ராகவா லாரன்ஸை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ராகவா லாரன்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘இறைவி’ படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது மும்முரமாக இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. விஜய்யிடம் போய் கதை கூறி இருப்பதால், அவரை இயக்குவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, அடுத்ததாக லாரன்ஸை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க இருப்பதாகவும், இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகும் என்றும் தெரிவித்தார்கள்.