மிடில் கிளாஸ் – விமர்சனம்

நடிப்பு: முனீஷ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரைஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கிஷோர் முத்துராமலிங்கம்

ஒளிப்பதிவு: சுதர்சன் ஸ்ரீனிவாசன்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: பிரணவ் முனிராஜ்

கலை: எம்.எஸ்.பி.மாதவன்

ஸ்டண்ட்: டான் அசோக்

தயாரிப்பு: ‘குட் ஷோ, ஆக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி’ – தேவ், கே.வி.துரை

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

பொருளாதார ரீதியில் உயரே போகவும் முடியாமல், கீழே விழவும் முடியாமல், இடையில் ‘திரிசங்கு’ நிலையில் சிக்கிக் கொண்டு, தத்தளிக்கும் நெருக்கடியான வாழ்க்கை வாழ்பவை தான் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள். சென்னையில் வசிக்கும் அத்தகைய நடுத்தர வர்க்க குடும்பம் ஒன்றின் தலைவர், கதையின் நாயகன் முனீஷ்காந்த். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

சொந்த கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி, இயற்கை விவசாயம் செய்து, அங்கு ஒரு வீடு கட்டி எளிமையாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பது முனீஷ்காந்தின் கனவு. ஆனால், விஜயலட்சுமியோ, கிராம வாழ்க்கையில் வசதி – வாய்ப்புகள் பற்றாக்குறையாக இருக்கும் என்பதால் அது சரிப்பட்டு வராது என்றும், இந்த சென்னை மாநகரத்திலேயே சொகுசாக வாழ வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். இது போன்ற கருத்து வேறுபாடுகளால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சச்சரவு ஏற்படுவதும், இச்சச்சரவுகளில் மனைவி குரலை உயர்த்துவதும் வாடிக்கையாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, முனீஷ்காந்தின் தந்தை வேல ராமமூர்த்தி, மகனுக்கு ‘கார்ல் மார்க்ஸ்’ என்று பெயர் வைக்கும் அளவுக்குப் பற்றுள்ள பொதுவுடைமை சித்தாந்தவாதியாக வாழ்ந்து மறைந்தவர். பல ஆண்டுகளுக்கு முன் அவர் சென்னையில் எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்த்து விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். ஒருநாள் அவரிடம் வேலை கேட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் சேட் என்ற இளைஞருக்கு தன் கடையை இலவசமாகக் கொடுத்தார். ஆனால், இலவசமாக பெற்றுக்கொள்ள விரும்பாத அந்த இளைஞர் கடனாக பெற்றுக்கொள்வதாக கடன்பத்திரம் எழுதிக்கொடுத்தார். எப்போதோ எழுதிக்கொடுத்த அந்த கடன்பத்திரம், இப்போது தந்தையின் டிரங்க் பெட்டியைத் துளாவிய முனீஷ்காந்த் கையில் கிடைக்கிறது.

கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் முனீஷ்காந்த், அந்த கடன் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, ராம்லால் சேட்டை தேடிச் செல்கிறார். இப்போது முதியவராகவும் பெரிய தொழிலதிபராகவும் இருக்கும் ராம்லால் சேட், “என் முதலாளி மகனா நீ?” என்று கூறி முனீஷ்காந்த் மீது அன்பைப் பொழிகிறார். நன்றி மறக்காத அவர், பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து, ஒரு கோடி ரூபாய்க்கு செக் எழுதித் தருகிறார்.

ஒரு கோடி ரூபாய் வரப்போகிறது என்ற ஆனந்தத்தில் பரவசமடையும் முனீஷ்காந்தின் மனைவி விஜயலட்சுமி, பணம் கைக்கு வரும் முன்பே ஆடம்பரச் செலவுகளில் ஈடுபடுகிறார். கந்துவட்டிக்குக் கடன் வாங்கி தனது தம்பியின் திருமணத்துக்கு டாம்பீகமாகப் போய், பெரிய அளவில் சீர் செய்கிறார்.

இந்நிலையில், சேட் கொடுத்த செக்கைத் தொலைத்துவிடுகிறார் முனீஷ்காந்த். மேலும், சேட்டும் மரணமடைந்து விடுகிறார். இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் முனீஷ்காந்த், தனது நண்பர்களான குரைஷி, கோடங்கி வடிவேலு ஆகியோர் உதவியுடன் அந்த செக்கைத் தேடி அலைகிறார்.

செக்கைத் தொலைத்த விஷயம் விஜயலட்சுமிக்குத் தெரிந்தபின் அவர் தனது கணவரை என்ன செய்தார்? கடன் கொடுத்தவர்களை அவரால் சமாளிக்க முடிந்ததா? சேட் கொடுத்த செக் என்ன ஆனது? எங்கே போனது? அது மீண்டும் முனீஷ்காந்த் கைக்கு வந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் கார்ல் மார்க்ஸாக முனீஷ்காந்த் நடித்திருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர், இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார். ரொம்ப யதார்த்தமாக நடித்து, தன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகனின் மனைவியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார். வசதியாக வாழ வேண்டும் என்ற கனவுடன், கிடைத்த வேலைகளைச் செய்து காசு சம்பாதிக்கும் மிடில் கிளாஸ் பெண்மணியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சில காட்சிகளில் அவரது ஓவர் ஆக்டிங் உறுத்துகிறது.

நாயகனின் நண்பர்களாக குரைஷி, கோடங்கி வடிவேலு நடித்திருக்கிறார்கள். நாயகனுக்கு உதவும் கதாபாத்திரங்கள் என்றாலும், இவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக காமெடி வசனங்கள் கொடுத்து காட்சிகளை கலகலப்பாக்கியிருக்கலாம்.

நாயகனின் தந்தையாக, பொதுவுடைமை சித்தாந்தவாதியாக வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நல்ல கதாபாத்திரம். அந்த பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தாமல், வழக்கமான வில்லத்தனமான முகபாவங்களையும், வசன உச்சரிப்பையும் அவர் வெளிப்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

காளி வெங்கட், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், ராம்லால் சேட்டாக வரும் நபர் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். எளிய நடுத்தர வர்க்கக் குடும்ப வாழ்க்கையை வைத்து கம்யூனிசக் கருத்துகளை செறிவாக விதைத்திருக்கிறார். தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், காக்கைகள் போல் அதை பிறருக்கு பகிர்ந்தளித்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை என்ற கருத்தை பல குறியீடுகள் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, எளிமையான முறையில் அதை அனைத்து தரப்பினருக்கும் புரியவும் வைத்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தையும் கெட்டவராகக் காட்டாமல் ’எல்லோரும் நல்லவரே’ என்று காட்டியிருப்பது சிறப்பு. பாராட்டுகள்.

பிரணவ் முனிராஜின் இசையமைப்பு, சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, சான் லோகேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்துக்கு பலம்.

‘மிடில் கிளாஸ்’ – குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3.5/5