கொடை – விமர்சனம்

நடிப்பு: கார்த்திக் சிங்கா, ரோபோ சங்கர், அனயா, எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் மற்றும் பலர்

இயக்கம்: ராஜா செல்வம்

ஒளிப்பதிவு: அர்ஜுன் கார்த்திக்

இசை: சுபாஷ் கவி

தயாரிப்பு: எஸ்எஸ் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

’கொடை’ என்றால் கொடைக்கானல் என்பதன் சுருக்கமாகவும் கொள்ளலாம்;  நன்கொடை என்றும் பொருள் கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இப்படத்துக்கு ‘கொடை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியையும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார் நாயகன் கார்த்திக் சிங்கா. அங்கு தீயணைப்பு துறையில் பணியாற்றும் நாயகி அனயாவை ஒருதலையாக காதலிக்கும் கார்த்திக் சிங்கா, தான் நடத்தும் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்.

நாயகி அனயாவின் தந்தை ஆனந்த் பாபு, கார்த்திக் சிங்காவின் ஆதரவற்ற இல்லத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை கொடுக்க, அந்த பணத்தை கார்த்திக் சிங்காவிடம் இருந்து அஜய் ரத்னத்தின் ஆட்கள் மோசடி செய்து பறித்துச் சென்றுவிடுகிறார்கள்.

இழந்த நன்கொடை பணத்தை மீட்க முடிவு செய்யும் கார்த்திக் சிங்கா, மோசடி செய்தவர்கள் வழியிலேயே சென்று அவர்கள் இதுவரை மோசடி செய்த அனைத்து பணத்தையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றி, பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு திருப்பிக் கொடுத்துவிட திட்டம் போடுகிறார்.

அந்த திட்டத்தின்படி அவர் என்ன செய்தார்? அதில் வெற்றி பெற்றாரா, இல்லையா?, அவருடைய காதல் வெற்றி பெற்றதா,இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கொடை’ படத்தின் மீதிக்கதை.

நாயகன் கார்த்திக் சிங்கா சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் தூள் பரத்தியிருக்கிறார். ஒருதலைக் காதலில் உருகுவது, அனாதைக் குழந்தைகள் மேல் அபரிமிதமான பாசம் காட்டுவது போன்ற எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நாயகி அனயா புதுமுகம். குடும்பப் பாங்கான முகம். அமைதியான அழகு. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கிறார்.

நாயகனின் நண்பனாக படம் முழுக்க வரும் ரோபோசங்கருக்கு சிரிக்க வைக்கும் வேடம்; சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் அஜய்ரத்தினம், வேடத்தைச் சிறப்பாகச் செய்ய மெனக்கெட்டிருக்கிறார்.

எம்எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்கமுத்து, கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா உள்ளிட்டோர் படத்தில் இருக்கிறார்கள்.

அர்ஜூனன் கார்த்திக் ஒளிப்பதிவு சுமார். சுபாஷ்கவியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை ஓ.கே. ரகம்..

ராஜா செல்வம் எழுதி இயக்கியிருக்கிறார். திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. காட்சிகளில் மேடை நாடகத்தனமும், அமெச்சூர்தனமும் அதிகம் இருப்பதால் அலுப்பு ஏற்படுகிறது.

’கொடை’ – ஒருமுறை பார்க்கலாம்!