எலக்சன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பாவெல் நவகீதன், திலீபன், தயாளன், ராஜீவ் ஆனந்த், குலோத்துங்கன் உதயகுமார்,  நாச்சியாள் சுகந்தி மற்றும் பலர்

இயக்கம்: தமிழ்

ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு

படத்தொகுப்பு: சி.எஸ்.பிரேம் குமார்

இசை: கோவிந்த் வசந்தா

தயாரிப்பு: ’ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா

வெளியீடு: ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ பி.சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

மன்னராட்சி காலத்திலேயே, கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, தேர்தல் முறையைப் கடைப்பிடித்த மாண்பு கொண்டது தமிழினம். ஓட்டுச்சீட்டு முறை, வாக்குப்பதிவு எந்திர முறை போன்றவை புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே, சோழர்கள் ஆட்சிக் காலத்திலேயே, ‘குடவோலை முறை’ என்ற தேர்தல் முறையைப் பயன்படுத்தி கிராம மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்தார்கள் என்பது வரலாறு. கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை இம்முறை தமிழ்நாடெங்கும் நடைமுறையில் இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக, கி.பி. 907 முதல் 955 வரை அரசாட்சி செய்த முதலாம் பராந்தக சோழன் காலத்துக்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் – காஞ்சிபுரம் அருகே உள்ள உத்தரமேரூரில் இரண்டு, தஞ்சாவூர் பள்ளிப்பாக்கம் கிராமத்தில் ஒன்று – கிடைத்துள்ளன. இத்தகைய வரலாற்றுச் சிறப்பும், உன்னத ஜனநாயக மரபும் கொண்ட தமிழ்க்குடியில் தற்போது சாதியும், பணமும் புகுந்து விளையாடி உள்ளாட்சித் தேர்தல்களை ரத்தக்காடாக்கி சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்பதை வேதனையோடும், இதை களைந்து, சமூகநீதிக்கு உகந்ததாக உள்ளாட்சித் தேர்தல்களை மாற்ற வேண்டும் என்ற வேட்கையோடும் படைக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது ‘எலக்சன்’ திரைப்படம்.

இப்படக்கதை வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நல்லூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). ’தமிழ்நாடு மக்கள் கழகம்’ என்ற மிகப் பெரிய அரசியல் கட்சியில், இளவயது முதல் சுமார் நாற்பது ஆண்டு காலமாக அடிமட்டத் தொண்டராக இருப்பவர். கட்சிக் கரை போட்ட வேட்டி – துண்டு அணியாமல் எங்கும் போக மாட்டார். அந்த அளவுக்கு தீவிரப் பற்றாளர். ஆழ்ந்த விசுவாசி.

நல்லசிவத்தின் நெருங்கிய நண்பரும், அதே கட்சியைச் சேர்ந்தவருமான தணிகாசலம் (தயாளன்), உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு, கட்சித் தலைமையை அணுகுகிறார். நண்பர் தணிகாசலத்துக்கு சீட் கிடைத்துவிடும்; அவருக்காக உழைத்து, அவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லசிவமும் இருக்கிறார். ஆனால், கட்சித் தலைமையோ அந்த சீட்டை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிடுகிறது. இதை ஏற்க மனமில்லாத தணிகாசலம், சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். நல்லசிவம் யாரை ஆதரிக்கிறாரோ, அவரை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்ற நிலையில், தன்னை ஆதரிக்குமாறு நல்லசிவத்தை வேண்டுகிறார் தணிகாசலம். ஆனால் உண்மைத் தொண்டரான நல்லசிவமோ, கட்சித் தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அவருக்காக உழைத்து, அவரை ஜெயிக்க வைக்கிறார். தோல்வியைத் தழுவும் தணிகாசலம், நல்லசிவத்தை பகையாளியாக பாவிக்கத் தொடங்குகிறார்.

நல்லசிவத்தின் மகனான நாயகன் நடராசன் என்ற ராசுவும் (விஜய் குமார்), தணிகாசலத்தின் மகள் செல்வியும் (ரிச்சா ஜோஷி) சிறு வயதிலிருந்தே காதலித்து வருகிறார்கள். ஆனால் தணிகாசலம், தேர்தல் பகையை மனதில் கொண்டு, சாதி பேதத்தைச் சுட்டிக் காட்டி, “என் மகளை நல்லசிவம் மகனுக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிடுவதோடு, மகள் செல்வியை ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணமும் செய்து வைத்து விடுகிறார். காதல் தோல்வியில் துவண்டு, பின்னர் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடராசனுக்கு, அவரது பெற்றோர், ஹேமா (ப்ரீத்தி அஸ்ரானி) என்ற பள்ளிக்கூட ஆசிரியையை பெண் பார்த்து, பேசி, மணம் முடித்து வைக்கிறார்கள்.

அடுத்த உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிட நல்லசிவம் விரும்புகிறார். ஆனால், அவருக்கு எந்த பதவியோ, அங்கீகாரமோ தராமல், அவரை வெறும் அடிமட்டத் தொண்டராகவே பாவிக்கும் கட்சித் தலைமை, ஒரு தலைவரின் மகனுக்கு சீட் கொடுத்துவிடுகிறது. “இந்த கட்சியில் தலைவரின் மகன் தான் தலைவராக வர முடியும்; தொண்டனும், அவன் மகனும் என்றைக்கும் தொண்டன் தான்” என்ற கேலிப் பேச்சுகள் எழ, இதைக் கேட்டு நல்லசிவத்தின் மருமகனும், நடராசனின் சகோதரி கணவருமான கனி (பாவெல் நவகீதன்) கொதிப்படைகிறார். அவர் ஊக்கப்படுத்தி தூண்டிவிட, தனக்கு அரசியலில் நாட்டம் இல்லாத போதிலும், கேலிப் பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் நடராசன். ஆனால் நல்லசிவம், கட்சித் தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, மகனென்றுகூட பாராமல், நடராசனை ஆதரிக்க மறுத்து, கட்சித் தலைமை சுட்டிக்காட்டும் வேட்பாளரை ஆதரிக்கிறார்.

