சிறுகதை: இன்க்குபேட்டர் குஞ்சுகள்

அந்த குஞ்சுகள் இன்க்குபேட்டரால் பொரிக்கப்பட்டவை. போலியாய் போதுமான வெப்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த பிரசவக்கோழியின் பணி முடிந்துவிட்டது.

“கீச்… கீச்… கீச்…”

புகைக்கீற்றுத் தொனியில் சுதந்திரமழலைகீதம் இசைத்துக்கொண்டே குஞ்சுகள் இன்க்குபேட்டரிலிருந்து தாவிக்குதித்து இறங்கின. இறங்கிய வேகத்தில் காலூன்றி நிற்க முடியாமல் கீழே விழுந்து உருண்டன; பின் தட்டுத்தடுமாறி எழுந்துகொண்டன.

குஞ்சுகளின் கண்களில் ஆனந்தமிரட்சிக் குமிழிகள். முட்டையின் அடிமைத்தளையை உடைத்துக்கொண்டு வெளியேறி வந்துவிட்டதாய் கனமற்ற ஓர் உணர்வு. கருவில் கனவாய் மிதந்த புத்துலகப் பனிமலரை அலகெதிரேயே நுகர்ந்துவிட்ட ஆனந்தப் புல்லரிப்பு. இம்மண்ணுக்குத் தாங்களும், தங்களுக்கு இம்மண்ணும் சொந்தமாகி விட்டதைப் போன்ற பிணைப்புச்சாய பிரேமை…

அரும்புகள் மயக்கபூரிப்போடு இன்க்குபேட்டரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டன.

அப்பப்பா… எத்தனை குஞ்சுகள்! ஆனால் பாவம்… அத்தனை குஞ்சுகளுக்குமே – கள்ளங்கபடம் அறியாத அப்பாவியின் பால்மனம் போன்ற – மிருதுவான வெண்பட்டுச் சிறகுகள்!

எதிரே… நீண்டு வளைந்து செல்லும் கரடுமுரடான பாதை. அதில் பயணம் செய்வதற்காகத் தான் அக்குஞ்சுகள் பொரிக்கப்பட்டிருக்கின்றன. பாதையின் இலக்கு என்ன என்பதை அவை அறிந்திருக்காவிட்டாலும், கால்கள் துருதுருப்பால் பரபரத்தன.

பார்வைகளைப் பரிமாறிக்கொண்டன. என்ன செய்வது? இயக்க இயங்கும் கால்களாய் அக்குஞ்சுகள் இல்லாவிட்டாலும், அவற்றின் கால்கள் இயக்க இயங்கக் கூடியவை தானே…

அடுத்த வினாடி பாதை, காய்கள் வெடித்த பருத்திக்காடாகியது. சின்னஞ்சிறிய… மிக மிகச் சிறிய… செம்மறியாடுகளைக் கொண்ட பெரிய மந்தை ஓடி, விழுந்து, புரண்டு, எழுந்து நகரத் தொடங்கியது…

* * *

கோடைகால நெருப்புப் பொறி சிறகுக்குள் ஊடுருவி, தோலையும் கிழித்து உயிரைக் கருக்கத் தொடங்கியது. அவ்வப்போது வீசிய வறண்ட காற்றும் அக்கினியாய் தகித்தது…

‘இது யாருடைய மூச்சு? உலகம் இப்படியும் இருக்குமா?’

குஞ்சுகள் கோரக்கொடுமையை சகித்துக்கொள்ள முடியாமல் துடிதுடித்தன. கால்களைத் தரையில் ஊன்ற முடியவில்லை; வானில் பறந்து செல்லவும் வலுவில்லை. ஆதரவாய் நிழல்மழை பொழிந்து குளிர்ச்சியாய் அணைத்துக்கொள்ளும் மரத்தையும் எங்கும் காணோம்.

குஞ்சுகளுக்குள் பெருமூச்சுப் புலம்பல்கள் பொங்கிக் கனத்தன. கண்களில் ஏக்கநீர் கசிந்தது:  ‘இப்போது அம்மா மட்டும் இங்கே இருந்தால், இப்படியெல்லாம் நம்மைத் துடிக்க விட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருப்பாளா? இறக்கைகளுக்குள் பாதுகாப்பாய் அரவணைத்து ஆறுதல் அளித்திருப்பாளே! நம் கண்ணீரை அவளால் சகித்துக்கொள்ள முடியுமா? அம்மா… நீ எங்கே இருக்கிறாய்? அல்லது எங்குமே இல்லையா? அம்மா… நாங்கள் அநாதைகள் தானா? எங்கள் உயிர்வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லாத இந்த நேரத்தில் இங்கே வந்து உயிர்ப்பிக்கக் கூடாதா? உன்னால் முடியாதா?’

