கலகத் தலைவன் – விமர்சனம்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின்,  நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் மற்றும் பலர்

இயக்கம்: மகிழ் திருமேனி

ஒளிப்பதிவு: தில்ராஜ்

இசை: ஸ்ரீகாந்த் தேவா, ஆரோல் கோரலி

தயாரிப்பு: ’ரெட்ஜெயண்ட் மூவிஸ்’ உதயநிதி ஸ்டாலின்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

0a1dஉழைக்கும் மக்கள் உள்ளிட்ட வெகுமக்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவம் ஆரம்பத்தில் வணிக முதலாளித்துவமாக இருந்து, பின்னர் ஆலை முதலாளித்துவம், நிதி முதலாளித்துவம் என வளர்ந்து, தற்போது கார்ப்பரேட் முதலாளித்துவம் என்ற வடிவத்தை அடைந்திருக்கிறது. இன்று சமூக பிரக்ஞை உள்ள தரமான கலைப்படைப்பு என்பது வெகுமக்களுக்கு ஆதரவாய் நின்று, மோசமான கார்ப்பரேட் நிறுவனங்களைத் தோலுரித்து அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அத்தகைய தரமான, சமூக பிரக்ஞை உள்ள கலைப்படைப்பாக வெளிவந்திருக்கிறது உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் ‘கலகத் தலைவன்’.

ஃபரிதாபாத்தில் உள்ள ’வஜ்ரா’ என்ற கார்ப்பரேட் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில், குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் செல்லக்கூடிய (அதாவது அதிக மைலேஜ் தரக்கூடிய) புதிய வகை கனரக வாகனம் புதிதாக உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அந்த வாகனம் விற்பனைக்காக சந்தைக்கு வருவதற்கு முன்பே, அந்த வாகனம் வெளியேற்றும் புகையில்  காற்றுமாசு அதிகம் இருக்கும் என்ற உண்மை வஜ்ரா நிறுவனத்தின் முதலாளிக்கு தெரியவருகிறது. இந்த உண்மை வெளியே தெரிந்தால் அரசின் அனுமதி கிடைக்காது என்பதால், அந்த உண்மையை மறைக்க வஜ்ரா நிறுவனத்தின் முதலாளி முயலுகிறார். ஆனாலும் விஷயம் அவரையும் மீறி வெளியே கசிந்து, பரபரப்பான செய்தியாக ஊடகங்களில் வெளியாகிறது. விளைவாக, அந்த கனரக வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது.

இதனால் கோபமடைந்த வஜ்ரா நிறுவனத்தின் முதலாளி, அந்த ரகசியம் எப்படி வெளியே கசிந்தது; நம் நிறுவனத்தில் பணியாற்றும் சில ‘கருப்பு ஆடுகள்’ தான் அந்த ரகசியத்தை பணத்திற்காக போட்டி நிறுவனங்களுக்கு விற்றிருப்பார்கள்; அவர்களை உடனடியாக கண்டறிந்து அழிக்க  வேண்டும் என்று முடிவு செய்து, அந்த வேலையை, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக அடாவடியாக செயல்படும் அர்ஜுன் (ஆரவ்) என்ற  முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ஒப்படைக்கிறார்.

வஜ்ரா நிறுவனத்தில் பணிபுரியும் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து, விசாரணை என்ற பெயரில் கொடூரமாக சித்ரவதை செய்து, ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக தகவல்களைக் கறந்து, இறுதியில், வஜ்ரா நிறுவனத்தின் ரகசியம் கசிந்ததற்குக் காரணம் திருமாறன் (உதயநிதி ஸ்டாலின்) என்பதை கண்டறிந்து, அவரை அழித்தொழிக்க தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் அர்ஜுன்.

வஜ்ரா நிறுவன ரகசியங்களை திருமாறன் ஏன் வெளியிடுகிறார்? அத்தனை பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக அவர் ஏன் ரகசிய கலகம் செய்கிறார்? கொலைவெறியுடன் தேடுதல் வேட்டை நடத்திய அர்ஜுனிடம் திருமாறன் சிக்கினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கலகத் தலைவன்’ படத்தின் மீதிக்கதை.

கலகத் தலைவன் (ரிபல் லீடர்) திருமாறனாக வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் பொருத்தமான கதாபாத்திரம். ஆர்ப்பாட்டமாய் கத்தி கூச்சல் போடாமல், அடக்கமாய், அதே நேரத்தில் அழுத்தமாய் ஹீரோயிசம் காட்டி, அட்டகாசமாய் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ’காதல் – காமெடி’ ஜானரிலிருந்து விலகி சீரியஸாக நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ பாணியில் இந்த படமும் சமூகப் பொறுப்புடன் இருப்பது, அவரது திரைப்பயணத்துக்கு மட்டுமல்ல, அரசியல் பயணத்துக்கும் பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்பது நிச்சயம். கார்ப்பரேட் முதலாளிய கொடூரங்களை அம்பலப்படுத்தும் இப்படத்தை அவரே துணிந்து தயாரித்திருப்பதற்கு பாராட்டுகள்.

கலகத் தலைவனான நாயகனைக் காதலிக்கும் நாயகி மைதிலியாக வரும் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். காதலை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு அவர் வரும் காட்சிகள் அமர்க்களம். பிரி-கிளைமாக்சில் அவர் நாயகனை காட்டிக்கொடுத்துவிட்டு கதறும் கதறல் நம் காதுகளை விட்டு நீங்க மறுக்கிறது. அவருக்கு தமிழ்த்திரையுலகில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயமாக உண்டு.

0a1e‘பிக்பாஸ் சீசன் 1’ வின்னரான ஆரவ், இதில் வில்லனாக – முன்னாள் ராணுவ அதிகாரி அர்ஜுனாக – கலக்கியிருக்கிறார். நாயகனுக்கு இணையாக எழுதப்பட்டிருக்கும் இந்த ஸ்டைலிஷ் வில்லன் பாத்திரத்தில் ரகுவரன், கௌதம் வாசுதேவ் மேனன் போல பிரமாதமாக பின்னி பெடலெடுத்திருக்கிறார் ஆரவ். நாயகன் வலிமையானவனாகத் தெரிய வேண்டும் என்றால், அவனுக்கு இணையாக வில்லனும் வலிமையானவனாக படைக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்துக்கு இந்த படம் ஓர் எடுத்துக்காட்டு.

கலையரசன் வழக்கம் போல் தன் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

’சஸ்பென்ஸ் – திரில்லர்’ ஜானரில், கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்கு எதிரான சமகால அரசியல் படமாக இதை எடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதைக்கரு தேர்வு, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, போகிற போக்கில் அடித்துத் துவைக்கும் அரசியல் வசனங்கள், மேக்கிங், நடிப்புக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து அவர்களை வேலை வாங்கிய விதம் என அனைத்திலும் நேர்த்தியான இயக்குனராக தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். பாராட்டுகள்.

ஸ்ரீகாந்த் தேவா, ஆரோல் கோரலி இசையும், தில்ராஜ் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்துள்ளன.

‘கலகத் தலைவன்’ – அவசியம் கண்டுகளிக்கத் தக்க விறுவிறு திரில்லர்!

Read previous post:
0a1f
இந்தி, உருது, அரபி உள்ளிட்ட 13 மொழிகளில் திருக்குறள் வெளியீடு!

திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை ஒன்றிய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு (சிஐசிடி) ஒன்றிய கல்வி அமைச்சகம் வழங்கியது. அதன்படி சம்ஸ்கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம்,

Close