தேர்தல் முடிவு என்ன? நடராசன் ஜெயித்தாரா, தோற்றாரா? தேர்தலில் குதித்ததால் நடராசனுக்கு யார் யாரோடெல்லாம் பகை ஏற்பட்டது? அதன் விளைவுகள் என்ன? அதை நடராசன் எப்படி எதிர்கொண்டார்? என்பன போன்ற கேள்விகளுக்கு அடி-தடி, வெட்டு-குத்து-காயம்-கொலை என ரத்தம் சொட்டச் சொட்ட விறுவிறுப்பாக விடை அளிக்கிறது ‘எலக்சன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் நடராசன் என்ற ராசு கதாபாத்திரத்தில் விஜய் குமார் நடித்திருக்கிறார். ’பாய் நெக்ஸ்ட் டோர்’ போல தோற்றமளித்து, இன்றைய சாமானிய இளைஞர்களைப் பிரதிபலித்திருக்கிறார். ஆரம்பத்தில் அரசியலில் நாட்டமில்லாமல் காதலில் ஈடுபாடு கொண்டவராக ஜமாய்க்கும் விஜய் குமார், தேர்தலில் குதித்த பிறகு இளம் அரசியல்வாதியாக இயல்பான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். கோபாவேசத்துடன் அதிரடியில் இறங்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் பொறி பறக்க பட்டையைக் கிளப்பியிருக்கிறார். எமோஷனலாக காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகனின் காதலி செல்வியாக நடித்திருக்கும் ரிச்சா ஜோஷி, திரையில் குறைவான நேரமே வந்தாலும் குறைவின்றி நடித்திருக்கிறார். நிர்பந்தம் காரணமாக பஞ்சாயத்தார் முன்னிலையில், “நீ எனக்கு வேணாம்” என்று கனத்த இதயத்துடன் நாயகனை உதறிவிட்டுப் போகும்போது, கடைசியாக ஒரு முறை திரும்பிப் பார்ப்பாரே… அந்த பார்வை இன்னும் நம் கண்ணுக்குள் இருக்கிறது.

பள்ளிக்கூட ஆசிரியையாக, நாயகனின் மனைவி ஹேமாவாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். அவர் அறிமுகமான ’அயோத்தி’ படத்தைப் போலவே இதிலும் முக்கியமான, அழுத்தமான கதாபாத்திரம். அதை சரியாகப் புரிந்துகொண்டு, அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவருக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பக்கபலமாக நின்று, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.

நாயகனின் அப்பாவாக, முக்கிய அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டர் நல்லசிவமாக வரும் ஜார்ஜ் மரியான், தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். (படத்தில் அவர் தன் மகனுக்கு மொழிப்போர் தியாகி நடராசனின் பெயரை வைத்திருப்பதிலிருந்து அவர் எந்த கட்சிக்காரராக இருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. நிஜத்தில் அந்த கட்சி மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், குறைகள் களையப்படத் தான் வேண்டும் என்றாலும், அக்கட்சியால் தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்நாட்டுக்கு விளைந்திருக்கும் நற்பயன்களை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது; குறைத்து மதிப்பிடவும் கூடாது.)

நாயகனின் சகோதரியின் கணவர் கனியாக வரும் பாவெல் நவகீதன், தனித்துவமான கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனம் ஈர்க்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் நாச்சியாள் சுகந்தி, தணிகாசலமாக வரும் தயாளன், சுதாகராக வரும் திலீபன், மூர்த்தியாக வரும் ராஜீவ் ஆனந்த், தியாகுவாக வரும் குலோத்துங்கன் உதயகுமார் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனோடும் நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்பு கொண்டது உள்ளாட்சி அமைப்பு. அது தான் ஒரு ஊரின் / ஒரு தனிநபரின் இன்றியமையாத தேவைகளை சேவைகளாகச் செய்து கொடுக்கிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்புக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தலில், சாதியாதிக்கவாதிகளும், பணம் படைத்தவர்களும் செய்யும் அட்டூழியங்களையெல்லாம் வேதனையுடன் நுணுக்கமாக ஆராய்ந்து, கதை – திரைக்கதைக்குள் அவற்றை கொண்டு வந்து, யதார்த்தத்துக்கு நெருக்கமாக கதாபாத்திரங்களைப் படைத்து, போரடிக்காமல், விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் தமிழ். பெரிய கட்சிகளின் தலைமைகள் தங்கள் சுயநலனுக்காக அடிமட்டத் தொண்டர்களை எந்த நிலையில் வைத்திருக்கின்றன என்பதை சமரசமின்றி துணிந்து சொன்னதற்காகவும், உள்ளாட்சித் தேர்தலை சமூகநீதிக்கு உகந்ததாக கொண்டு செல்ல வேண்டிய திசையை படத்தின் இறுதியில் கோடிட்டு காட்டியதற்காகவும் இயக்குநர் தமிழை பாராட்டலாம். நடிகர் விஜய் குமார், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோருடன் சேர்ந்து அவர் எழுதியிருக்கும் பல வசனங்கள் கருத்தாழம் மிக்கவை; பல காட்சிகளில் கைதட்டல் பெறுபவை.

கோவிந்த் வசந்தாவின் இசையும், மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘எலக்சன்’ – வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!