உச்சிவெய்யில் அம்பாய் கீறி குஞ்சுகளின் உமிழ்நீர் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது. தாகம் குரல்வளையை நெரித்தது; எச்சிலால் அலகை நனைத்துக்கொள்ளவும் வழியில்லை.

முட்டையிலிருந்து வெளியேறிய பிறகும் குஞ்சுகளுக்கு தாகம் அடங்கவில்லை…

‘தாகம் என்று தணியும்?

       எப்படித் தணியும்?’

குஞ்சுகள் செய்வதறியாமல் தவித்தன; நெருப்பில் புழுவாய் நெளிந்தன. கால்கள் தரைச்சூட்டில் பொசுங்கிக்கொண்டிருந்தன…

சிந்திக்க நேரமில்லாமல், சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் இல்லாமல், குஞ்சுகள் சிறிது நேரம் உயரே தாவியும், பின் கீழே இறங்கி ஓடியும், மீண்டும் உயரே தாவியுமாய் பரிதாபப் பயணத்தைத் தொடர்ந்தன…

* * *

ஒரு எல்லைக்குப் பிறகு பாதை பல திசைகளில் சிதறி நீண்டது. அந்த எல்லையிலிருந்து பார்த்த குஞ்சுகளின் கண்களுக்கு ஒவ்வொரு பாதையும் ஒவ்வொரு விதமாய் காட்சியளித்தது.

‘எந்த வழி சென்றால் – ஆனந்த ஆர்ப்பாட்டமாய் வாழாவிட்டாலும், குறைந்தபட்சம் அமைதியாகவாவது வாழலாம்? எந்த பாதையில் அடியெடுத்து வைக்கலாம்?’

குஞ்சுகள் தடுமாறின. நெருப்பு துரத்தியது. அனுபவக் கொப்புளங்கள் கால்களுக்கு விலங்கு பூட்டின. செய்வதறியாது கலங்கின:

‘அம்மா மட்டும் உடன் இருந்திருந்தால், நம்மை பாதுகாப்பான வழியில் நடத்திச் சென்றிருப்பாளே! அவள் கால்களையே சுற்றிச் சுற்றி வந்து, எவ்விதக் கவலயுமில்லாமல் வாழ்ந்திருக்கலாமே! அம்மா நம்மை அநாதையாக்கி விட்டாள்! அவள் நம்மை கருவாக்கியிருக்காவிட்டால் இப்படியெல்லாம் துயரப்பட வேண்டியதில்லையே! கருவைச் சுமப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துவிட்ட அம்மா ஒரு துரோகி! கொடுமைக்காரி!

‘அவள் தான் அப்படியென்றால், கடனுக்கு உருவேற்றும் இன்க்குபேட்டருக்காவது இதயம் வேண்டாம்! முட்டையின் ஓட்டை மட்டும் உடைத்துவிட்டால் போதுமா? உடைதெறியப்பட வேண்டியவை அவ்வளவு தானா?

‘நாங்கள் கனவில் கண்ட புத்துலகம் இது இல்லை. இதில் ஏதோ விஷமேறியிருக்கிறது. கசக்கிறது…

‘இந்த மண்ணுக்கு நாங்களா சொந்தம்? எங்களுக்கா இந்த மண் சொந்தம்? சே… என்ன பேதைமை…’

குஞ்சுகள் ஆற்றாமைத்துயரில் குமுறின. கரித்துக் கொட்டின.

பாதையின் சிதைவு முன்னேறவிடாமல் மிரள வைத்தது. தரையின் நெருப்பு கருக்கிக் கொண்டிருந்தது.

