கள்ளன் – விமர்சனம்

நடிப்பு: கரு.பழனியப்பன், நிகிதா, நமோ நாராயணன், மாயா, சௌந்தரராஜா மற்றும் பலர்

இயக்கம்: சந்திரா தங்கராஜ்

தயாரிப்பு: எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ வி.மதியழகன்

இசை: கே

ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன்

தென்மாவட்ட மலைகிராமம் ஒன்றில் வசிக்கும் கரு பழனியப்பன், காட்டு விலங்குகளை தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகிறார். காட்டு விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து கடுமை காட்டுவதால், என்ன செய்வது என்று தெரியாத கரு பழனியப்பன், கள்ள துப்பாக்கி தயார் செய்து விற்கிறார்.

ஒருகட்டத்தில் அது பிரச்சனையாக மாறுவதால், அவரும் அவரது நண்பர்களும் கூட்டாக திருட ஆரம்பிக்கிறார்கள். திருட்டில் ஈடுபடும்போது, எதிர்பாராதவிதமாக கொலை நடக்கிறது. போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாக இருக்கையில், நாயகி நிகிதாவை சந்திக்கிறார் கரு பழனியப்பன். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இந்நிலையில் கரு பழனியப்பனையும், அவரது இரு கூட்டாளிகளையும் போலீஸ் கைது செய்து சிறையிலடைக்கிறது. கரு பழனியப்பன் முதல் குற்றவாளி ஆக்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. காதலிக்காகவும், காதலியுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் ஜெயிலில் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார் கரு பழனியப்பன்.

சிறையில் கிடைத்த புதுக்கூட்டாளியான நமோ நாராயணன், இவரது தம்பி சௌந்தரராஜா, இவர்களின் இரு கூட்டாளிகள் ஆகியோரோடு கரு பழனியப்பன், அவரது இரு கூட்டாளிகள் என 7 பேர் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள்.

இந்த 7 பேரும் சேர்ந்து கூட்டாக மீண்டும் கொள்ளையடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள். விளைவு என்ன? கரு பழனியப்பன் காதலி நிகிதாவுடன் இணைந்து வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன், முகபாவனைகள் ஏதும் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகியாக வரும் நிகிதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நமோ நாராயணின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சவுந்தரராஜா, அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மாயாவின் எதிர்பாராத நடிப்பு மிரள வைக்கிறது.

எண்பதுகளின் பிற்பாதி காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் சந்திரா தங்கராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களை தவிர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.

கே இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. எம்.எஸ்.பிரபு, ஜகதீஸ்வரன் ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.

‘கள்ளன்’ – ரசிக்கலாம்!