‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை வெளியிட தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பில் நடிகர் விஷாலுக்கு தொடர்பில்லை என்பதால், படத்தை வெளியிட அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான விஷாலின் வங்கிக் கணக்கு விவரங்கள், அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஷால் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன்பு நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி சொத்து விவரங்கள் குறித்து மனு தாக்கல் செய்யவில்லை. 15 கோடி ரூபாயை இதுவரை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை. தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் ஒரு கோடி ரூபாய் மினி ஸ்டூடியோவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது எனக் கூறி, நடிகர் விஷாலின் செயல்பாடு குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார் .

அப்போது பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், “தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. நிதி ஆதாரம் இல்லை எனக்கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரலில் 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய உத்தரவை உறுதி செய்தது. அதன்பிறகும், சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன்? மினி ஸ்டூடியோ தாக்கல் செய்த வங்கிக் கணக்கு விவரங்களில் 1 கோடியே 61 லட்ச ரூபாய் விஷால் வங்கிக் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே? எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், “அந்த தொகையில் இருந்து 90 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவு ஏதும் மீறப்படவில்லை. மேலும், இந்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சார்ட்டர்டு அக்கவுண்டண்டை நியமிக்க வேண்டும். மத்தியஸ்தர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை எப்படி செலுத்தப்படும்? நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஷால், லைகாவுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்கவில்லை; உத்தரவாதம் அளித்து விட்டு அதை செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

சக்ரா படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை லைகாவிடம் உள்ளது. லைகா ஜிஎஸ்டி செலுத்தாததால் விஷால் செலுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது லைகா தரப்பில், “படங்களுக்கு ரூ.40 கோடி ஊதியம் பெற்றுள்ள விஷால், பணத்தை செலுத்தாவிட்டால் நடிப்பதை நிறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போகு குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களுக்கும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா? சொத்து விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் தரப்பில் அந்த மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளது. எனவே படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரையிலான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பது உள்ளிட்ட சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அடுத்த விசாரணைக்கு விஷால் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.