மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா நியமனம்: மோடி தகவல்

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. இந்த புத்தகத்தின் முன்னுரையை சர்ச்சைக்கு உரிய வகையில் இளையராஜா எழுதியிருந்தார். அதில், ”நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, பெண்களின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவற்றில் பிரதமர் மோடியின் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அம்பேத்கரின் கருத்து சந்திக்கும் இடத்தையும் இந்தப் புத்தகம் ஆய்வு செய்ய முயன்றுள்ளது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போன்றவை உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. சமூகநீதியைப் பொறுத்தவரை பிரதமர் மோடி பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை அவர் உறுதிசெய்துள்ளார்” என்று மோடியை வானளாவப் புகழ்ந்திருந்தார்.

மேலும், “முஸ்லிம் பெண்களின் வாழ்வில் முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக பிரதமர் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளார். மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவரும் ஒன்றுபடுவதை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவின்படி புதிய இந்தியா எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார்..

பிறகென்ன…!

’இளையராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி….. பார்சல்’!!