பிக் பாஸ்: கமல் நடத்திய விசாரணை ‘ரஷோமான்’ படம் பார்ப்பது போல் இருந்தது!

பிக்பாஸ் – 22.07.2017

“ஹலோ.. பிரபா ஒயின்ஸா? எப்ப சார் கடையைத் திறப்பீங்க?” என்று எட்டரை மணிக்காக காத்திருந்தது உண்மைதான். ஜூலிக்கு அது ஏழரையானதுதான் இன்றைய உண்மையான மகிழ்ச்சி.

கமல்ஹாசனின் ஜீன்களில் வழக்கறிஞரின் கூறுகள் உள்ளன என்பது வெளிப்படை. அவருடைய தந்தை சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். அண்ணன் சாருஹாசனும். எனவே ஒரு திறமையான வழக்கறிஞரின் விசாரணை போல, வாழைப்பழத்தில் மெல்ல மெல்ல ஊசி ஏற்றுவது போல வீட்டு உறுப்பினர்களிடம் போட்டு வாங்கியது நல்ல டெக்னிக். ஒருவகையில் ‘ரஷோமான்’ திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது. ஆனால், ஆண்டவர் தன் தீர்ப்பை தருவதற்கு நீண்ட நேரம் இழுத்தது எரிச்சல். பார்வையாளர்களின் உணர்வுகளை வணிகமாக சுரண்டுகிறோம் என்கிற அநீதி ஒரு திறமையான வழக்கறிஞருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? வேறு வழியில்லை. டிஆர்.பி கட்டாயங்கள். புரிந்து கொள்ள முடிகிறது. நாமும் விரும்பிதானே பலியாகிறோம்!

***

கமல் சுற்றிச் சுற்றி கார்னர் செய்வது, தமக்கு பின்னால் ஒரு பெரிய ஆப்பு வைப்பதற்கான சதி என்கிற விஷயம் அங்கிருந்த ஒருவருக்குமே புரியாமல் பள்ளிக்கூட பிள்ளைகள் போல் உற்சாகமாக ஓவியாவைப் பற்றி கோள் மூட்டியது நல்ல காமெடி.

சக்தியின் ஓவர் ஆக்டிங்கை ‘அழுமூஞ்சி திருடன்’ ன்னு அந்தப் பாத்திரம் இல்லையே எனும்போது, கிரேசி மோகனுடனான கமலின் பல வருட பழக்கம் வீண்போகவில்லை என்று தோன்றியது. கிரேசியின் வாசனை. மட்டுமல்லாமல், கமலே நல்ல நகைச்சுவையுணர்வு உள்ளவர்தான்.

குடும்பத்தைப் பிரிந்தது தொடர்பாக சிநேகன் உருக்கமுடன் சொன்னபோது, கமலும் அதை வழிமொழிந்தது நெகிழ்ச்சி. சிநேகன் மீது அவ்வப்போது பிரியமும் வந்துதான் போகிறது.

“நீ ஒரு ஃபேக்” என்று முன்பு ஆரத்தி சொன்னபோது அத்தனை கோபப்பட்ட ஜூலி, அதே விஷயத்தை காயத்ரியும், சிநேகனும், நமீதாவும் சொல்கிறபோது இளிப்புடன் ஆமோதித்ததை எப்படி புரிந்து கொள்வது என தெரியவில்லை. ஆபாசம். அடிமையாக இருப்பதுகூட அவமானம் இல்லை. ஆனால், தான் அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமல் இருப்பது உச்சக்கட்ட அறியாமை.

***

அங்கு நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் காமிராவில் பதிவாகியது, பதிவாகிக் கொண்டிருக்கிறது என்கிற அடிப்படை விஷயத்தை உணராமல் அல்லது உணரும்படியான பிரக்ஞையோடு இல்லாமல், “அதாவது, என்ன நடந்துன்னா…” என்று வாய்மொழியாக ரீப்ளே செய்வது அபத்தம் என்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. ஓவியா மட்டுமே அது சார்ந்த பிரக்ஞையோடு இருக்கிறார். ‘”காமிராவில் இருக்கும் பாருங்க.”

