”அடுத்த ஆண்டு தனது வீட்டில் தான் மோடி கொடியேற்றுவார்”: காங்கிரஸ் பதிலடி

டெல்லி செங்கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 10 -வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய அவர், “அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ம் தேதி இதே செங்கோட்டையில் நின்று நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிடுவேன். மேலும், உங்கள் வலிமை, உறுதி மற்றும் வெற்றிக்காக அதிக நம்பிக்கையுடன் போராடுங்கள் என வலியுறுத்துவேன்” என்று தெரிவித்திருந்திருந்தார். (வரும் 2024ம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.)

மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது. 2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே (2023) கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தினத்துக்கு முந்தையநாள் நிகழ்வில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடிஜி, செவ்வாய்க்கிழமை டெல்லி செங்கோட்டையில் ஆற்றும் சுதந்திர தின உரையே, பிரதமராக அவர் ஆற்றவிருக்கும் கடைசி உரை. ‘இண்டியா’ கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி விளையாடும். அந்தக் கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவை உறுதியாக தோற்கடிக்கும்” என்று தெரிவித்தார்.