கூகுள் குட்டப்பா – விமர்சனம்

நடிப்பு: தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா மற்றும் பலர்

இயக்கம்: சபரி – சரவணன்

தயாரிப்பு: கே.எஸ்.ரவிக்குமார்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: அர்வி

மக்கள் தொடர்பு: யுவராஜ்

மலையாளத்தில் வெளியாகி, அமோக வரவேற்பையும், பல விருதுகளையும் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இப்படத்தின் தமிழ் ரீமேக் (மறுஉருவாக்கம்) தான் ‘கூகுள் குட்டப்பா’.

கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், மனைவியை இழந்த சுப்பிரமணி என்ற முதியவர் (கே.எஸ்.ரவிக்குமார்) வாழ்ந்துவருகிறார். இவருடைய மகன் ஆதித்யா (தர்ஷன்) ரோபோடிக்ஸ் பொறியியல் பட்டதாரி. வேலைக்காக வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால் தன் மகன் தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பும் சுப்பிரமணி, மகன் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கிறார்.

ஜெர்மனியில் வேலை கிடைத்ததும், ஒரு வழியாக அப்பாவை சமாதானப்படுத்தி அனுமதி பெற்று, ஜெர்மனி செல்கிறார் ஆதித்யா. இந்நிலையில் சுப்பிரமணிக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அப்பாவின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ஆதித்யா, அவரை கவனித்துக்கொள்வதற்காக, தான் வேலை செய்யும் நிறுவனம் தயாரித்து பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அனுப்பி வைக்கிறார்.

நவீன தொழில்நுட்பத்தை ஏற்காதவர் சுப்பிரமணி. மிக்ஸியைக் கூட பயன்படுத்தாதவர். அதனால் ரோபோவை ஏற்கவோ, அதனுடன் பழகவோ முதலில் மறுக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் ரோபோவின் அன்பில் கரைந்து, அதை தன் மகனாக பாவித்து, நெருங்கிப் பழகி வருகிறார்.

ரோபோவின் பரிசோதனைக் காலம் முடிந்த விட்டதால், அதை நிறுவன முதலாளி திரும்பக் கேட்க, சுப்பிரமணி திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால் ரோபோவை வாங்கிச் செல்ல ஆதித்யா சொந்த ஊருக்கு வருகிறார். இறுதியில் சுப்பிரமணி ரோபோவை திருப்பிக் கொடுத்தாரா, இல்லையா என்பது மீதிக்கதை.

கே.எஸ்,ரவிக்குமார் ஏற்றிருக்கும் சுப்பிரமணி என்ற முதியவர் கதாபாத்திரம் மிகவும் கனமான கதாபாத்திரம். சுப்ரமணி  எளிதில் உணர்ச்சி வசப்பட்டு எரிச்சலடையும் முதியவர்; சக மனிதர்களுடன் நன்றாகப் பழக மாட்டார். அதே நேரத்தில் தோழமைக்காக ஏங்குபவர். அப்படிப்பட்டவர், இடுப்பு உயர,  அன்பான ரோபோ அவரது வாழ்க்கையில் தோழமைக்கான வெற்றிடத்தை நிரப்பும்போது, அதைதனது சிறிய மகனைப் போலவே நடத்தத் தொடங்குகிறார். ரோபோவுக்கு புது ஆடைகள் தருகிறார், மழையில் நனைந்தால் தலையைத் துவட்டுகிறார். கோவிலில் விசேஷ பூஜை செய்கிறார். இத்தகைய கதாபாத்திரத்தில் கே.எஸ்,ரவிக்குமார் பின்னியெடுத்திருக்கிறார். கதை முழுவதும் அவரைச் சுற்றியே நிகழ்வதால் ஒற்றை ஆளாக படத்தை சிறப்பாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார். ஒரு நடிகராக இது அவருக்கு பேர் சொல்லும் சிறந்த படம் என்றால் அது மிகை இல்லை.

மகன் ஆதித்யாவாக வரும் தர்ஷன் பாத்திரத்துக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யோகிபாபுவின் காமெடி ரசிக்க வைக்கிறது. லாஸ்லியாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காட்சிகள் இல்லை.

இன்றைய சமூகத்தின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றான ‘முதுமையில் தனிமை’ என்ற பிரச்சனையை மையப்படுத்தி, அறிவியல் புனைக்கதையாக உருவான மலையாளப்படத்தை தமிழ் ரசிகர்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து இயக்கியிருக்கும் சபரி – சரவணன் ஆகியோருக்கு பாராட்டுகள். அவர்களுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரானும், ஒளிப்பதிவாளர் அர்வியில் நல்ல உறுதுணையாக பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

‘கூகுள் குட்டப்பா’ – கண்டிப்பா போய் பாரப்பா!

Read previous post:
0a1c
கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’

இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான 'போலாமா ஊர்கோலம்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில்

Close