‘பன்னி, ‘funny’ என்று வார்த்தைகளில் விளையாடினார் கமல்.

ஜூலியின் அசிங்கமான டிராமா வெளிப்பட்டபோது, ஓவியா கோபத்தில் எழுந்து கத்தியது ஒருவகையில் சபை நாகரிகம் மீறியது என்றாலும், செய்யாத தவறுக்காக அதுவரை அத்தனை உளைச்சலை சகித்துக் கொண்டது மீறிய ஆசுவாசமும், சுமந்த பழியும் விலகிய ஒரு உச்சக்கட்ட உணர்வு என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோவின் வழியாக குட்டு அம்பலப்பட்டதும் ஆடு திருடிய கள்ளன்கள் மாதிரி வேறு வழியின்றி அனைவரும் ஓவியாவின் பக்கம் சாய, அப்போதும் ஜூலியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் சொன்ன பொய்யை உண்மை என்றே நம்பும் மனவிளையாட்டு என்று கமல் சொன்னது இதைத்தான். hallucination. ஒருவகையில் ஜூலியைப் பார்க்க பாவமாகவே இருக்கிறது. உச்சக்கட்ட தண்டனை.

ஓர் அப்பாவி சிறையில் தள்ளப்படும்போது முதலில் திணறி, பின்பு அங்கு அதிக பலமுள்ளவனிடம் அடிமையாகி விடுவான். பாதுகாப்பு உணர்வு. ஜூலியின் நிலை அதுதான். ஆர்த்தியின் வியூகத்தை உடைக்க, காயத்ரியிடம் சரண் அடைந்து பின்பு, அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது பரிதாபம். ‘சாரி .. ஓவியா.. அன்னிக்கு நடந்த குழப்பத்துல ஏதோ உளறிட்டேன்’ என்றிருந்தால் கூட அவருடைய பிம்பம் இத்தனை சேதாரம் அடைந்திருக்காது.

***

ஓவியாவின் அந்த தன்னம்பிக்கையும் உண்மையின்பால் கொண்டிருந்த அசாதாரணமான நம்பிக்கையும்… அவரது க்யூட்டான முகபாவங்களும்… என்ன சொல்ல.. லவ் யூ டார்லிங். அதிலும் F வார்த்தையை இனி Fish என்று சொல்கிறேன் என்றதெல்லாம் ‘சாரு’த்தனமான நக்கல். தன் தவறுகளை நேர்மையாக ஒப்புக்கொண்டதும் பாராட்டத்தக்கது.

***

ஜூலியை மடக்குவதற்காக இத்தனை நீண்ட திருவிளையாடலை நடத்திய கமல்ஹாசனார், காயத்ரியை அநாயசமாக தாண்டிச் சென்றதின் காரணம் ‘காயத்ரி மந்திரமா?’ ச்சே.. கமல் பகுத்தறிவுவாதி. சாதி நம்பிக்கையில்லாதவர்’. எனில் பொட்டில் அடித்தது போல மிக நேரடியாக அவரால் ஏன் காயத்ரியையும் நமீதாவையும் கேள்வி கேட்க முடியவில்லை? சினிமாக்கார பாசமா?

இந்த படிச்சவங்க கிட்ட இதான் பிரச்சினை. புத்திசாலித்தனமா சுத்தி சுத்தி பேசுவான். ஆனா இதே கிராமத்தானாக இருந்தால் ‘இதோ பாருங்க மூதேவிங்களா.. நீங்க செய்யறது அக்குருமம். உங்க குலத்திற்கே விளங்காது’ என்றிருப்பான்.

கமல் கனவான் வேடம் போட வேண்டுமென்று முடிவு செய்து விட்டதால் வார்த்தைகளில் பொடி வைத்துப் பேசினாரே ஒழிய, சக்தியிடம் அவரது தவறை உணர்த்திய அளவிற்கு கூட காயத்ரி குழுவிடம் செல்லவில்லை.

