காரி – விமர்சனம்

நடிப்பு: சசிகுமார், பார்வதி அருண்,  ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, ராம்குமார் கணேசன்,  நாகிநீடு மற்றும் பலர்

இயக்கம்: ஹேமந்த்

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

இசை: டி.இமான்

தயாரிப்பு: ’பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லட்சுமண் குமார்

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

ஏறு தழுவுதல் என பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ஜல்லிக்கட்டு வெறும் வீரசாகச விளையாட்டு மட்டும் அல்ல; அது தமிழ் பேரினத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களின் உயிரோடும், வாழ்வோடும், தன்மானத்தோடும் பின்னிப் பிணைந்த பண்பாடு சார்ந்தது என்பதை அறிவுப்பூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம் ’காரி’.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனேந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்குப் பொதுவானதாக கருப்பன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலை நிர்வகிக்கும் உரிமை எந்த கிராமத்துக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இவ்விரு கிராமங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், வறட்சி காரணமாக பல ஆண்டுகளாக தண்ணீர் வராமல் காய்ந்துகிடக்கும் ஆற்றை, இராமநாதபுரத்தின் குப்பைக் கிடங்காக மாற்ற அரசாங்கம் முடிவு செய்கிறது. தங்களது ஆறு குப்பைக் கிடங்காக மாற்றப்படுவதைத் தடுக்க நினைக்கும் பெரியவர்கள், அதற்காக கருப்பன் கோயில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள்.

கோயில் திருவிழாவை நடத்துவதற்கு முன்பாக கோயில் நிர்வாகம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதால், அதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஜல்லிக்கட்டுப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் எந்த கிராமம் வெற்றி பெறுகிறதோ, அந்த கிராமத்துக்கு கோயிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது தான் அந்த தீர்வு.

ஒரு கிராமம் 18 ஜல்லிக்கட்டுக் காளைகளை போட்டியில் களமிறக்க, மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த 18 மாடுபிடி வீரர்கள் குறைந்தது 10 காளைகளை அடக்கி விட்டால், அந்த கிராமமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது தான் அந்த ஜல்லிக்கட்டு போட்டி.

இதன்படி, வீட்டுக்கு ஒரு மாடுபிடிவீரர் என்று தேர்வு செய்யும் காரியூர் கிராமப் பெரியவர்கள், காரியூரை பூர்விகமாகக் கொண்டு சென்னையில் வாழும் முன்னாள் மாடுபிடி வீரரான ஆடுகளம் நரேனின் மகன் சசிகுமாரை இந்த போட்டியில் பங்கேற்க வைக்க முடிவு செய்து அவரைத் தேடி சென்னைக்குப் போகிறார்கள்.

சென்னையில் சசிகுமாரை கண்டுபிடித்தார்களா? அங்கு அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் சொந்த கிராமத்துக்குத் திரும்பிவந்து, ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு காளைகளை அடக்கினாரா, இல்லையா? இறுதியில் கோயில் நிர்வாகத்தை யார் கைப்பற்றியது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘காரி’ படத்தின் மீதிக்கதை.

0a1b

வீரசாகசத்துக்கு இடமளிக்கும் கிராமத்துக் கதை என்றால், அதில் நடிப்பது சசிகுமாருக்கு அல்வா சாப்பிடுவது போல. மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். பந்தயக் குதிரையோட்டியாக வரும் சென்னைக் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மொத்தத்தில் தனியொரு நாயக நடிகராக படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

சசிகுமாரின் இணையாக, நாயகியாக வரும் பார்வதி அருண் நிறைவாக நடித்திருக்கிறார். தனது காளையைக் கேட்டு அவர் அழுது புரண்டு நடித்திருக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார். அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

’கருப்பன்’ என அழைக்கப்படும் ‘காரி’  காளைமாடு ஒரு தனி கதாபாத்திரமாக திமிரும் விதமும், அதற்கான காட்சிகளும் ஈர்ப்பைக் கூட்டுகின்றன.

நாயகனின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், தொழிலதிபராக வரும் ஜே.டி.சக்ரவர்த்தி, அவரது மனைவியாக வரும் சம்யுக்தா, குதிரைகளின் உரிமையாளராக வரும் ராம்குமார் கணேசன், அவருடன் வரும் அம்மு அபிராமி, நாயகியின் அப்பாவாக வரும் பாலாஜி சக்திவேல், கிராமத்தின் தலைவராக வரும் நாகிநீடு, நகைச்சுவைக்காக வரும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் தத்தமது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பல்லுயிர் பாதுகாப்பு, மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான பந்தம், மாட்டிறைச்சி மாஃபியாவின் அட்டூழியங்கள், நகரங்களின் நலனுக்காகச் சுரண்டப்படும் கிராமங்கள் எனப் பல அத்தியாவசிய பிரச்னைகளை விறுவிறுப்புக் குறையாமல்  இப்படத்தில் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹேம்நாத். மேலும் படத்தின் இறுதி 20 நிமிடங்கள் இயக்குனருக்கு நல்ல பெயர் பெற்றுத்தரும் என்பது உறுதி.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில், நகரத்து குதிரைப் பந்தயமும், கிராமத்து ஜல்லிக்கட்டுப் போட்டியும் கண்கொள்ளா காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

டி.இமானின் இசையில் ”சாஞ்சிக்கவா” பாடலும், “எங்கும் ஒளி பிறக்குமே” பாடலும் அருமை. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

‘காரி’ – சுவையான தமிழ் விருந்து!

Read previous post:
0a1d
Penguin set to release VJ Ramya Subramanium’s first book ‘Stop Weighting’

Penguin Random House India is proud to share that we are publishing anchor-turned-actress Ramya Subramanium’s first book, Stop Weighting: A

Close