குஞ்சுகளால் நிற்க, ஓட, பறக்க – எதுவுமே முடியவில்லை. தற்காலிகமாய் வெப்பத்திலிருந்து சில வினாடிகளாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலால் துடித்துப்போய், மேலும் கீழுமாய் குதிக்கத் தொடங்கின…

* * *

பரிதாபமாய் மேலும் கீழுமாய் குதித்துக்கொண்டிருக்கின்றன…

ஊடே பிரிந்துசெல்லும் குறுகலான பாதையில் – மணல்மேட்டுச் சூட்டில் – ஏதோவொன்று கருப்பாய் விரிந்து கிடப்பது, குஞ்சுகளின் கண்களுக்குத் தெரிகிறது. அதன் கருப்பு, குஞ்சுகளின் மனசிற்குள் பசுமையாய் மாறி இதமூட்டி, நம்பிக்கைச் சிதறல்களை ஒன்று சேர்க்கிறது.

‘அது என்னவாக இருக்கும்? நமக்கு அது நல்ல பாதை காட்டுமா? உயிர் வாழ உதவி செய்யுமா?’

குஞ்சுகள் எதிர்பார்ப்புகளைத் தேக்கிக்கொண்டு, தயங்கித் தயங்கி அருகே செல்கின்றன.. மனசு திக்திக்கென்று அடித்துக்கொள்கிறது.

அங்கே ஒரு கோழி, வெய்யிலில் – பாதிக்கண்களை இமைகளுக்குள் சொருகிக்கொண்டு, சிறகுகளை விரித்துப்போட்டு தலையைத் தொங்கவிட்டவாறு – படுத்துக் கிடக்கிறது.

“அம்மா… உங்களத் தானே…”

உள்ளங்கைக் கெண்டை மீனாய் நழுவும் தைரியத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு குரல் கொடுக்கிற்து ஒரு குஞ்சு.

கோழி, விழிகளைத் திறக்கிறது; தலை உயர்த்திப் பார்க்கிறது. பார்த்ததும், அதன் ஆனந்த ஆச்சரியத்தைப் பொங்கவிட இரண்டு கண்கள் போதவில்லை…

“கொழந்தைகளா, நீங்க…?”

“நாங்க அநாதைகளாய்…” என்று அலகைத் திறந்த குஞ்சை இடைமறிக்கிறது கோழி:

“நீங்க இன்னிக்கித் தானே பொறந்தீங்க! எல்லாம் என் காலக்கொடுமை! என் பிள்ளைகளே என்கிட்ட வந்து, ‘நாங்க அநாதைக’னு சொல்ல, அதை நான் கேக்குற அளவுக்கு அப்படி என்ன பாவம் செஞ்சேனோ? கண்ணுகளா, என்னைத் தெரியலையா? நான் தான் ஒங்கள வயித்துல சுமந்த அம்மா! ஐயோ, வெயில் உக்கிரமா அடிக்குதே! இன்னும் ஏன் அங்கேயே இருக்கீங்க? அம்மாவோட றெக்கை நெழலுக்குள்ள வந்து நில்லுங்க…”

குஞ்சுகள் திகைத்துப்போய் ஒரு கணம் அப்படியே நின்று விடுகின்றன. ‘அம்மாவைப் பார்க்கவே முடியாது’ என்று வருந்திக்கொண்டிருந்த குஞ்சுகள், தாய்மைப்பாச பிரவாகத்தில் திடீரென்று மூழ்கிப்போனதால் மூச்சு முட்டத் தடுமாறுகின்றன. அவற்றிற்கு இருக்கும் வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. கோழியின் சிறகுகளுக்குள் ஓடி தஞ்சம் அடைகின்றன.

“நாங்க பொறக்கும்போது ஏம்மா நீ கூட இல்லை? இந்த வெயிலுக்குள்ள நாங்க எப்படி கஷ்டப்பட்டுப் போனோம், தெரியுமா?”

“நீங்க முட்டையிலேயிருந்து வெளியே வந்தபிறகு எப்படியெல்லாம் வெப்பத்துக்குள்ள துடிச்சுக்கிட்டு இருப்பீங்களோன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன். அதனால் தான், வெப்பமாவது தணிஞ்சு என் புள்ளைக குளிர்ச்சியில வாழணும்ங்கறதுக்காக, என் உசிரு போனாலும் பரவாயில்லேன்னு இந்நேரம் வரைக்கும் மழைவரம் கேட்டு தவம் கெடந்தேன்.”

