“சோசலிச புரட்சி என்ற உன்னதத்தை உள்ளடக்கமாக கொண்டது உலக மகளிர் தினம்!”

உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக ஏற்பாடுகள் என்று தான் உலக மகளிர் தினத்தைப் பலர் பார்க்கின்றனர். ஆனால் உலக மகளிர் தினத்தின் நோக்கம் என்பது வேறு.

உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது. உள்ளடக்கம் உருவானது எப்படி என்று பரிசீலிக்கிறபோது உலக மகளிர் தினம் மார்ச் 8 என, உருவான பின்னணியையும் சேர்த்து பரிசீலித்தால் தான் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

மார்ச் 8 மகளிர் தினக் கொண்டாட்டம் குறித்து பலருக்கு பலவிதமான கருத்து இருந்தது. ஐ.நா மன்றம் முடிவு செய்தது என்றும், அமெரிக்காவில் தான் முடிவெடுக்கப்பட்டது என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவின. உண்மை அதுவல்ல.

கம்யூனிஸ்ட் பெண்களுக்கான சர்வதேச முதல் மாநாடு இனெஸ்ஸா என்ற பெண் தோழரின் முயற்சியில் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு இனெஸ்ஸா இறந்தபோது பெண்கள் அகிலத்தின் செயலாளராக கிளாரா ஜெட்கின் பொறுப்பேற்றார். கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் மாநாடு 1921 ஜூன் மாதம் மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில் தான் உலக மகளிர் தினத்திற்கு மார்ச் 8 என்ற தேதி நிச்சயிக்கப்பட்டது. அதுவரையில் உலக மகளிர் தினம் பிப்ரவரி முதல் மே வரையிலான ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஐ.நா மன்றம் 1975 மார்ச் 8 அன்று முதல் முறையாக மகளிர் தினத்தைக் கொண்டாடியது. இவற்றின் தொடர்ச்சியாகத் தான், உலக மகளிர் தினத்தை அனைத்து நாட்டு அரசுகளும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை ஐ.நா-வின் பொதுச்சபை 1977 டிசம்பர் 16 அன்று நிறைவேற்றியது.

“ஏதேனும் ஒரு நாளை” என தீர்மானத்தில் குறிப்பிட்டபோதும், இந்திய அரசு உள்பட அனைத்து நாட்டு அரசுகளும், மார்ச் 8 அன்று உலக மகளிர் தினச் செய்தியும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றன. மார்ச் 8 உருவான வரலாற்றுப் பின்னணி என்ன? உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது என்பதன் பொருள் என்ன?

ஜார் கால ரஷ்யாவில், பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கப்பட்டனர். ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் யுத்தம் நடந்து வந்த காலம், ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காமல், தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக இருந்தது. தானும் தங்களது குழந்தைகளும், மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என ரஷ்யத் தலைநகர் பெட்ரோ கிராடு நகரில், பஞ்சாலைப் பெண் தொழிலாளர்கள் கொதித்து எழுந்தனர்.

1917 மார்ச் 8 அன்று பெட்ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற பகுதியில் பஞ்சாலையில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தத்தைத் துவக்கினார்கள். வேலை நிறுத்தம் செய்த பெண் தொழிலாளர்கள் பேரணியாக வீதிக்கு வந்தனர். அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களை ஆலைகளை விட்டு வெளியே வாருங்கள் என அழைத்தார்கள். நமக்கு உணவு வேண்டும், போர் நிறுத்தப்பட வேண்டும், சுதந்திரம் வேண்டும், தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்களோடு சேர்ந்து போராடுங்கள் என ஆண் தொழிலாளர்களை பெண் தொழிலாளர்கள் அறைகூவி அழைத்தனர்.

பஞ்சாலைகளில் மட்டுமல்ல, சிகரெட் தொழிற்சாலை உள்ளிட்டு பல ஆலைத் தொழிலாளர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். ரொட்டிக் கடைகளின் முன், ரொட்டி வரும் என எதிர்பார்த்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்களும் ஆவேசமாகக் கலந்துகொண்டனர். பலர் குழந்தைகளுடன் வந்தனர். சிறுவர் சிறுமியரை நடத்திக் கூட்டி வந்தனர். ஒரு பகுதி படை வீரர்களும் இப்பேரணியில் இணைந்தனர். பேரணியின் ஆவேசத்தைக் கண்டு, மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட இணைந்தனர்.

இவ்வாறு பல சிற்றாறுகள் கலந்து பொங்கிப் பெருகும் பேராற்று வெள்ளம் போல், மனித வெள்ளம் முதன்மைச் சாலையை நிறைத்தது. கோரிக்கை முழக்கம் காற்றை நிறைத்தது, பதாகைகள் கண்களை நிறைத்தது. இப்பேரணியில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் பெண், ஆண் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றவர்களும் கலந்து கொண்டனர். அடுத்த நாள் இந்தப் பேரணி இரண்டு லட்சத்தைத் தாண்டியது. புதிய கோரிக்கையும் சேர்ந்து கொண்டது:

” மன்னராட்சி ஒழிக!”

ஆம்… புரட்சி தொடங்கி விட்டது…

இவ்வாறு 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சிதான், உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுவதற்கு உண்மையான மூலகாரணம் ஆகும்.1917 மார்ச் 8 ல் ஏற்பட்ட எழுச்சி ரஷ்யாவின் முதற்கட்ட புரட்சி. அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தலைமையிலான அரசு ஆண் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்டு, பெண் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்ட பல உரிமைகளை வழங்கிடும் சட்டம் இயற்றப்பட்டது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் சோசலிசப் புரட்சிக்கான எழுச்சி ஆகும். உலக மகளிர் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு அமைப்பும், சோசலிசப் புரட்சி என்ற உன்னதமான உள்ளடக்கத்தை, முன்னெடுத்துச் செல்ல முழக்கமிட வேண்டும்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் இவ்வாண்டு பெண்கள் வேலை வாய்ப்பு, அதிகாரமளித்தல் ஆண்டாக கடைபிடிக்க அறைகூவல் விடுத்துள்ளது.

மகளிரை சமமாகப் போற்றுவோம்!
அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்!

SORNAKUMAR R

 

Read previous post:
simba-movie-audio-launch-stills-033
Simba Movie Audio Launch Photo Gallery

Close