ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் 74.79% வாக்குப்பதிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஒன்றிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் 73 பேர் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தல் பணியாற்றியது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர் பரப்புரை நேற்றுமுன்தினம் (25.02.2023 மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்காக 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கச்சேரி வீதி வாக்குச்சாவடியிலும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியிலும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், மதரசா பள்ளி வாக்குச்சாவடியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், கலைமகள் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராஜாஜிபுரம் பகுதியில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழக்கப்பட்டு, இரவு வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுயில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 74.79 சதவீதமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர்.

மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல், வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இறுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.