கோழியின் கண்கள் பனிக்கின்றன. குஞ்சுகள் நெகிழ்ந்து விடுகின்றன.

“அம்மா…”

“என்ன வேணும், சொல்லுங்க. இனி நான் உங்க கூடவே தான் இருப்பேன். உங்க தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்வேன்.”

“எனக்கு தாகமா இருக்கும்மா.”

“எனக்கு பசிக்குதும்மா.”

“சரி, வாங்க. முதல்ல அதுக்கு ஏற்பாடு பண்றேன்.”

குஞ்சுகளை தன் இறக்கை நிழலுக்குள்ளேயே நடக்கவிட்டு அழைத்துச் செல்கிறது கோழி. சிறிது தூரம் சென்றதும், சாக்கடை ஒன்று எதிர்ப்படுகிறது.

“தாகசாந்திக்கு தண்ணி குடிங்க.” கோழி அன்போடு கூறுகிறது.

வேகவேகமாய் கால்வாயை நோக்கி ஓடிய குஞ்சுகள், கலங்கியிருக்கும் சாக்கடை நீரை அலகுக்குள் உறிஞ்சி, தலையை உயர்த்தி விழுங்கி, தொண்டையை நனைத்துக்கொள்கின்றன.. தாகம் அடங்கிவிட்டதைப்போல் இருக்கிறது. திருப்தியோடு கோழியுடன் நடக்கின்றன..

இன்னும் கொஞ்ச நேரம் கழிகிறது.

உயரமான கம்பிவேலி. அதனருகே வந்ததும் கோழி நிற்கிறது. வேலிக்குள் சோளம்! குஞ்சுகள் ஆர்வப் பரபரப்போடு வேலிக்குள் நுழைய எத்தனிக்கின்றன. முடியவில்லை.

“கண்ணுகளா… இந்த தானியத்தை நாம் தின்னணும்னா, நாம எல்லாரும் ஒற்றுமையா ஒரே சமயத்துல பறந்து உள்ளே போகணும். ஒரு குஞ்சு பின்தங்கிட்டாலும் தானியம் மாயமாய் மறைஞ்சு போயிடும். ஆனா, இவ்வளவு உயரத்துல இருக்கும் இந்த கம்பி வேலியை உங்களாலே பறந்து தாண்ட முடியாது. நாளைக்கு காலையிலே வேலியோட உயரம் ரொம்ப குறைஞ்சிடும். அப்போ நாம் வந்து மொத்த தானியத்தையும் பகிர்ந்து சாப்பிடலாம். இவ்வளவு சோளமும் நமக்குத் தான். நாளைக்கு எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிடுங்க.”

கோழியின் பேச்சும், சோளமும் குஞ்சுகளுக்கு பிரமிப்பூட்டுகின்றன. நாளைய பொழுதை நினைத்துப் பார்க்கும்போதே வயிறும் மனமும் நிறைந்துவிட்டதைப் போலிருக்கிறது.

மீண்டும் அன்பைப் பரிமாறிக்கொண்டே கோழியும், குஞ்சுகளும் பயணத்தைத் தொடர்கின்றன.

இருள் மெல்ல பரவத் தொடங்கியதும், கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை அணைத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிடுகிறது:.

“கண்ணுகளா, உங்களுக்கு ஒரு கதை சொல்றேன், கேளுங்க. ஒரு மரத்துல ஒரு குருவி இருந்துச்சாம். அந்த குருவிக்கு நாலைஞ்சு குஞ்சுக இருந்துச்சாம். அதே மரத்துல, இன்னொரு கிளையில, ஒரு காக்கா கூடு கட்டி வாழ்ந்து வந்துச்சாம். அந்த காக்காய்க்கும் ரெண்டு மூணு குஞ்சுக இருந்திருக்கு. ஒருநாள், குருவி இரை தேடப் போயிருந்த சம்யம் பாத்து ஒரு கருநாகம் குருவிக் கூட்டுக்கு வந்து, ஒரு குஞ்சைப் பிடிச்சு முழுங்கிடுச்சி. இதை பாத்துக்கிட்டே இருந்த காக்கா, ‘நமக்கென்ன’ன்னு பேசாம இருந்திருச்சி. கூட்டுக்குத் திரும்பி வந்த குருவி, ‘ஒரு குஞ்சைக் காணோம்’னு அழுது புலம்பியிருக்கு. அதனால, மறுநாள் இரை தேடப் போகலை. ஆனா காக்கா இரை தேடப் போயிருந்த நேரம் பாத்துவந்த கருநாகம், ஒரு காக்காக் குஞ்சை கவ்வியிருக்கு. இதைப் பாத்துட்ட குருவி, பறந்துபோய் கருநாகத்தைக் கொத்தி கொன்னு போட்ருச்சி. இதுலேருந்து என்ன தெரியுது? ம்…? கண்ணுகளா… கண்ணுகளா…”