வில்லன்கள் டீம் பலமாக இருந்தால்தான் ஆட்டம் இன்னமும் சூடு பிடிக்கும் என்று அவருக்கு ‘அறிவுறுத்தப்பட்டதோ’ என்னமோ? மக்களின் பிரதிநிதியை விட ‘பிக்பாஸ்’ செல்வாக்கானவர்தானே?

நாளைக்கான பிரமொவில் காயத்ரி குழு மகிழ்ச்சியாக கூக்குரலிடுவதின் மூலம், நாமினேஷனில் எவரும் வெளியேறவில்லை என்று யூகிக்க முடிகிறது. ஒருவேளை கணேஷ் வெளியேறினார் என்றால் அது வாக்குகளின் விளைவு அல்ல. பிக்பாஸின் திட்டமிட்ட விளைவு. நமீதாவின் வில்லித்தனம் அவர்களுக்கு இன்னமும் தேவைப்படுகிறதென பொருள்.

சகலம் கிருஷ்ணார்ப்பனம்.

SURESH KANNAN

 ***          ***      ***         ***         ***

பிக்பாஸ் குறித்த முந்தைய பதிவில், எழுத திட்டமிட்டிருந்து, நினைவுப் பிசகால் சில விஷயங்களை குறிப்பிட மறந்து விட்டேன் என்பதால் இந்தப் பதிவு. என்னளவில் அதிலொன்று மிக முக்கியமானது.

இதன் வணிகத் தூண்டலுக்கு பலியாகிக்கொண்டிருக்கிறேன் என்கிற தன்னுணர்வு இருந்தாலும், இந்நிகழ்ச்சி எனக்கு பல பாடங்களை, அக மாற்றங்களை நடத்துகிறது. எனவேதான் இதைப் பிடிவாதமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

**

இந்த நிகழ்ச்சியில் பொதுவாக வீட்டு உறுப்பினர்கள் மற்ற நேரங்களில் தங்களிடையே தாறுமாறாக பிராண்டிக் கொள்வார்கள். ஆனால் சனி, ஞாயிறு அன்று மட்டும் கமல் வந்தவுடன் வாத்தியாரைப் பார்த்த, ‘ஹோம் ஒர்க் செய்யாத’ மாணவர்கள் மாதிரி எல்லாவற்றிற்கும் இளித்து மழுப்புவார்கள். “சண்டையா.. அது எங்க சார் இருக்கு, இல்லியே..” என்று 36 கேமராக்களின் உண்மையை விழுங்க நினைப்பார்கள். (“சனி, ஞாயிறுதான் சந்தோஷம்” என்று பரணி கூறியதையும் நினைவில் கொள்ளலாம்)

ஆனால், நேற்று இதில் முக்கியமானதொரு விதிவிலக்கான அசைவு நடந்தது. மற்ற நேரங்களில் எல்லாம், மற்றவர்களின் ராவடிகளை பெரிதும் சகித்துக் கடந்து கொண்டிருந்த ஓவியா, வீடியோ சாட்சியத்தின் மூலம் ஜூலியின் அற்பத்தனம் வெளிப்பட்ட பின், பொதுச்சபை என்றும் பாராமல், கமலின் முன்பே, ஜூலியை நோக்கி ஆபாச வசையை வீசினார்.

இதிலுள்ள ‘நியாயமான முரணை’ நாம் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நிரபராதியான ஒருவனை அறையில் தள்ளி விட்டு பல சித்திரவதைகள் செய்த பிறகு, ஒரு நாள் கதவைத் திறந்து விட்டு, ‘யப்பா.. உன் மேல தப்பில்லையாம். நீ கிளம்பு’ என்றால் அவன் வெறியுடன் உங்கள் குரல்வளையை நோக்கி பாய்வானா, மாட்டானா?

‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில், ஒரு பின்னணியை சொன்ன பிறகு மாதவனை நோக்கி விஜய்சேதுபதி கேட்பார். ‘குற்றம் செய்தவனா, அதைச் செய்ய தூண்டியவனா, யார் சார் பெரிய குற்றவாளி, யாரைப் போடணும்.. சொல்லுங்க சார்”

இந்த நோக்கில்தான் ஓவியாவின் அந்த ஆவேசத்தை புரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் சகித்துக்கொண்டாலும் “தூண்டப்பட்ட காரணத்திலேயே” சில சறுக்கல்களில் அவர் வீழ்ந்திருந்தாலும், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு மிக நேர்மையுடன் ஒப்புக்கொண்டு புன்னகையுடன் தம்மை இனி திருத்திக் கொண்டதாக அறிவித்ததற்குப் பாராட்டு.

நிரபராதி என்று பொதுவில் தெரிந்தவுடன் சுயபச்சாதாபத்தில் மற்றவர்களாக இருந்தால் அழுதிருப்பார்கள். பள்ளி மாணவனாக எனக்கும் இது போன்ற கசப்பானதொரு அனுபவம் உண்டு. ஆனால் அதை திடமாக எதிர்கொண்ட ஓவியாவின் மனஉறுதி வியக்க வைக்கிறது.

**

‘ஒரு ஆளு பிடிச்சிப் போயிட்டா அப்படியே தலையில வெச்சுக் கொண்டாடுவீங்களே… ஓவியா மேல தப்பே இல்லையா?’ என்றொரு நண்பர் கேட்டார். ஆம், இருக்கிறது. ஓவியா பத்தரை மாற்றுத் தங்கமில்லைதான். செம்புகளின் கலப்பும் இருக்கிற தங்கம்தான்.

இந்த விளையாட்டின் அடிப்படையான விஷயமே ‘இணக்கத்துடன் கூடி வாழ்தல்’. தமக்கு தரப்பட்ட பணிகளை முறையாகச் செய்யாமல் டபாய்ப்பது, மந்தையிலிருந்து விலகி குழுவின் ஒருங்கிண்மையைக் கலைப்பது, ஒன்று கூடி முடிவெடுத்த பிறகு தலைவரின் உத்தரவை மீறுவது போன்றவை ஓவியாவின் பலவீனங்கள். இதனாலேயே ‘Hardly Working’ என்கிற விருதை முன்பு வாங்கினார்.

ஒரு குழுவை கட்டி மேய்க்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இதன் சிரமம் தெரியும். கூட்டத்தில் ஒரு சண்டி மாடு இருந்தால் கூட போதும். அதன் காரணமாகவே ஒழுங்கின்மைகள் உருவாகும்.

ஓவியாவின் இந்த பலவீனங்களையும் மீறி ஏன் அவர் இத்தனை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறார்? ஒரு சிறிய கோட்டின் பக்கத்தில் பெரிய கோடு போட்டவுடன் முன்னது இன்னமும் சிறியதாகி விடுகிற அதே கோட்பாடுதான்.

அங்கு மற்றவர்கள் அத்தனை கீழ்மைகளுடன் நடந்து கொள்கிறார்கள். அந்தக் கீழ்மைகள் நிறைந்திருக்கும் இருளின் நடுவே, ஓவியாவின் அடிப்படையான நேர்மையும் புன்னகையும், அளவுக்கு அதிகமான பிரகாசத்துடன் வெளிப்படுகிறது.. வில்லன்களின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக நாயகர்களின் மீதான அன்பு நமக்கு தன்னிச்சையாக பெருகியோடும்.

பெருந்திரளால் ஓவியா இத்தனை அன்புடன் கொண்டாடப்படுவதற்கு இது முக்கியமான காரணம் என நினைக்கிறேன். அவருக்கு நேர்கிற உளைச்சல்களுக்கு தார்மீகமான ஆதரவை தர நினைக்கிறார்கள்.

மற்றபடி அவருமே வேறு சில சாதாரணத்துவங்களுடன் இருக்கக்கூடும். மனிதர்தானே.

**

இன்னும் சில விஷயங்கள், சுருக்கமாக.

