பாசிசம் படித்த ஸ்கூலில் ஹெட்மாஸ்டரே பார்ப்பனியம்தான்!

ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோருடன் ஆர்எஸ்எஸ்ஸை ஒப்பிடுகிறோம். ஆனால் அவர்களையும் விஞ்சும் விஷயம் ஒன்று ஆர்எஸ்எஸ்ஸிடம் இருக்கிறது.

ஹிட்லரும் முசோலினியும் முதல் உலகப் போரில் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். தேசியவாதம் என அவர்கள் பேசியது பிரச்சினை என்றாலும் பேசியதில் அவர்கள் கொஞ்சமேனும் நேர்மை கொண்டிருந்தார்கள்.

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கெடுக்கவில்லை. நாட்டுப்பற்று என்கிற பெயரில் ராணுவத்துக்குக் கூட ஆள் சேர்த்ததில்லை.

ஆனால் தற்போது நிலைமை என்ன?

கொடி ஏற்ற வேண்டுமென மோடி சொன்ன பிறகு, ஊர் ஊராக சென்று பாஜகவினர் கொடிகளை விநியோகித்து வீடுகளில் இந்தியக் கொடியை ஏற்றும் நிர்பந்தத்தை மக்களுக்கு  உருவாக்கியுள்ளனர்.

ஹிட்லரிடமும் முசோலினியிடமும் முழுமையாக பூசணிக்காய் இருக்கவில்லை. ஆனால் இவர்களிடம் முழுப் பூசணிக்காயும் இருக்கிறது. அதை, நாம் பார்த்திருக்கும்போதே சோற்றில் மறைக்கிறார்கள். பிறகு பூசணிக்காயே இல்லை எனச் சொல்கிறார்கள்.

அவர்களின் தேசியவாதத்தில் துளி நேர்மையில்லை. நாட்டுச்சேவை என நம்பப்படும் எந்த விஷயத்திலும் அவர்களின் பங்களிப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஆனால் வந்து நம்மை கொடி ஏற்றி தேசபக்தியை நிரூபிக்கச் சொல்கிறார்கள்.

வீட்டுக்குள் புகுந்துகொண்டு வீட்டின் மீது வீட்டுக்காரன் கொண்டிருக்கும் உரிமையை நிரூபிக்கச் சொல்லும் தடித்தனம்!

அத்தகைய மொடாமுழுங்கித்தனத்துக்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நீண்ட வரலாறு இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. அதிகாரம் செலுத்தியே வந்த திமிரும் கொழுப்பும் அகம்பாவத் தொடர்ச்சியும் இருக்கிறது.

இந்தியாவை வேத நாகரிகம் என சுவீகரிக்க முயன்ற கயமை அது.

இட ஒதுக்கீடு தவறு எனக் கதறிவிட்டு தனக்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டு பல்லிளிக்கும் திருட்டுத்தனம் அது.

தன்னை ஆசாரமாக்கி பிறரை அபச்சாரமாக்கும் கயமை அது.

அபச்சாரமாக்கியோரை பிறகு தன் லாபத்துக்காக ‘ஹிந்துவாக ஒன்றிணைவோம்’ என ஆசை காட்டும் தூண்டில் பொறி அது.

அதற்கென ஒரு இயங்குமுறை இருக்கிறது. ஓர் இறுதி நோக்கமும் இருக்கிறது. இரண்டும் நமக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் அது நடக்கிறது.

காரணம் சமூகத்தில் அது கொண்டிருக்கும் பீடம்!

அது ஹிட்லருக்கும் முசோலினிக்கும் அவர்களது நாட்டுச் சமூகங்கள் உருவாக்கி வைத்திராத பீடம்!

அந்த பீடத்தைத் தக்க வைக்கவே ஆர்எஸ்எஸ்!

ஆர்எஸ்எஸ்ஸை இயக்கும் தத்துவம் பார்ப்பனீயம்!

வரலாற்றில் பல ஹிட்லர்களையும் முசோலினிகளையும் உருவாக்கிய தத்துவம், பார்ப்பனீயம்!

பாசிசம் படித்த ஸ்கூலில் ஹெட்மாஸ்டரே பார்ப்பனியம்தான்!

Rajasangeethan