குஞ்சுகளிடமிருந்து பதில் வரவில்லை. அவை தூங்கிவிட்டன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின், கோழி தன் தலையை இறக்கைக்குள் சொருகி, அலகை ஒரு குஞ்சின் முதுகில் ஆழப் பதிக்கிறது…

* * *

எங்கோ தொலைவில், விடியலுக்காகக் கூவும் சேவலின் குரல் கேட்டு, எரிச்சலுடன் கண் திறந்தது கோழி. சேவலைத் தன் மனசுக்குள்ளேயே சுட்டுப்பொசுக்கி எரிச்சலைத் தணித்துக்கொண்டது. மீண்டும் ஒரு சேவலின் கூவல். கோழி பொறுமை இழந்து சிறகுகளை உலுப்பி படபடவென்று அடித்துக்கொண்டபோது, குஞ்சுகளும் விழித்துக்கொண்டு வெளியேறி வந்தன.

குஞ்சுகளின் மொத்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருந்தது. மற்ற குஞ்சுகளுக்கு இந்த இழப்பை உணர்ந்துகொள்ளும் பருவம் இன்னும் வரவில்லை.

கோழி தன் ஆத்திரத்தை சட்டென குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பெருமிதப் புன்னகையை முகத்தில் குப்பென்று வழியவிட்டது. கண்களில் பாசச்சுடர் ஒளிர்ந்தது. “கண்ணுகளா, ராத்திரி சுகமா தூங்குனீங்களா?”

“தூங்குனோம்மா.”

“நீ கதை சொல்லிக்கிட்டிருக்கும்போதே என் கண்ணு அசந்திருச்சி.”

ஒவ்வொரு குஞ்சும் ஒவ்வொன்றை சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு குஞ்சு மட்டும் மௌனமாய் நின்றுகொண்டிருந்தது. அதைக் கண்ட கோழியின் மனம் ஒரு வினாடி அதிர்ந்துவிட்டது. என்றாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

“ஏண்டிம்மா, நீ தூங்கவே இல்லையா?”

“ம்…”

“சும்மா சொல்லு…” குஞ்சுவின் சிறகை கோழி அன்போடு கோதிவிட்டது. என்ன பிரியம்!

“தூங்கிக்கிட்டேதாம்மா இருந்தேன். ஆனா…”

“ஆனா…?” அதற்குள் கோழியின் உள்ளத்தில் ஆயிரம் எண்ண மின்னல்களின் தாக்குதல்கள்.

“பசி வ்யித்தைக் கிள்ளினவுடனே முழிப்புத் தட்டிருச்சி. ப்சி குடலைத் தின்னுது.”

கோழி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. “உங்க பசியைத் தீர்த்து வைக்கணும்னு தானே நான் இன்னும் உசிரோட இருக்கேன். நான் நேத்து கம்பி வேலிக்குள்ள தானியத்தைக் காட்டினேனில்ல… அங்கே போவோமா?”

“போவோம்மா. சீக்கிரம் போகணும். பசிக்குது.”

கோழி முன்னே செல்ல, குஞ்சுகள் பின்தொடர்ந்தன. நேரம் கரைந்துகொண்டிருந்தது. கோழி தவறான வேறொரு பாதையில் போய்க்கொண்டிருப்பதை குஞ்சுகளால் மங்கலாக நினைவுபடுத்திப் பார்க்க முடிந்தது.

“அம்மா, நீ நேத்து போன பாதையிலே போறது மாதிரி தெரியலையே?”

“பாதை எனக்குத் தெரியாதா? சரியான பாதை தான்.”

“அம்மா, எடம் இன்னும் வரக் காணோம்?”

“இன்னும் கொஞ்ச தூரம் தான். வந்துரும்.”

