“திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க”: தலைவர்கள் கோரிக்கை!

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டர் சட்டத்தை விலக்கி உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தலைவர்கள் எடப்ஸ் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:.

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மற்றும் டைசன், இளமாறன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மே 21 அன்று இலங்கை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சம்பவத்தில் பலியான தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டத்தை அரசின் தடையை மீறி நடத்தியதாகவும் ஏற்கெனவே உள்ள வழக்குகளின் அடிப்படையிலும் திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடையை மீறி தமிழ் மக்களுக்காக ஒரு நினைவேந்தல் நடத்தியதால் குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது. தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரின் குரல்வளையை நசுக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாசிசத்திற்கு எதிரான கருத்துகளை ஊடகங்களின் வாயிலாக வலுவாக எடுத்துரைப்பவர் திருமுருகன் காந்தி. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளத் திராணி அற்றவர்களின் சூழ்ச்சியால் திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாசிச சக்திகளின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும் சிக்கியுள்ளது வருத்தத்திற்குரியது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜகவின் அழுத்தத்திற்கு ஏற்றவாறு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது திருமுருகன் கைது வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

எனவே, குண்டர் சட்டத்தை உடனே விலக்கிக் கொண்டு திருமுருகன், டைசன் மற்றும் இளமாறன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்திருப்பதோடு, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.