நுங்கம்பாக்கம் பெண் படுகொலை: இளம்பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கொடூரமான சித்திரம் மிகுந்த துக்கத்தைக் கிளறுவதாக இருக்கிறது. குற்றச் செய்திகளை தொடர்ந்து கவனிக்கும் ஒரு தினசரி வாசகனாக அந்த வழக்கைப் பற்றிய விவரங்களை கவனிக்கும்போது, அது வழிப்பறி கொள்ளை முயற்சியில் நடந்த கொலை அல்ல என்று தோன்றுகிறது. ரயிலிற்காக காத்திருந்த பெண்ணிற்கும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞனுக்கும் சிறு வாக்குவாதம் நிகழ்ந்ததாக பார்த்தவர்களின் வாக்குமூலம். ஒருதலைக் காதலால் இந்தப் பெண்ணை தொடர்ந்து துரத்தி, மறுத்தல் முற்றின ஒரு கணத்தில் கொன்றவனா, அல்லவா என்பது குறித்த உண்மைத் தகவல்கள் ஒருபுறம் இருக்கட்டும்.

இப்போதெல்லாம் பூங்காக்களில், சாலைகளில், பேருந்துகளில், ரயில் பயணங்களில் சிலபல மிக மிக இளம் காதலர்களைக் கவனிக்கிறேன். எட்டாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களும் அடக்கம். மற்றவர்களைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாத அவர்களின் நெருக்கமான உடலசைவுகள், சமிக்ஞைகள், காதலுணர்வை மீறி அடுத்தக் கட்டத்திற்காக ஏங்கும் உடல்மொழிகள் போன்வற்றை கவனிக்கிறேன். கண்காணிப்புச் சமூகத்தின் ஒரு பகுதியாக நானும் மாறி விடக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் மீறி அந்தப் பெண்களை கவலையுடன் கவனிக்கிறேன். ஒரு தகப்பன் என்கிற உணர்வில் இது தன்னிச்சையாக நிகழ்கிறதோ என்னமோ.

ஆணும் பெண்ணும் மிக எளிதில் பழகக்கூடிய கலாசார வெளிகள் பெருகத் துவங்கி விட்டது ஒரு வகையில் ஆரோக்கியமான மாற்றம்தான். ஆனால் இந்த சுதந்திரத்தை இளம்பெண்கள் மிக எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்று தோன்றுகிறது.

வழிப்பறி கொள்ளைக்காரன் போல துரத்தி, மிரட்டி, ரவுடித்தனம் காட்டி காதலைப் பிடுங்கும் பொறுக்கிகள்தான் ஹீரோக்கள் என்கிற மாதிரியான சித்திரம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறுவப்படுகிறது. காதல் என்பது பரஸ்பர மதிப்பில் இயல்பாக, அதற்கான நாகரிகத்துடன் நிகழ வேண்டும் என்று சித்தரிக்கிற உயர்ந்த படைப்புகள் மிக குறைவு.

(‘சய்ராட்’ திரைப்படத்தில் தன்னிச்சையான சாதிய திமிர் கொண்ட உயர்வு மனப்பான்மையுடன் உலவும் நாயகிக்கு, எந்தக் கணத்தில் நாயகனின் மீது கவனமும் சலனமும் வருவதாக நாகராஜ் சித்திரிப்பதை இங்கு கவனிக்கலாம். அவன் கல்வியில் சிறந்த மாணவன் என்று அறிய நேர்கிறபோது)

எனவே, பொறுக்கி கதாநாயர்களின் மீது தன்னிச்சையாக உருவாக்கப்படும் பிரியம் யதார்த்த வாழ்விலும் இளம்பெண்களுக்கு உண்டாகி விடுகிறதோ? பெண்களுக்கும் இது குறித்தான ஜாக்கிரதையுணர்ச்சி இருக்கும்தான். ஆனால் காதலில் ஏற்படும் பிரிவை பெண்கள் முன்ஜாக்கிரதையுடனும் யதார்த்தத்துடனும் எடுத்துக் கொள்வதைப் போல இளைஞர்கள் எடுப்பதில்லை. ஒன்று தண்ணியடித்து தற்கொலை செய்யும் கேஸ்கள். ஆனால், சமகாலத்தில் இந்தப் போக்கு மிக குறைவு. திரிஷா இல்லைன்னா நயனதாரா என்று காதலும் ஒரு டைம்பாஸ் என்கிற உணர்வு பெருகி விட்டது.

இன்னும் சில இளைஞர்கள் பழிவாங்கும் போக்குடன் ஆசிட் அடிப்பது, போனில்,நேரில் மிரட்டுவது, தங்களின் வசந்த கால நிகழ்வுகளின் ஆவணங்களை பழிவாங்கும் போக்கில் பயன்படுத்துவது என்றிருக்கிறார்கள். இதுதான் கவலையை ஏற்படுத்தும் போக்கு. தனக்கு சொந்தமான சொத்து பறிபோவதா என்கிற நிலவுடமை மதிப்பீடுகள் மீதான சிந்தனை அவர்களுக்குள் வலுவாக ஊறியிருப்பதால் எப்படியாவது தன் சொத்தை மீட்டு விட வேண்டும், அல்லது யாருக்கும் பயன்படாமல் அழித்துவிட வேண்டும் என்கிற வெறி அவர்களுக்குள் ஊற்றெடுக்கிறது. அந்தப் போக்கின் எதிரொலிதான் இவ்வகையான வன்முறை சம்பவங்கள்.

‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்கிற மிக நாகரிகமான போக்கு இன்றைய சூழலில் கேணைத்தனமாகத்தான் பார்க்கப்படுகிறது. இளம்பெண்கள் இது குறித்தான எச்சரிக்கையுடன் தங்கள் துணைகளை தேர்ந்தெடுப்பது நலம்.

– சுரேஷ் கண்ணன்