பாலாவின் டென்ஷனை கூட்டிய ரத்னகுமாரின் ‘குமுதம்’ பேட்டி – முழுமையாக!

“குற்றப்பரம்பரை’ படத்தை இயக்கும் பாரதிராஜாவும், அதன் கதாசிரியர் ரத்னகுமாரும் இதற்குமேல் என்னைப் பற்றி ஒரு வார்த்தை பேசினால்… அது அவர்களுக்கு நல்லது அல்ல. இது என் இறுதி எச்சரிக்கை” என்று காட்டமாகக் கூறியிருந்தார் இயக்குனர் பாலா. இந்த அளவுக்கு பாலாவின் டென்ஷனைக் கூட்ட இறுதிக் காரணமாக அமைந்தது, “கதை திருடி வேலா! வேடிக்கை பார்க்கும் பாலா” என்ற தலைப்பில் ‘குமுதம்’ வார இதழ் வெளியிட்ட ரத்னகுமாரின் பேட்டி. ரத்னகுமாரின் அந்த பேட்டி இங்கே முழுமையாக:

# # #

“குற்றப்பரம்பரை’ என் கதை. அதை பாலா இயக்குகிறார். அதற்கான ஸ்கிரிப்ட், ஆர்ட்டிஸ்ட் எல்லாம் முடிவாகி படம் எடுப்பதுதான் பாக்கி” என உறுதியான குரலில் நம்மிடம் வேலராமமூர்த்தி பேசியதைச் சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் கனவுப்படமான ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியரான இயக்குனர் ரத்னகுமார், “வேலராமமூர்த்தி எங்கள் கதையைத் திருடி, அதை பாலாவிடம் படமாக்க நினைக்கிறார். திருட்டுக்கதையை இயக்குபவரும் திருடன் தான். ‘குற்றப்பரம்பரை’ விவகாரத்தில் பாரதிராஜாவுக்கு துரோகம் செய்யும் பாலா மீது வழக்குத் தொடருவேன். இது யார் கதை என்று இந்த பாலா பொதுவிவாதத்தில் விவாதிக்கத் தயாரா? தமிழ் சினிமாவின் பிதாமகன் பாரதிராஜாவை நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்ல திராணியில்லாமல் வேலாவை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாலா. ஃபோர்ஜரி வேலாவைப் பற்றி விலாவாரியாக நான் சொல்லுகிறேன். ‘குற்றப்பரம்பரை’யின் கதாசிரியர் நானா? அவனா? என அனல் தெறிக்க பேச ஆரம்பித்தார்.

இயக்குனர் இமயத்தின் ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளேன். அவரோட ‘குற்றப்பரம்பரை’ லட்சியப் படத்திற்கும் நான்தான் கதாசிரியர். 91-ல் பாரதிராஜா சாரை சந்தித்தேன். அப்பதான் ‘குற்றப்பரம்பரை’ பற்றி முழுமையா பேசி முடிவு பண்ணிட்டோம். அதுக்கு முன்னாடி ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ படம் முடிச்சாச்சு. கே.பி.பிலிம்ஸ் பாலு படத்தை தயாரிக்கணும்னு ரெடியாகி, நடிகர் திலகம் சிவாஜி, சரத்குமார், அப்பா – மகன் கேரக்டருக்கு முடிவு பண்ணி, அவரும் ஓ.கே. சொல்லி அட்வான்ஸ் போட்டாச்சு.

எனக்கும் அட்வான்ஸ் கொடுத்தாங்க. ஆறு மாதம் டிஸ்கஷன் போயி ஸ்கிரிப்ட் ரெடியாச்சு. 1999வது வருஷம் செப்டம்பர் 14ஆம் தேதி சௌத் இந்தியன் ஃபிலிம் ரைட்டர்ஸ் அசோசியேஷன்ல ‘குற்றப்பரம்பரை’ டைட்டிலையும், 38 பக்க கதையையும் பதிவு பண்ணியாச்சு.

இசைஞானி இளையராஜா ஃபிலிம்சிட்டி ரூம் நம்பர் 6ல “குற்றப்பரம்பரையா… குற்றப்பரம்பரையா…”ன்னு ஒரு பாடல் கூட கம்போஸ் பண்ணிட்டாரு. கதை டிஸ்கஷன் நேரம் தான் சீவலப்பேரி பாண்டி கதையை எழுதின சௌந்திரபாண்டி இந்த வேலராமமூர்த்திய கூட்டிக்கிட்டு வந்தார், பாரதிராஜாகிட்ட அசிஸ்டண்டா சேர. இந்த வேலாவோட நடவடிக்கை பிடிக்காம, பேச்சு சரியில்லையின்னு கண்டிச்சு வெளியில அனுப்பிட்டாரு. ஒருவாரம் எங்களோட ‘குற்றப்பரம்பரை டிஸ்கஷன்ல இருந்தபோது ஸ்கிரிப்ட்ல இருந்த அப்பா – மகன் கேரக்டர், சில முக்கியமான கதைகளை திருட்டுத்தனமா அவர் நாவலா எழுதின ‘கூட்டாஞ்சோறு’ன்ற கற்பனை கதையில பயன்படுத்தி இருக்கார். இதுல மிகப் பெரிய ஃபோர்ஜரி நடந்திருக்கு.

