”பிற நாட்டவரோடு பேச இந்தி பயன்படாது; ஆங்கிலம் தான் பயன்படும்!” – ராகுல் காந்தி

பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது என்றும், ஆங்கிலம்தான் பயன்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில் பயணம் செய்து வருகிறார். இந்தப் பயணத்தின் இடையே ஆல்வார் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்புவதில்லை. ஆனால், பாஜக தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியைத்தான் படித்து வருகிறார்கள்.

உண்மை என்னவென்றால், ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள் ஆங்கிலம் கற்கக் கூடாது என்பதுதான் பாஜக தலைவர்களின் விருப்பம். ஏழை மாணவர்கள் பெரிய கனவு காணக்கூடாது; பரம்பரைத் தொழிலில் இருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம்.

ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஏனெனில், பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது; ஆங்கிலம் பயன்படும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும். அமெரிக்கர்களோடு போட்டியிட்டு அவர்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு அமெரிக்கர்களின் மொழியில் பேச நமது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு 1,700 ஆங்கில வழி பள்ளிகளை திறந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.