‘கதகளி’ விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் மீனவர் சங்க தலைவராக இருக்கும் மதுசூதனன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்வதுடன், மீன்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் தொழிலும் செய்கிறார். இவருக்கு உறுதுணையாக இரண்டு மச்சான்கள் இருந்து வருகிறார்கள். மதுசூதனனின் ரவுடித்தனத்தால் ஊரில் அவருக்கு ஏகப்பட்ட எதிரிகள். அவர்களில், விஷால் குடும்பமும் ஒன்று.

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் விஷாலுக்கும் கேத்தரின் தெரசாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு பத்திரிகை வைத்து வருகிறார் விஷால். இந்த நண்பர்களில் ஒருவர், மதுசூதனனின் அடியாள். அவரை விஷால் கண்டித்துவிட்டு செல்கிறார்.

கேத்தரின் தெரசாவுக்கு திருமண புடவை வாங்குவதற்காக சென்னைக்கு செல்கிறார் விஷால். அப்போது, கடலூரில் இருக்கும் மதுசூதனனை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொல்கிறது. இதனால் கடலூரில் கலவரம் ஏற்படுகிறது. இந்த செய்தியை விஷாலின் அண்ணன் மைம் கோபி விஷாலுக்கு கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியடையும் விஷால், மதுசூதனிடம் வேலை செய்யும் நண்பருக்கு போன் செய்து, பத்திரமாக இருக்கும்படி அறிவுரை கூறுகிறார். இதைக் கேட்ட நண்பரோ, விஷால் மீது சந்தேகப்பட்டு, அவர் குடும்பப் பகை காரணமாக மதுசூதனனை கொலை செய்தார் என்று போலீசில் புகார் அளிக்கிறார்.

போலீஸ் விசாரணைக்காக விஷால் சென்னையில் இருந்து புறப்பட்டு வருகிறார். வழியில், மதுசூதனனின் அடியாட்கள் விஷாலை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இறுதியில், மதுசூதனனின் அடியாட்களிடம் இருந்து விஷால் தப்பித்தாரா? உண்மையான கொலையாளியை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதே மீதிக்கதை.

கதாநாயகன் விஷால், தனக்கே உரித்தான பாணியில் சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். உயிருக்கு பயப்படும் காட்சிகளில் அதிக பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கமான ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.

நாயகியான கேத்தரின் தெரசா முந்தைய படத்தைவிட இந்த படத்தில் உடல் எடையை கூட்டி குண்டாகியிருக்கிறார். இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இவருக்கும் விஷாலுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

விஷாலுக்கு அண்ணனாக வரும் மைம் கோபி, பாசமிகு அண்ணனாக வாழ்ந்திருக்கிறார். விஷாலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பரிதவிக்கும்போது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் மதுசூதனன் சிரித்து சிரித்து பயமுறுத்தியிருக்கிறார். முதல் பாதியில் மட்டுமே வந்தாலும், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

தன்னுடைய வழக்கமான கதைகளத்தில் இருந்து மாறுபட்டு ஆக்‌ஷன் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். விறுவிறுப்பான இரண்டாம் பாதி திரைக்கதை, படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை நகர்கிறது.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதியில் இடம் பெறும் காட்சிகள் இருட்டிலேயே அமைந்திருக்கின்றன. அதை அவரது கேமரா கண்கள் அழகாக படம் பிடித்திருக்கின்றன. ஆதியின் இசை பெரிதாக எடுபடவில்லை. இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாத குறையைப் போக்க, பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘கதகளி’ – விஷால்களி!

Read previous post:
gethu-review1
‘கெத்து’ விமர்சனம்

பணத்திற்காக ஒரு இந்திய விஞ்ஞானியை கொலை செய்யும் பணி வில்லன் விக்ராந்துக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக அவர் தமிழ்நாட்டில் உள்ள குமிளி பகுதிக்கு செல்கிறார். குமிளியில் நூலகம் வைத்திருக்கும்

Close