டிஎஸ்பி – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், பாகுபலி பிரபாகர், இளவரசு, ஷிவானி நாராயணன், புகழ், தீபா சங்கர், கார்த்திகேயன் சந்தானம், ஆதிரா பாண்டிலட்சுமி, கு.ஞானசம்பந்தம், விமல் (கௌரவ வேடம்) மற்றும் பலர்

இயக்கம்: பொன்ராம்

இசை: டி.இமான்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம்

பத்திரிகை தொடர்பு: நிகில்

வழக்கமான ‘போலீஸ் ஸ்டோரி’ டெம்ப்ளேட்டில் உருவாகியிருக்கும் படம் இது. சாதாரண இளைஞன் முரட்டு தாதாவோடு மோத நேர்ந்தால் என்ன ஆகும்? அதே இளைஞன் போலீஸ் அதிகாரியாகவும், அதே தாதா எம்.எல்.ஏ.வாகவும் வளர்ந்து மோதிக்கொண்டால் என்ன ஆகும்? என்பதை உள்ளடக்கியது இதன் அடித்தளக் கதை.

திண்டுக்கல்லில் பூக்கடை நடத்துபவராகவும், பூ வியாபாரிகள் சங்கத் தலைவராகவும் இருப்பவர் இளவரசு. இவரது மகன் தான் நாயகன் விஜய் சேதுபதி. தன் மகன் அரசாங்க உத்தியோகத்தில் மட்டுமே சேர வேண்டும் என்று இளவரசு ஆசைப்படுவதால், இதற்கான முயற்சியில் விஜய் சேதுபதி ஒருபுறம் ஈடுபட்டுக்கொண்டே மறுபுறம் ஜாலியாக சுற்றித் திரிகிறார். அப்போது அவருக்கு கல்லூரி மாணவியான நாயகி அனுகீர்த்தி வாஸுடன் பழக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் அது காதலாகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் ஏற்பாடாகிறது. இத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் சேதுபதியின் நண்பர்கள் வெளியூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வருகிறார்கள். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அவர்களுக்கும், ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்கிற  முரட்டு தாதாவான பாகுபலி பிரபாகருக்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதலில் விஜய் சேதுபதி தாதா பிரபாகரை மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பிரபாகர், விஜய் சேதுபதியை கொன்றே தீருவேன் என்று கொந்தளிக்கிறார்.

தங்கையின் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒதுங்கி மறைந்து வாழும் விஜய் சேதுபதி, பின்னர் போலீஸ் அதிகாரியாக – டி.எஸ்.பி.யாக – திண்டுக்கல் திரும்புகிறார். இப்போது தாதா பிரபாகர் செல்வாக்குள்ள சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான மோதல் உக்கிரமமான புதுவடிவம் எடுக்கிறது.

இதற்கிடையில், விஜய் சேதுபதிக்கும் அனுகீர்த்தி வாஸுக்கும் இடையிலான காதலின் குறுக்கே திடீர் வில்லனாக வருகிறார் விமல்.

எம்.எல்.ஏ vs டி.எஸ்.பி. மோதலில் வென்றவர் யார்? அனுகீர்த்தி வாஸின் கரம் பிடித்தவர் யார்? என்ற கேள்விகளுக்கு எல்லோருக்கும் தெரிந்த பதில்களையே சுவாரஸ்யமின்றி  சொல்லுகிறது மீதிக்கதை.

வாஸ்கோடகாமா என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் முதலில் சாதாரண இளைஞராகவும், பின்னர் போலீஸ் துறை டி.எஸ்.பி.யாகவும் வரும் விஜய் சேதுபதி தனது வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் தாதாவாகவும், பின்னர் எம்.எல்.ஏ.வாகவும் வரும் பாகுபலி பிரபாகரும் வழக்கம்போல நடித்திருக்கிறார். நாயகியாக வரும் அனுகீர்த்தி வாஸ் தேறுவது கடினம். புகழ், சிங்கம் புலி, தீபா உள்ளிட்டோர் காமெடி என ஏதோ பண்ணுகிறார்கள். சிரிப்பு தான் வரவில்லை. இளவரசு, ஆதிரா பாண்டிலட்சுமி, கு.ஞானசம்பந்தம் ஆகியோர் அனுபவ நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். முரட்டு மீசையுடன் கௌரவ வேடத்தில் வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விமல்.

டி.இமான் இசையில் ”நல்லா இரும்மா” பாடல் ஓ.கே. ரகம். பின்னணி இசை இரைச்சல்.

சிறந்த நடிப்பை வழங்கக்கூடிய விஜய் சேதுபதி உள்ளிட்ட நல்ல நடிகர்கள், டி.இமான் உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய தயாரிப்பு நிறுவனம் என பல பிளஸ்கள் இருந்தும், அரதப்பழசான கதை, அதற்கும் பழசான திரைக்கதை, சுவாரசியமற்ற காட்சிகள் என எல்லாவற்றிலும் சொதப்பி படத்தைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

‘டி.எஸ்.பி’ – ஏன் தோற்றது என்பதை தெரிந்துகொள்ள ஒருமுறை பார்க்கலாம்!

 

Read previous post:
0a1a
”தாஜ்மஹாலை ஷாஜஹான் தான் கட்டினாரா?”: உச்ச நீதிமன்றத்தில் வினோத வழக்கு! நீதிபதிகள் கொந்தளிப்பு!!

தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினாரா என்பதை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள

Close