பாரதிராஜாவின் கனவுப்படமான ‘குற்றப்பரம்பரை’யை 20 வருடமா கட்டிக் காத்த உழைப்பை – கதையைத் திருடி, நாவலாசிரியர்ன்னு சொல்லிக்கிட்டுத் திரியற கிரிமினல் வேலா திருடிவந்த கதையை இந்த கூறுகெட்ட பாலா அவரை நம்பி படம் எடுக்கிறேன் என்கிறார். தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மகான்களாக பாரதிராஜா, இளையராஜா, பாலசந்தர் இவர்களை மதித்து வருகிறோம். ‘அப்பா அப்பா’ன்னு பாரதிராஜாவை கூப்பிடுற இந்த பாலா அவருக்கே துரோகம் செய்யிறாரு.

இன்னைக்கும் இளமையோடு சுறுசுறுப்பா துடிப்போட உழைக்கிற இயக்குனர் இமயத்தை ‘சும்மா இருக்கிறார், வேலையத்தவரு’ன்னு துப்பு கெட்ட வேலாவை பேசவிட்டு, இந்த பாலா வாய் மூடிக்கிட்டு வேடிக்கை பார்க்கிறார். உண்மையிலேயே பிதாமகன்னா என்னான்னு தெரியுமா பாலாவுக்கு?

‘வேலையத்தவர், நாலு மாத நாய்க்குட்டிக்குத் தெரியும், அவருக்குத் தெரியாதா?’ என அவதூறா பேசின அவனை நீ தட்டிக்கேட்டு நாக்க வெட்டியிருந்தா, அவன் விரலை ஒடிச்சிருந்தா உன் காலில் விழுந்திருப்பேன். அதைச் செய்யாமல் இன்றுவரை பதில் பேசாமல் சும்மா இருந்தால் நீ பாரதிராஜாவை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் வேலராமமூர்த்தியின் பின்னாலிருந்து இயக்குபவராகத்தான் சொல்லுவேன். இந்த வேலராமமூர்த்தி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

‘என் கதைன்னு நாய்க்குத் தெரியும்’ என்கிறார். நாய்மொழி நாய்க்குத் தானே தெரியும். பாலாவுக்கு புரிஞ்சதுல ஆச்சரியமில்லை. எங்களுக்கெல்லாம் மனிதமொழி, மனித உணர்வுதான் தெரியும். ‘குற்றப்பரம்பரை’ என்ன பாரதிராஜாவுக்கு பரம்பரை சொத்தா என்கிறாயே? ஆமாம்! எங்கள் பரம்பரை தான் உயிர் தியாகம் செய்திருக்காங்க. எங்கள் பரம்பரையின் ஒவ்வொருத்தனுக்கும் வீரத்திற்கும், மான ரோஷத்திற்கும், இது பரம்பரை சொத்துதான். எங்கள் கதையைத் திருடி ‘குற்றப்பரம்பரை’ பெயரை பயன்படுத்தி, பப்ளிசிட்டி தேடி பணம் சம்பாதிக்க நீங்க ரெண்டு பேரும் கூட்டுச் சேர்ந்திருக்கீங்களே… முழுக்கதையை பதிவு பண்ணியிருக்கேன்.

பாலா! உன்னை ‘குற்றப்பரம்பரை’ படத்தை எடுக்க விடமாட்டேன். திருட்டுப் பொருளை வாங்கி விற்பவனும் திருடன் தான். குற்றப்பரம்பரைச் சட்டம் கிரிமினல் ரைட்ஸ் பற்றி ஒரு பக்கத்துல ரெண்டு பேரும் இங்கிலீசுல எழுதிட்டா நான் மெட்ராசுலயே இல்லை. யுனிவர்சிட்டி வேலையை விட்டுவிட்டு போயிடுறேன். குற்றப்பரம்பரை எடுக்க என்ன யோக்கியதை இருக்கு?

இயக்குனர் சங்கத்துல இருந்துக்கிட்டு இயக்குனர் இமயத்தை, அவரோட சினிமா வயசா இல்லாத, வாய்கொழுத்த ஒருவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் பாலாவே… இது நியாயமா? தமிழ் சினிமாவின் போற்றத்தக்க பிதாமகனை இழிவுபடுத்திப் பேசுவதை, அவரது கனவுப் படைப்பை களவாடுவதை வேடிக்கை பார்த்துவிட்டு சும்மா இருக்க மாட்டோம்” என கொந்தளிப்போடு பேசி முடித்தார் ரத்னகுமார்.

நன்றி: குமுதம்

Read previous post:
0a1n
“இனி ஒரு வார்த்தை பேசினால்…” – பாரதிராஜாவுக்கு பாலா இறுதி எச்சரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு

Close