குஞ்சுகள் சோர்வால் தளர்ந்து போகும்போதெல்லாம் தெம்பூட்டுவதற்கு ‘இன்னும் கொஞ்ச தூரம் தான்’ அதிகம் ப்யன்பட்டது. ஆனால் ‘கொஞ்ச தூரம்’ என்னவோ நீண்டுகொண்டே தான் சென்றது.

அதுவரை வானத்தில் வளைய வந்துகொண்டிருந்த பருந்து ஒன்று கீழிறங்கி, பாதையில் எதிர்ப்பட்டது. குஞ்சுகள் ‘பருந்தும் ஒரு பறவை’ என்கிற அளவுக்குப் புரிந்துகொண்டு, அச்சமின்றி முன்னேறின.

“குஞ்சுகளா… என்னைத் தெரியலையா? நான் தான் உங்க அம்மா. இவ போலியா வேஷம் போட்டு உங்கள ஏமாத்துறா. உங்கள்ல ஒரு குஞ்சு குறைஞ்சிருக்கு. அது எப்படி குறைஞ்சுச்சின்னு உங்களுக்குத் தெரியுமா? எல்லாம் இவளோட சதி. நீங்க என்னோட வந்துடுங்க. கவலை இல்லாம வாழலாம்.”

பருந்தின் வார்த்தைகள் குஞ்சுகளின் பிஞ்சுமனத்தில் தாமரையிலைத் தண்ணீராய் ஒட்டாமல் இருந்தாலும், தங்கியிருந்தன.

‘இத்தனை பேர் இருக்கிறோமே, நம்மில் ஒன்று குறைந்திருக்குமோ? இப்படியும் இருக்குமா?’

குஞ்சுகள் தன்னை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைக் கண்ட கோழியின் உள்ளம் பதறியது. ஆத்திரக்கோபத்தோடு பருந்தின் மீது பாய்ந்து, ஓங்கிக் கொத்தித் துரத்தியது. பருந்து அலறியடித்துப் பறந்தோடிவிட்டது.

“அம்மா, பருந்து சொல்லுச்சே, ஒரு குஞ்சு குறையுதுன்னு… அது உண்மையாம்மா?”

“சேச்சே… என்னைப் பத்தி தவறான நெனைப்பை உங்களுக்கு ஏற்படுத்தி, உங்களை என்னைவிட்டுப் பிரிச்சி, பலியெடுக்குறதுக்காகத் தான் அது இப்படியெல்லாம் பேசியிருக்கு. பருந்து நம்ம பரம எதிரி. அது பேச்சை நம்பாதீங்க.”

“இல்லேம்மா, நீ எங்க அம்மா இல்லேன்னு…” ஒரு குஞ்சு மீண்டும் அதைப் பற்றி பேச்செடுக்கவும் கோழி இடைமறித்தது:

“உங்களுக்குப் பசிக்குதுல்ல. யாராவது உடனே சாப்பிடணும்னு நெனைக்கிறீங்களா?”

“ஆமாம்மா, பசிக்குது. உடனே சாப்பிடணும்.” எல்லாக் குஞ்சுகளும் ஆர்வத்தோடு குரலெழுப்பின. பருந்தின் பேச்சு, குஞ்சுகளின் மனதைவிட்டு எங்கே போனதோ? அதற்காகத் தானே கோழியின் இந்த தந்திரமும்.

கோழி தான் நின்றுகோண்டிருக்கும் பாறங்கல்லை அலகால் தட்டிப் பார்த்துவிட்டு, கால் நகத்தால் சரசரவென்று பிறாண்டியது. கருங்கல்லின் மேற்புறம் உடைந்து சிதறியது. அதனுள் ஒரு புழு. மிகச் சிறிய புழு. மெதுவாக நெளிந்துகொண்டிருந்தது. கோழி அதை எடுத்து வெளியே போட்டது.

குஞ்சுகள் புழுவைப் பார்த்தது தான் மாயம்… எல்லாம் அதன்மேல் பாய்ந்து விழுந்தன. ஒரு குஞ்சு புழுவைத் தூக்கிக்கொண்டு ஓட, மற்றவை அதை விரட்டிப் பிடுங்க… ஒருவாறு புழு தீர்ந்துவிட்டது.

