“குரங்கு பொம்மை’ படம் சூப்பர்”: இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பாராட்டு!

நண்பர்களுக்கு வணக்கம்.

நேற்று (30.8.17) மாலை, நண்பரின் அழைப்பிற்காக ‘குரங்குபொம்மை’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி பார்க்க நேர்ந்தது.

இதுவரை எந்த திரைப்படத்தையும் பார்த்துவிட்டு என் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாதவன் நான். அதற்கு காரணம், எனக்குப் பிடித்த படைப்புகள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். எனக்குப் பிடிக்காத சில படைப்புகள் உங்களில் சிலருக்கு பிடித்திருக்கலாம். இருவரின் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும் என சொல்லமுடியதே…

இருந்தாலும், இந்த ‘குரங்குபொம்மை”யை பார்த்தவுடன், என்னை பாதித்ததால், இன்றே உங்களிடம் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது. எனவே இந்த பதிவு. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

“குரங்குபொம்மை” இந்த வருடத்தின் ஆகச் சிறந்த தமிழ் படைப்புகளில் ஒன்று. அறிமுக இயக்குனர் நித்திலன் நிச்சயம் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வருவார்.

நாம் இதுவரை திரையில் பார்க்காத நிறைய புதிய கதாபாத்திரங்களை இந்த “குரங்குபொம்மை”-ல் பார்க்கலாம். ஒரு வழிப்பறி திருடன், ஒரு சிலைதிருட்டுக் கும்பல், அந்த கும்பலின் தலைவனுக்கு விசுவாசமான ஒரு நேர்மையான முதியவர், அவரின் அன்புமகன், அவனுக்காக பார்த்த மணப்பெண்… என திரை முழுவதும் புத்தம்புதிய கதாபாத்திரங்கள். இவர்கள் அனைவரையும் மறக்கடிக்கும் குரங்கு படம் போட்ட ஒரு பை, அதில் மறைந்திருக்கும் ஒரு மர்மம்… என ஒரு புத்தம் புதிய திரைக்கதை. சூப்பர். மிரட்டி விட்டார்கள்.

குரங்குபொம்மையை திரையில் பார்க்கும் உங்களை இந்த படம் நிச்சயம் பாதிக்கும். தயவுசெய்து நண்பர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

படம் பார்த்துவிட்டு இந்த குரங்கு பொம்மையை பிடிக்காதவர்கள் என்னை மன்னித்தருள்க. அப்படி பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பார்கள் என்பது என் எண்ணம்.

ஒரு நல்ல திரைப்படம் பற்றிய என் கருத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எனவே தான் இவ்வளவு பெரிய பதிவு..

நன்றி.

என்றும் அன்புடன்
எஸ்.ஆர்.பிரபாகரன்

திரைப்பட இயக்குனர்