ஜூலி மிக எளிய டார்க்கெட். ஈசியாகவே அடித்திருக்கலாம். இதற்காக அத்தனை நேரம் சுற்றி சுற்றி வந்த கமல், வீடியோ ஆதாரமெல்லாம் திரட்டிய கமல், காயத்ரியின் கீழ்மைகளை அத்தனை எளிதில் கடந்தது உறுத்தலாகவே இருந்தது. தூங்கும் நேரத்தில் நடந்த அந்தப் பகுதியை மட்டும் கூட ஒளிபரப்பியிருக்கலாம்.

‘முகம் செத்துப் போனது’ என்றொரு சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன். ஜூலியின் முகத்தில் நேற்று அதைப் பார்த்தேன். காயத்ரியின் ராவடி தொடர்பான வீடியோப் பகுதி ஒளிபரப்பாகியிருந்தால் ஜூலியின் முகத்தை விடவும் அதிகமாக காயத்ரியின் முகம் செத்திருக்கும் தன்னுடைய ‘பிம்பம்’ குறித்த கவலை அவருக்கு அதிகம் உண்டு.

ஞாயிறு அன்று ஒளிபரப்பாவதில் காயத்ரிகளை நோக்கிய கூர்மையான அம்பு ஏதேனும் வீசப்படலாம் என க்காத்திருக்கிறேன்.

**

இதற்கு நிகரான அல்லது இதற்கும் மேலான பிரச்சினை பரணியுடையது. எல்லோராலும் தனிமைப்படுத்தப்பட்டு, மன உளைச்சல் அதிகமாகி சுவரேறி குதிக்கும் அளவிற்கு சென்று விட்டார். அந்தப் பிரச்சினையை பரணியை மட்டுமே அமர்த்தி பேசி விட்டு அதை சபை விசாரணை செய்யாத தன்மையை என்னவென்பது?

ஆண்களை விடவும் பெண்களுக்கே மனவுறுதி அதிகம் என்று சொல்லப்படுவது பரணி x ஓவியா விஷயத்தில் மறுபடி நிரூபணமாகிறது. இந்த விஷயத்தில் பெண்கள் கிரேட்.

காயத்ரி கும்பலை நேரடியாக கேள்வி கேட்காவிட்டாலும், தனது பிரத்யேகமான பாணியில் பொடி வைத்து நிறையவே கேட்டார். நுண்ணுணர்வுடன் காயத்ரி கும்பலுக்கு அது புரிந்திருந்தால் வீடியோ ஆதாரம் இல்லாமலே தங்கள் தவறை உணர்ந்திருப்பார்கள்.

அதிலொன்று முக்கியமானது. ‘பெண்களின் நடுவே கூட பாதுகாப்பை உணராத ஓவியா.. ஆண்களின் நடுவில் பாதுகாப்பாக உணர்ந்தார்:” (காயத்ரி கும்பலை சரியான வார்த்தைகளால் இதை விடவும் காத்திரமாக விமர்சித்துவிட முடியாது. அவர்களுக்கு இது புரிந்ததா என தெரியவில்லை.)

***

‘இனிமேலாவது யார் பேச்சையும் கேட்காம.. நாமா தெளிஞ்சு புரிஞ்சுக்கணும்’னு கத்துக்கிட்டேன் என்ற ரைசாவின் குரல் கான்வென்ட் மாணவியுடையது.

இறுதியாக –

கமலை விடவும் திறமையாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு வேறெந்த நடிகராவது இருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம். சில இழுவைகளைத் தவிர, அரசியல்களைத் தவிர. இதை நடத்துவதற்கு நுண்ணுணர்வும் சமயோசிதமும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பிரதிபலிக்கும் தன்மையும் நிறைய இருக்க வேண்டும். அந்த நோக்கில் கமல் ஜமாய்க்கிறார்.

மிக குறிப்பாக தன் சறுக்கலை ஜூலி பிடிவாதமாக நியாயப்படுத்திக் கொண்டிருந்தபோது ஆண்டவர் கொடுத்த அந்த ரியாக்ஷன்… சான்ஸே இல்ல….

SURESH KANNAN