போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாசினி: ஸ்டாலின் வாழ்த்து!

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26) என்ற திருநங்கையும் உள்ளனர்.

பிரித்திகா யாசினி சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. படித்தார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதி வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவர் சென்னையில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றார். பயிற்சிக்கு பின் அவருக்கு தர்மபுரி மாவட்டத்தில் வேலை செய்ய பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை பிரித்திகா யாசினி, தர்மபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

காவல் துறை உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள திருநங்கை பிரித்திகா யாசினிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடித்து, தருமபுரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள திருநங்கை பிரித்திகா யாசினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணியில் அவர் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் பல படைக்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பமாகும்.

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனி நல வாரியம், அடையாள அட்டை, குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டை என திருநங்கைகளுக்கு சம உரிமை, சம நீதி கிடைக்க பல்வேறு நடவடிககைகளை மேற்கொண்டார். திருநங்கைகள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்காக திமுக ஆட்சியில் அவர்களுக்கென 150-க்கும் அதிகமான சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

பிரித்திகா யாசினி போல திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Read previous post:
0
“மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால்…”: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில்

Close