மை டியர் பூதம் – விமர்சனம்

நடிப்பு: பிரபு தேவா, அஷ்வந்த், ரம்யா நம்பீசன் மற்றும் பலர்

இயக்கம்: என்.ராகவன்

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார்

மக்கள் தொடர்பு: நிகில்

திக்கித் திக்கி பேசுவது உடல் குறைபாடு, பிறவிக் குறைபாடு என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அது உடல் குறைபாடோ, பிறவிக் குறைபாடோ அல்ல. அது மனம் சார்ந்த பிரச்சனை. அதற்கு மருத்துவ சிகிச்சையைவிட, இப்பிரச்சனை உள்ளவர்கள் சொல்ல வருவதை காதுகொடுத்துக் கேட்டு, மனக்குறையை போக்கி, அவர்களது தன்னம்பிக்கையை மீட்டெடுத்தாலே அவர்கள் அதிலிருந்து எளிதாக வெளியே வரலாம். இந்த உயர்ந்த கருத்தை, பூதம் பற்றிய ஃபேன்டசி கதை வழியே குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நகைச்சுவையும், எமோஷனலும் கலந்து பக்குவமாகச் சொல்லியிருக்கும் அருமையான படம் ‘மை டியர் பூதம்’.

பூதங்களின் உலகத்தில், பூதங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரசபூதம் கற்கிமுகி (பிரபு தேவா). குழந்தை இல்லாத கற்கிமுகிக்கு, பல வருட வேண்டுதலுக்குப்பின் ஒரு ’மகன்பூதம்’ பிறக்கிறது. அதற்கு கிங்கனி என பெயர் சூட்டப்படுகிறது.

இந்த ‘மகன்பூதம்’ ஒரு முனிவரின் தவத்தை விளையாட்டாக கலைக்கப்போய், அந்த முனிவரின் கோபத்துக்கு ஆளாகிறது. அவர் விடும் சாபத்தை மகனுக்கு பதிலாக கற்கிமுகி ஏற்றுக்கொண்டு, சிலையாக மாறி பூமியில் வந்து விழுந்து கிடக்கிறது. அதை தொட்டு துடைப்பவர் மூலம் சாப விமோசனம் அடைந்து மீண்டும் உயிர் பெறலாம்.

கற்கிமுகி சிலையை, எதிர்பாராத விதமாக  பள்ளிச் சிறுவன் திருநாவுக்கரசு (அஷ்வந்த்) தொட்டுவிட, சிலை சாப விமோசனம் அடைந்து உயிர் பெறுகிறது. இதற்காக சிறுவனிடம் மிகவும் அன்புடனும் நன்றியுடனும் இருக்கிறது கற்கிமுகி. தன்னுடைய அம்மா (ரம்யா நம்பீசன்) உடன் வாழ்ந்து வரும் திருநாவுக்கரசுக்கு கற்கிமுகி எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறது.

கற்கிமுகிக்கு உயிர் கொடுத்தவர் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை 48 நாட்களுக்குள் சொன்னால் மட்டுமே கற்கிமுகி மீண்டும் பூதங்களின் உலகத்துக்கு திரும்பி மகனுடன் சேர முடியும். இல்லையென்றால் நிரந்தரமாய் அழிந்துபோகும் என்பது முனிவர் விதித்த நிபந்தனை. ஆனால், கற்கிமுகியை உயிர்ப்பித்த சிறுவன் திருநாவுக்கரசுவுக்கோ திக்கித் திக்கி பேசும் பிரச்சினை. அவரால் அந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து பூதத்துக்குஉதவ முடிந்ததா என்பது மீதி கதை.

0a1e

ஃபேன்டசி பூதம் கதாபாத்திரத்தில் நச்சென்று பொருந்தி நடித்திருக்கிறார் பிரபுதேவா. அவரது கற்கிமுகி பூதத் தோற்றம் பழமை – நவீனம் இரண்டின் கலவையாக கவர்கிறது. சிறுவர் உலகத்துக்கு ஏற்ற அப்பாவித்தனமான உடல்மொழி மற்றும் வசன நகைச்சுவை, அவர்களுக்கு பிடித்தமான மாயங்களை புரிவது என அவரது கதாபாத்திர வடிவமைப்பு குழந்தைகள், பெரியவர்களை ஈர்க்கிறது.

பூதம் – சிறுவன் இடையே உருவாகும் தோழமையும், அதன்வழி உருவாகும் சென்டிமென்ட் காட்சிகளும்தான் படத்தின் ஈர்ப்பான அம்சம். சிறுவன் அஷ்வந்தின் உணர்வுப்பூர்வ நடிப்பு பல காட்சிகளில் பிரபுதேவாவையே மிஞ்சிவிடுகிறது. குறிப்பாக, திக்கிப் பேசுவதால் எதிர்கொள்ளும் கேலிகள், அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக தனது நடிப்பில் கொண்டுவந்து அசத்துகிறார் அஷ்வந்த்.

சிறுவனின் அம்மாவாக வரும் ரம்யா நம்பீசன், கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.

குழந்தைகளை இலக்காகக் கொண்டு இப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் என்.ராகவன். பூதத்துக்கும், சிறுவனுக்கும் இடையே உள்ள காமெடி மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம்.

விஷுவல் எஃபெக்ட்ஸில் இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தெரியும் குறைபாடுகளை பிரபுதேவா நடனமும், டி.இமான் இசையும், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவும் ஈடுகட்டிவிடுகின்றன. குறிப்பாக ”மாஸ்டர் ஓ மை மாஸ்டர்”  பாடல், குழந்தைகளை மொத்தமாக வசீகரம் செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது.

‘மை டியர் பூதம்’ – குழந்தைகளை மட்டும் அல்ல, பெரியவர்களையும் மயக்கும் தூயவன்!