“தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் விருதை வாங்க மாட்டேன்”: விஜய் சேதுபதி அதிரடி!

“தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு எனக்கு தேசிய விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன்” என்று  நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாய் அறிவித்துள்ளார். தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. வருகிற 29ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

k5

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜய் சேதுபதி பேசியதாவது:

மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும் முடிவும் அன்பு தான். முன்பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும்போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரமும் கூட. அதை அழகாக சொல்லியிருப்பது தான் ‘கருப்பன்’. என் மனைவியாக தான்யா மிக அழகாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ‘கருப்பன்’ என்ற தலைப்பிலிருந்து படத்தினுள் பேசப்பட்டிருக்கும் விஷயம் அனைத்துமே நம் மண் சார்ந்து மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய படம். விழாக்கால விடுமுறையில் வெளியாகும் எனது முதல் படம் ‘கருப்பன்’

எதார்த்தமான படங்களை விட கமர்ஷியல் படங்களில் நடிப்பது கடினம். 10 பேரை அடிக்கும்போது வரும் முகபாவனை மிகவும் கடினமானது. எதார்த்தமாக நடிப்பது மிகவும் எளிது. கமர்ஷியல் படங்களை தரம் பிரித்துப் பார்ப்பதில் உடன்பாடில்லை. வசூல் ரீதியாக எந்தப் படங்கள் எல்லாம் மக்களிடையே வரவேற்பைப் பெறுகிறதோ, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கிறதோ அவை அனைத்துமே கமர்ஷியல் படங்கள் தான்.

என்னிடம் வரும் கதை சுவாரசியமாக சொல்லப்பட்டு இருக்கிறதா என்று தான் பார்க்கிறேன். நடிகருக்காக மட்டுமே எந்தொரு படமும் ஓடாது என்பதை முழுமையாக நம்புகிறேன். முதல் நாள் முதல் காட்சி முதல் 10 நிமிடங்கள் மட்டுமே நடிகருக்காக இருக்கும், அதற்குப் பிறகு கதை என்ன சொல்கிறது என்பதற்குள் போய்விடுவார்கள். அந்த வேலையை இயக்குநர் பன்னீர்செல்வம் இப்படத்தில் அருமையாக சொல்லியிருக்கிறார்.

ஜல்லிகட்டைப் பற்றி பொதுமக்களே நிறைய பேசியிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. அதைப் பற்றி படத்தில் எதையும் பேசவில்லை. அப்போராட்டத்திற்கு நன்றி மட்டுமே தெரிவித்திருக்கிறோம்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு எனக்கு தேசிய விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன். ஏனென்றால் நாம் நசுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம், நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுவதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.