“ஜெயலலிதா மரணத்தில் மர்மம்”: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, நரேந்திர மோடிக்கு முன்னாள் பாஜக பிரமுகரும், மோடி மற்றும் வெங்கையா நாயுடுவுக்கு நெருக்கமான நடிகையுமான கவுதமி கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தை பப்ளிசிட்டிக்காக தனது அதிகாரபூர்வ வலைப்பூ பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த கடிதம்:-

பிரதமர் நரேந்திர மோடிக்கு,

நான் இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்தியக் குடிமகளாக எழுதுகிறேன். நான் ஒரு குடும்பத்தின் தலைவி, ஒரு தாய் மற்றும் வேலைக்கு செல்லும் ஒரு பெண். நாட்டில் என்னுடன் வாழும் என் சக மக்களுக்கு இருக்கும் கவலையும், அக்கறையுமே எனக்கும் இருக்கின்றன. அது, எனது குடும்பம் பாதுகாப்பாகவும், நிறைவாகவும் வாழத் தகுதியான ஒரு சூழலை ஏற்படுத்தவே.

சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் திடீர் மரணத்தினால் துக்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி. இந்திய அரசியலில் அவர் ஓர் உயர்ந்த ஆளுமை. பலதரப்பட்ட பெண்களுக்கும் பெரிய உந்துசக்தியாக இருந்தவர். அவரது தலைமையில் தமிழகம் பல துறைகளில் முன்னணிக்கு வந்து முன்னேற்றம் கண்டுள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும் கலங்காத ஜெயலலிதா என்ற சகாப்தத்தின் மறுக்க முடியாத உறுதியும், வலிமையும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கனவு கண்டிருக்கும் இன்னும் எண்ணற்றோருக்கு ஓர் ஊக்கியாக இருக்கும்.

அவரது மறைவு சோகமானதாகவும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், கடந்த சில மாதங்களாக இருந்த சூழல் மற்றும் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவருக்கு நடந்த சிகிச்சை, அதிலிருந்து அவர் மீண்டு வந்தது, பிறகு திடீரென காலமானது என அதைச் சுற்றியிருக்கும் பதிலளிக்கப்படாத கேள்விகள். இந்த விவகாரங்கள் குறித்த தகவல்கள் கிட்டத்தட்ட முழுமையாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. கவலையுடன் அவரைப் பார்க்க வந்த பல பிரமுகர்களுக்கு, அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழக அரசின் அன்பார்ந்த தலைவர் ஒருவரைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்? ஏன் அவரை தனிமைப்படுத்தவேண்டும்? யாரின் அதிகாரத்தின் பேரில் அவரை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் போடப்பட்டன? ஜெயலலிதாவின் உடல்நிலை சிக்கலாக இருந்தபோது, அவரது சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்த நபர்கள் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருடையது? இது போன்ற பல கேள்விகள் தமிழக மக்களிடம் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. அவர்களது எதிரொலியை அந்தக் கேள்விகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்.

நடந்தவை விவாதத்துக்குரியது என சிலர் கூறலாம். அதில் எனக்கு சந்தேகமில்லை. அதுதான் எனது பயமும் கூட. ஜனநாயகத்தால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பற்றி உண்மையான தகவல்களைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். அந்தத் தலைவர்கள், மக்களின் நலனுக்காக தங்களது கடமையை செய்யும் அளவு உடல்நிலை சீராக உள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களின் பிரியமான தலைவராக இருப்பவரின் ஆரோக்கியம் குறித்த கவலை மக்களுக்கு இருக்கும்.

இதில், இத்தகைய மிகப்பெரிய அளவிலான சோகத்தைச் சுற்றியிருக்கும் மர்மங்கள் எந்த சூழலிலும் கேள்வி கேட்கப்படாமலோ, பதிலளிக்கப்படாமலோ இருக்கக் கூடாது. ஒரு தலைவரின் விஷயத்திலேயே இந்த நிலை என்றால் தனது உரிமைக்காகப் போராடும் ஒரு சாதாரணக் குடிமகனின் நிலை என்ன? நமது ஜனநாயக முறையின் மீது ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்கும் நம்பிக்கைதான் நமது தேசத்தை உயர்வாக்குகிறது. அது எந்த நிலையிலும் பாதுகாக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் தங்களது தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை இருக்கிறது. இந்த உரிமையை காக்க வேண்டும் என்கிற கவலையும், அக்கறையும் என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கிறது என்கிற பரிபூரண நம்பிக்கையின் பேரில் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சாதாரண இந்தியக் குடிமகனின் உரிமைக்காக பயம் கொள்ளாது போராடும் தலைவர் என்பதை பல முறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அதனால், எனது சக தேச மக்களின் குரலுக்கு நீங்கள் கவனம் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஆழ்ந்த மரியாதை மற்றும் நம்பிக்கையுடன்

கவுதமி.