‘தென்னாட்டு சூரியன்’ மறைந்தது: கருணாநிதி காலமானார்

திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் ‘தென்னாட்டு சூரியன்’ என போற்றப்படும் தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இன்று (07-08-2018) காலமானார். அவருக்கு வயது 94.

இன்று மாலை 6.10 மணிக்கு அவ்ரது உயிர் பிரிந்ததாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் மாலை 6.40 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தி.மு.க. சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

பின்னர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி, ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 7ஆம் வீடு திரும்பினார்.

இதன்பின்னர், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூச்சுவிடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது.

உடல்நிலை சீரடைந்த நிலையில் வீடு திரும்பிய கருணாநிதிக்கு அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் மருத்துவ உதவிகள் செய்து வந்தனர். வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதி, ‘முரசொலி’ அலுவலகம், அண்ணா அறிவாலயம் போன்ற அவரது நெஞ்சுக்கு நெருக்கமான இடங்களுக்கு சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருவதை தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் பார்த்து ஆனந்தம் அடைந்தனர்.

கடந்த (2018ஆம் ஆண்டு) ஜூலை 18ஆம் தேதி, அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த ட்ராக்யோஸ்டமி அங்கு மாற்றப்பட்டதை அடுத்து, அன்றே அவர் வீடு திரும்பினார்.

ஆனால், ஜூலை 24ஆம் தேதி மாலையிலிருந்தே அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வதந்திகளாகப் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து ஜூலை 26ஆம் தேதி காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் காய்ச்சல் இருப்பதாகவும், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர். இச்சம்பவம் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதை மறைமுகமாக உணர்த்தியதால் தி.மு.க.வினர் கலக்கம் அடைந்தனர்.

மறுநாள் (ஜூலை 27ஆம் தேதி) நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 29ஆம் தேதி மாலை அவருக்கு இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையால் உடல்நிலை படிப்படியாக சீராகி வந்தது.

ஜூலை 31ஆம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய மருத்துவமனையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என கூறப்பட்டது. இந்நிலையில், கல்லீரல் செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையால் அவருக்கு ஆரம்பகட்ட மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு கல்லீரல் மருத்துவ நிபுணர் முகமது ரேலா ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மூச்சுத் திணறல் காரணமாக கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது, சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவரது உடல்நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் (ஆகஸ்டு 5) காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீவிர சிகிச்சை பிரிவுக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை மருத்துவமனையில் நேரில் பார்த்த படங்களை திமுக தலைமை அலுவலகம் உடனடியாக வெளியிட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் நேரில் பார்த்த படங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இதுவரை காவேரி மருத்துவமனைக்கு வராத கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், நேற்று (ஆகஸ்டு 6) மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியைப் பார்த்தார். பகல் 1.50 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.

நேற்று இரவு 7 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “’திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. எனவே, அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரம் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க முடியும்” என்று கூறப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தகவலை அறிந்ததும் காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். கட்சி நிர்வாகிகளும் வரத் தொடங்கினர். பெண்களும் தொண்டர்களும் கதறி அழுதனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற துயரச் செய்தியை காவேரி மருத்துவமனை நிர்வாகம் மாலை 6.40 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

கருணாநிதியை இழந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர்.

0a1n