மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்

கலை & கான்செப்ட்: க்ளீம்
எழுத்து: ஜெயபூர்ணா தாஸ்
படத்தொகுப்பு: அஸ்வின் குமார் & அஜய் வர்மா
இசை: சாம் சி.எஸ்
திரைக்கதை & இயக்கம்: அஸ்வின் குமார்
கூடுதல் திரைக்கதை & வசனம்: அஸ்வின் குமார் & ருத்ரா பி.கோஷ்
ஒலி கலவை: கண்ணன் கண்பத் – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
தலைமை தொழில்நுட்ப அதிகாரி: சமய் மகாஜன்
சி.ஜி மேற்பார்வை: மகேஷ் குமார் மண்டல்
எஸ் எஃப் எக்ஸ் ஃபோலே: கரண் அர்ஜுன் சிங் – ஜஸ்ட் ஃபோலே ஆர்ட்
தயாரிப்பு: க்ளீம் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: ஷில்பா தவான் – குஷால் தேசாய் – சைதன்யா தேசாய்
வழங்கல்: ஹோம்பாலே ஃபிலிம்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
கற்பனையான புராணக் கதைகளை மையப்படுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
தற்போது விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்வதையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்வதையும் அனிமேஷன் திரைப்பட வடிவில் படைத்தளித்திருக்கிறார்கள்.
இதுவரை, கார்டூன் சேனல்களில் இது போன்ற புராணக் கதைகளை அனிமேஷன் வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது, இந்த ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படத்தை திரையரங்க வெளியீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

அசுரகுல சகோதரர்களான ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் விஷ்ணுவை அழிக்கத் துடிக்கிறார்கள். படத்தின் முதல் பாதியிலேயே வராக அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்கிறார் விஷ்ணு.
தனது சகோதரனை கொன்ற விஷ்ணுவை அழிக்க, கடும்தவம் புரிந்து, தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை பிரம்மனிடமிருந்து பெறுகிறார் ஹிரண்யகசிபு.
ஆனால், ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருப்பதால், அவனை வெறுக்கும் ஹிரண்யகசிபு, பல்வேறு வழிகளில் பிரகலாதனை கொல்ல முயற்சிகள் செய்கிறார். எனினும், அனைத்து கொலை முயற்சிகளிலும் பிரகலாதனை விஷ்ணு காப்பாற்றுகிறார்.
தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் ஹிரண்யகசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்து வதம் செய்கிறார். இது தான் இந்த அனிமேஷன் படத்தின் கதை.
விஷ்ணுவின் தசாவதாரத்தில் இந்த இரண்டு அவதாரங்களை மட்டும் இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார்கள்.
விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு சிறந்ததொரு அனிமேஷனில் உருவங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
அதுபோல, யுத்தம், ஹிரண்யகசிபுவின் சாம்ராஜ்யம் என அனைத்தையும் அனிமேஷன் ஃப்ரேமில் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த அனிமேஷன் உலகத்தை வடிவமைத்த விதமும், அவற்றின் வண்ணங்களும் 3D-யில் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
இந்த அனிமேஷன் உலகத்தை கட்டியெழுப்ப கிராபிக்ஸுக்கு பெரும் உழைப்பைச் செலுத்தி நல்லதொரு அவுட்புட்டையே கொடுத்திருக்கிறது படக்குழு.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்தனியாக பவர்ஃபுல் பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
விஷ்ணு, வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரமெடுக்கும் கதையைத் திரைப்பட வடிவிற்கேற்ப தேர்ந்த கதையாகக் கோர்த்திருக்கிறார்கள்.
இப்படியான புராணக் கதைகள் பற்றி பெரிதும் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும், இன்றைய ஜென்-சி பார்வையாளர்களுக்கும் புரியும் வகையில்தான் இந்த அனிமேஷன் படத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் குமார்.
இதை பக்திப்படம் என்று நினைக்காமல் புராண கட்டுக்கதைப் படம் என்று நினைத்துப் போய் பார்த்தால், ஓர் அதிரடி ஆக்ஷன் படத்தை ஜாலியாகப் பார்த்த மனநிறைவு ஏற்படும்!
ரேட்டிங்: 2.5/5