குஞ்சுகளுக்கு உணவு அலகு வரை கிடைத்துவிட்டது என்று ஒரே சந்தோஷம். அதுவும், பாறைக்கடியில் இருக்கும் இரையைக் கூட கண்டுபிடித்து வெளியே எடுத்துத் தங்களுக்குக் கொடுத்துவிட்டு கோழி ஒதுங்கி நிற்கிறது என்ற விசுவரூப நினைப்பில் பெருக்கெடுக்கும் கண்மூடித்தனமான பாசம், பக்தி. குஞ்சுகள் கோழியின் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்தன.

“கண்ணுகளா, நீங்க நல்லா வாழணுங்கிறதுக்காக இன்னொரு திட்டம் வச்சிருக்கேன். அதாவது, இந்த வழியே போனோம்னா, கொஞ்ச நேரத்துக்குள்ளேயே ஒரு சொர்க்கம் தெரியும். அந்த சொர்க்கத்துக்குள்ளே நிறைய தங்கப்புழு இருக்கும். ஒரே ஒரு பழுவைச் சாப்பிட்டுட்டா, அப்புறம் என்னைக்குமே பசிக்காது. சந்தோஷமா வாழலாம். அதுக்காகத் தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். வழியில வர்ற யார் பேச்சையும் கேக்காதீங்க. அவங்கெல்லாம் நம்ம எதிரிங்க. இதை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சுக்கங்க. வாங்க போவோம்” கோழி முன்னே நடந்தது.

சொர்க்கம்… தங்கப்புழு, தங்கப்புழு… சொர்க்கம் என்று மனதில் மென்று நிறைத்துக்கொண்டே குஞ்சுகள் பின்தொடர்ந்தன.

“அம்மாவால தான் எதையும் செய்ய முடியுமில்ல. இப்போதைக்கு சொர்க்கத்துக்குப் போற வரைக்கும் உறுத்திக்கிட்டிருக்கிற முன் பசியைத் தீர்க்க ஏதாவது வழி செய்யலாமே.” ஒரு குஞ்சு முணுமுணுத்தது.

“அட மண்டு… மண்டு. நாம எப்படியெல்லாம் அநாதையா கஷ்டப்பட்டோம்ங்கறதை எல்லாம் மறந்துட்டியா? அம்மாவாவது இவ்வளவு செய்யுதேன்னு சந்தோஷப்படு. நம்ம அம்மா நல்ல அம்மா. அம்மான்னா அம்மா தான்” என்று மற்ற குஞ்சுகள் முன்னதன் காதைக் கடித்தன.

ஆனால் கோழியோ, ‘இந்த குஞ்சுகள் எனக்கு எத்தனை இரவுகளுக்குப் பொதுமானவை? சென்ற அக்கினி நட்சத்திரத்தில், கண் இமைக்காமல் காத்திருந்து, மலை இளகும் அந்த சில வினாடிகளுக்குள் மலையில் பொந்து தோண்டி, அதற்குள் வளர்த்து வருகிறேனே என் குஞ்சு… உண்மையான குஞ்சு… கழுகுக் குஞ்சு… அதன் வயிற்றுக்கு இந்த குஞ்சுகளின் குஞ்சுகள் எத்தனை இரவுகளுக்குப் போதுமானவை?’ என்று மனதுக்குள் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தது.

ராஜய்யா

(குறிப்பு: ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் விதமாக, இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை பிரகடனம் செய்த தினம் இன்று (ஜூன் 25).

இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸி காலத்தில், அவரது செல்ல மகன் சஞ்சய் காந்தியின் அராஜகம் தாண்டவமாடிய நேரத்தில், தீவிர கண்காணிப்பில் அச்சகங்களும், கடும் தணிக்கையின் கீழ் பத்திரிகைகளும் சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருந்தபோது, ஒரு திமிறலாய் இந்த உருவகக் கதையை எழுதி, எங்களது ‘படகு’ சிற்றிதழில் பிரசுரித்தேன். அப்போது எனக்கு வயது 19.

43 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, நரேந்திர மோடியின் ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி’ காலத்தில், அவரது ஆதரவுடன் அவருக்குப் பிரியமான சங்பரிவாரங்களின் அட்டூழியங்கள் அதிகரித்திருக்கும் நேரத்தில், இக்கதை இங்கே வெளியிடப்பட்டுள்ளது.)