) மது அடிமையாக எந்நேரமும் போதையில் மயங்கிக் கிடக்கிறார். இது போதாதென்று உத்திராவதிக்கு காதலும் கைகூடவில்லை.

இப்படி வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத உத்திராவதி தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றும் புருனோ (ராமர்) அவரை சாமியார் திண்டுக்கல் லியோனியிடம் அழைத்து செல்ல, சாமியார் சொல்வதை உத்திராவதி செய்ய, அவருடைய பிரச்சனைகள அனைத்தும் சட்டென தீர்ந்து விடுகிறது.

உடனே சாமியாருக்கு நன்றி சொல்ல போகும்போது, வெள்ளை பன்னி குட்டி ஒன்றின் மீது உத்திராவதியின் பைக் மோதிவிட, அவர் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனைகள் வருகிறது.

அந்த பிரச்சனைகள் தீர மீண்டும் அதே பன்னி குட்டி மீது உத்திராவதி பைக்கில் சென்று மோத வேண்டும் என்று சாமியார் சொல்வதோடு, ஐந்து நாட்களுக்குள் அதை செய்ய வேண்டும், இல்லை என்றால் மிகப்பெரிய பிரச்சனைகள் வரும் என்று கூறிவிடுகிறார்.

அதே பன்னி குட்டியை ஐந்து நாட்களுக்கு பத்திரமாக பார்த்துக்கொண்டால் தான் தனக்கு திருமணமாகும் என்பதால் திட்டாணி (யோகி பாபு) அந்த பன்னி குட்டியை குழந்தையை போல் பார்த்துக்கொள்ள, உத்திராபதி பன்னி குட்டி மீது மீண்டும் மோதினாரா? இல்லையா?, அவருடைய பிரச்சனை தீர்ந்ததா, இல்லையா? பன்னி குட்டியை காப்பாற்றுவதில் திட்டாணி வெற்றி பெற்றாரா, இல்லையா? அவருக்கு திருமணம் நடந்ததா, இல்லையா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் உத்திராவதியாக நடித்திருக்கும் கருணாகரன், கிராமத்து இளைஞனின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனது வழக்கமான காமெடி கலந்த இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார்.. படத்தின் மற்றொரு நாயகன் திட்டாணியாக வருகிறார் யோகி பாபு. அவர் வரும் காட்சிகள் சற்று குறைவு தான் என்றாலும்,அந்த குறைவான காட்சிகளிலும் நம்மை நிறைவாக சிரிக்க வைக்கிறார். ராமர், தங்கதுரை, சிங்கம் புலி ஆகியோரது கூட்டணி திரையரங்கே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறது.  சாமியாராக வரும் திண்டுக்கல் லியோனி, படம் முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், தனது முக பாவனைகளால் கவனிக்க வைக்கிறார்.

இயக்குநர் அனுசரண் முருகையன் தனது முதல் படமான ‘ ‘கிருமி’யில் த்ரில்லரில் ஸ்கோர் செய்தது போலவே ‘பன்னி குட்டி’யில் நகைச்சுவையில் ஸ்கோர் செய்திருக்கிறார். கிருஷ்ண குமார் இசையில் ‘பன்னிக்குட்டி பன்னிக்குட்டி’ பாடல் கேட்கும் ரகம். பன்னி குட்டியின் இயல்புக்கும் ஓட்டத்துக்கும் ஈடுகொடுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் சதீஷ் முருகனுக்கு சபாஷ்.

பன்னி குட்டி – ஆபாசம் அறவே இல்லாத காமெடி படம்! குடும்பத்தோடு பார்த்து சிரிக்கலாம்!

Read previous post:
0a1i
பொன்னியின் செல்வன்: கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு! – அருணன்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள். கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான். அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின்

Close