பார்வை: மேதகு

ஒரு வரலாறு நடந்து முடிந்த பிறகு அதன் மீது ஏறி நின்று தீர்ப்பு எழுதுவது எவருக்கும் எளிது. ஒரு புது வரலாறை, புது நம்பிக்கையை தோற்றுவிப்பதை விடவும் மிக மிக எளிது.

எந்த காலச்சூழலில் அத்தகைய வரலாறு எழுந்தது என்பதை புரிந்து கொள்ளலே அந்த வரலாற்றுக்கான நியாயத்தை புரிந்து கொள்ளும் வழியாகும். அந்த நியாயத்தை புரிய மறுக்கையில் அந்த வரலாறை புரிய மறுக்கிறோம். அதற்கான அரசியல் சூழலை புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

இத்தகைய மறுத்தல்களை கொண்டு நாம் கொண்டிருக்கும் சித்தாந்தங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறோம். தங்களுக்கு அந்த வரலாறுடன் இருந்த முரணை, அதற்கான இரு தரப்பு நியாயங்களை பேசாமல், ஒரு பக்கசார்பில் பேசி, கூராக்கி செப்பனிட்டு அவதூறுகள் கோர்த்து தாங்களே நியாயமானவர்கள், பரிசுத்தமானவர்கள் என புதுவகை அரசியலுக்குள் கரைத்துக் கொள்கிறோம்.

இஸ்ரேலியர்களுக்கு இத்தகைய எதிர் வரலாறாக பாலஸ்தீனம் இருக்கிறது. ஹிட்லருக்கு யூதர்கள் இருந்தனர். அமெரிக்காவுக்கு அரபு நாடுகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு ஈழம் இருக்கிறது.

சதாம் உசேன் மீது போர் தொடுத்து ஈராக்கை அழித்து அவரை பிடித்து வந்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அவர் சொன்னது ‘Iraq needed me’ என. அதை அகங்காரத்துக்குரிய கருத்தாக பார்க்க முடிந்தாலும் இன்றைய ஈராக், சதாம் உசேனின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

பிரபாகரனின் அரசியல்முறை தவறா சரியா என தீர்ப்பை எழுதுவதை காட்டிலும் பிரபாகரன் ஏன் ஈழத்துக்கு தேவைப்பட்டார் என்கிற கேள்வியுடன் அந்த வரலாற்றுச் சூழலை அணுகினால் மட்டுமே உண்மையை அடைய முடியும். அந்த உண்மையையும் உண்மையாய் தேடுவோர் மட்டுமே கண்டறிய முடியும்.

பிரபாகரன் ஏன் உருவாக வேண்டிய தேவை எழுந்தது என்கிற வரலாற்றை மேதகு படம் பேசுகிறது. குமரிக்கண்டம் முதலிய ஆர்வக்கோளாறான பிரசாரங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழர்களுக்கு இலங்கை அரசு என்னவாக இருந்தது என்கிற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள ஒற்றுமைகள் பளீரென புலப்படும். மதபீட ஆதிக்கமும் தரப்படுத்தும் கல்வி முறையும் குடியுரிமை மறுப்பும் மொழியுரிமை மறுப்பும் என இன்று நாம் பார்க்கக் கூடிய எல்லாமுமே இலங்கை வரலாற்றில் பொதிந்து இருந்ததை தெரிந்து கொள்ள முடியும்.

இலங்கை வரலாற்றையும் ஈழத்தின் தேவையையும் சரியான திசையில் புரிந்து கொள்ள மேதகு திரைப்படம் முதல் படி. இதற்கும் பல வகை எள்ளல்களும் அவதூறுகளும் வரலாம். எனினும் உண்மையாய் உண்மை அறிய விரும்புவோர் பார்த்து விடுங்கள்.

RAJASANGEETHAN