இந்தியை திணிக்க முயலும் அமித் ஷாவுக்கு ஸ்டாலின், சித்தராமையா, குமாரசாமி, ஓவைசி கண்டனம்!

”ஒரே நாடு ஒரே மொழி! அது இந்தி மொழி தான்” எனும் பொருள்பட கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக, கர்நாடக, தெலுங்கானா, மேற்கு வங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

திடீரென்று இன்று அமித்ஷா கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சி. அது முடிந்த மறுநாள் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா:

நாட்டின் தேசிய மொழி இந்தி என்ற பொய்யை முதலில் நிறுத்த வேண்டும். கன்னடத்தைப் போல நாட்டில் உள்ள 22 மொழிகளில் இந்தியும் ஒன்று அவ்வளவு தான். பொய்யான மற்றும் தவறான தகவலால் ஒரு மொழியை உங்களால் திணிக்க முடியாது. மொழி என்பதை ஒவ்வொருவரும் விரும்பி கற்க வேண்டுமே தவிர, யாரும் திணிக்க கூடாது.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி:

இந்தி தினம் போல கன்னட தினம் எப்போது கொண்டாடப் போகிறீர்கள்? இந்தியைப் போல அதுவும் ஒரு அதிகாரபூர்வ மொழி தானே. இந்த கூட்டாட்சியில் கர்நாடக மக்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஐதராபாத் எம்.பி. அசாசுதீன் ஓவைசி:

இந்தியர் எல்லாருக்கும் தாய்மொழி இந்தி அல்ல. இந்த தேசத்தில் பலருடைய தாய்மொழிகளையும், பன்முகத் தன்மையையும் அங்கீகரிக்க முயலுங்கள். ஒவ்வொரு இந்தியரும் விரும்பிய தனித்துவமான மொழியை, கலாச்சாரத்தை தேர்வு செய்ய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29 உரிமை வழங்கியுள்ளது. இந்தி, இந்து, இந்துத்துவாவைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரியது.