நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, மயில்சாமி மற்றும் பலர்

இயக்கம்: அருண்ராஜா காமராஜ்

இசை: திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்

தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ பிராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்

வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & சதீஷ்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த துயரமான ஓர் உண்மைச் சம்பவத்தை தழுவி, ”சாதி, மதம், இனம், பால் வேறுபாடு ஏதுமின்றி இந்தியர்கள் அனைவரும் சமம்” என்ற அடிப்படை உரிமையை உரக்கச் சொல்லும் இந்திய அரசியல் சாசனத்தின் 15-வது பிரிவை வலியுறுத்தி, ஆயுஷ்மான் குரானா நடிப்பில், அனுபவ் சின்ஹா இயக்கத்தில், 2019ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றதோடு, விருதுகளையும் வாரிக்குவித்த ’ஆர்டிகிள் 15’ என்ற இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘ ’நெஞ்சுக்கு நீதி’.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாதிக்கொடுமைகள் தலைவிரித்தாடும் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்). அந்த ஊரில் சத்யா உள்ளிட்ட மூன்று தலித் இளம்பெண்கள், தாங்கள் வேலை செய்யும் இடத்தில் 30 ரூபாய் கூலி அதிகம் கேட்டார்கள் என்பதற்காக கடத்திச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, கூட்டு வன்புணர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டு, சடலங்களாக மரத்தில் தொங்க விடப்படுகிறார்கள். மூன்றாவது பெண்ணான சத்யா காணாமல் போகிறார்.

இந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி விஜயராகவனுக்கு, காக்கிச் சட்டைகளிடமிருந்தும், கரை வேட்டிகளிடமிருந்தும்  பல தடங்கல்கள் வருகிறது. தடங்கல்களை கடந்து, தலித் பெண்களை வன்புணர்வு செய்து கொன்ற  கொலையாளிகளையும், காணாமல் போன சத்யாவையும் விஜயராகவன் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

0a1c

காவல் துறை அதிகாரி விஜயராகவன் கதாபாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டும் அளவாக கோபத்தை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அவரது நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. திரைத்துறையோடு அரசியல் துறையிலும் கால் பதித்திருக்கும் உதயநிதிக்கு காலத்துக்கும் குறிப்பிடத்தக்க முக்கிய படமாக இது இருக்கும் என்பது நிச்சயம்.

சமத்துவ சிந்தனை கொண்ட நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரனுக்கு, நாயகனை ஊக்குவித்து நெறிப்படுத்தும் கதாபாத்திரம். இதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்..

ஒடுக்கப்பட்டோர் சார்பில் ஆட்சியதிகாரத்தை எதிர்க்கும் குமரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஆரி அர்ஜுனன், கொஞ்ச நேரமே வந்தாலும் கர்ஜனையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நரித்தனம் மிகுந்த காவல் ஆய்வாளர் சுந்தரம் அய்யராக வரும் சுரேஷ் சக்ரவரத்தி, ஒரு நேரம் பவ்யமாகவும், இன்னொரு நேரம் கொடூரமாகவும் நடிப்பை வெளிப்படுத்தி, பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

இளவரசு, மயில்சாமி, ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், ’ராட்சசன்’ சரவணன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

‘ஆர்டிக்கிள் 15’ இந்திப்படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழ் ரசிகர்களுக்காக நிறைய மாற்றங்கள் செய்து, செம்மையாக திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். தமிழ்நாட்டில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை திரைக்கதை நினைவூட்டுகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு தலித் பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அவர் துன்புறுத்தப்பட்டு, அவர் சமைத்த உணவும் வீணாக்கப்பட்டது, ஒரு நேர்மையான பெண் மருத்துவருக்கு  ’டாக்டர் அனிதா’ என பெயரிட்டிருப்பது, பெரியார், அம்பேத்கர் சிலைகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பது, காவலர்களுக்கு இடையே இருக்கும் சாதியப் பாகுபாடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என பல உண்மைச் சம்பவங்களை பொருத்தமாக இணைத்து சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

”ஆதிக்க சாதியினர் தலித்துகள் மீது ஆதிக்கம் செய்கின்றனர்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், எஃப்.சி, பி.சி., எம்.பி.சி, எஸ்.சி. ஆகிய சாதிய அடுக்குகளின் அனைத்து நிலைகளிலும் ஆதிக்க மனோபாவம் இருக்கிறது என  சொல்லியிருப்பதன் மூலம் இப்படம் தனித்துவத்துடன் விளங்குகிறது. அதற்கு ஏற்ப, பொளேர் பொளேர் என அறைகிற விதமாய் வசனங்களை தெறிக்க விட்டிருக்கும் தமிழரசன் – பச்சமுத்துவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ் இசையில், “செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திர ராசா” பாடல் அட்டகாசம். பின்னணி இசையில் அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.

சமீபகாலத்தில் சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் ஆதரவாக குரல் கொடுத்து நல்ல பெயரையும், பிரமாண்ட வெற்றியையும் பெற்றிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்களின் வரிசையில் ‘நெஞ்சுக்கு நீதி’யும் இடம் பெறுகிறது.

‘நெஞ்சுக்கு நீதி’ – கண்டு களிக்கலாம்; தலையில் வைத்து கொண்டாடலாம்!