”முந்திரிக்காடு’ வெளிவந்த பின் ஆணவக் கொலைகள் குறைய வேண்டும்”: படவிழாவில் நல்லகண்ணு பேச்சு

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் எழுதி இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இதில் சீமான், புகழ், சுபப்பிரியா, ”தியேட்டர்லேப்” ஜெயராவ், கலைசேகரன், அ.வெ.பார்த்திபன், சக்திவேல், சோமு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை : ஏ.கே.பிரியன்; ஒளிப்பதிவு : ஜி.ஏ. சிவசுந்தர்; படதொகுப்பு : எல்.வி.கே.தாசன்; கலை : மயில்கிருஷ்ணன்; பாடல்கள் : கவிபாஸ்கர் – இளையகம்பன்; மூலக்கதை : எழுத்தாளர் இமையம்; மக்கள் தொடர்பு : மெளனம் ரவி.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, சி.மகேந்திரன், இயக்குனர்கள் ச்சி, ராஜு முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

m9

விழாவில் ஆர்.நல்லக்கண்ணு பேசுகையில், “நான் களஞ்சியத்தை பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறைய போட்டி இருக்கிறது.

சீமான், சசி, ராஜு முருகன் எல்லாம் இந்தக்கதைக்கு நெருக்கமானவர்கள்.

காதலித்தவன் செத்தாலும் காதல் நிற்கும்.

இந்தப்படம் ஆரம்பிக்கும்போது இருந்ததை விட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது. படம், பார்க்க மட்டும் தானா? அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டும். இந்தப்படம் சீக்கிரம் வெளியில் வர வேண்டும். இந்தப்படத்தின் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப்படம் வெளிவந்த பின் ஆணவக் கொலைகள் குறைய வேண்டும்” என்றார்.

சி.மகேந்திரன் பேசுகையில், “தோழர் இமையம் எழுதியதை நான் நாவலா, இல்லை சிறுகதையா என்று கேட்டேன். அவர் அதை நெடுங்கதை என்றார். ’பெத்தவன்’ கதையை மு.களஞ்சியம் தவிர வேறு யாராலும் படமாக எடுக்க முடியாது என்பதை இந்த படத்தைப் பார்க்கும்போது உணர்ந்தேன்.

’பெத்தவன்’ கதையை படமாக்கிய களஞ்சியத்திற்கு ஒரு வரலாறு உண்டு. சாதியக் கொடுமைகளை எதிர்த்து நின்று போராடியவர்களின் பின்னணியில் வந்தவர் மு.களஞ்சியம். தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் தலித் இளைஞர்கள் மேல்சாதி என சொல்லப்படும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தாலே கொல்லப்படடு விடுவார்கள். ஒரே நேரத்தில் ஒரு மாட்டையும் கொல்வார்கள், தலித் இளைஞனையும் கொல்வார்கள். கொன்ற இளைஞனை அந்த மாட்டின் வயிற்றுக்குள் வைப்பார்கள். இப்படியான கொடூரங்களைப் பார்த்து வந்தவர் மு.களஞ்சியம். அதனால் தான் அவரிடம் இருந்து இப்படி ஒரு படைப்பு வருகிறது.

மிகப் பெரிய புரட்சிக்கு ஒரு திரைப்படம் காரணமாக இருந்த வரலாறு உண்டு. அதுபோல் தமிழ்நாட்டில் இந்த ’’முந்திரிக்காடு’’’ படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

ஒரு படைப்பு மூலமாக ஒரு குடும்பத்தை இணைத்தது போல பல திறமையாளர்களை இப்படத்தில் இணைத்து இருக்கிறார் களஞ்சியம். அவருக்கு அதற்காக என் நன்றி. ஒரு தந்தைக்கு இருக்கும் முக்கியமான கடமை தன் மகனின் முயற்சிகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்பது.  அந்த வகையில் என் மகன் புகழ் ஒரு நல்ல நடிகராக வந்துள்ளார் என்று நம்புகிறேன்” என்றார்

இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், “பெத்தவன்’ நாவலை மு.களஞ்சியம் ’முந்திரிக்காடு’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் என்று தெரிந்ததும் பொறாமையாக இருந்தது. பல புரட்சிக்கு வித்திட்ட மண் முந்திரிக்காடு.

சில இயக்குநர்கள் தன் சினிமாக்களை தன் அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி இருப்பார்கள். தோழர் மு.களஞ்சியத்தை. நான் அப்படித் தான் பார்க்கிறேன்.

இந்தப்படம் கொஞ்சம் தாமதாக வந்தாலும் நல்லா கூர்தீட்டிக் கொண்டு வரப்பட்டுள்ளது. நான் இந்தப்படத்தைப் பார்த்து வியந்தேன். நிச்சயமாக இந்தப்படம் சாதியத்திற்கு எதிரான ஒரு ஆயுதமாக விளங்கும் என்று நம்புகிறேன்.

சாதிய எதிர்ப்பு குடும்பத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். நம் குடும்ப உறுப்பினர்கள் கூட சாதிக்கு எதிராக களம் இறங்க வேண்டும். குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டும். இந்தப்படம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.