திரௌபதி 2 – விமர்சனம்

நடிப்பு: ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசூடன், நட்டி நடராஜ், வேல ராமமூர்த்தி, சரவண சுப்பையா, பரணி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், தேவயானி ஷர்மா, திவி வைத்தியநாதன், அருணோதயன் லஷ்மணன், தர்மராஜ் மாணிக்கம் மற்றும் பலர்

இயக்கம்: மோகன் ஜி

எழுத்து: பத்மா சந்திரசேகர், மோகன் ஜி

ஒளிப்பதிவு: பிலிப் கே சுந்தர்

படத்தொகுப்பு: தேவராஜ்

இசை: ஜிப்ரான்

கலை இயக்கம்: எஸ்.கமல்

சண்டை அமைப்பு: ஆக்ஷன் சந்தோஷ்

தயாரிப்பு: ‘நேதாஜி புரொடக்ஷன்ஸ்’ சோழ சக்ரவர்த்தி

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

2020ஆம் ஆண்டு, ரிச்சர்ட் ரிஷி நடிப்பில், “நாடகக்காதல்” என்று வர்ணிக்கப்படும் ஏமாற்றுக்காதலை மையமாக வைத்து இயக்குநர் மோகன் ஜி இயக்கிய ‘திரௌபதி’ திரைப்படம், பலத்த சர்ச்சையைக் கிளப்பி மிகப்பெரிய பேசுபொருள் ஆன அதேவேளை, பரவலாக வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியை ஈட்டியது. அந்த வெற்றி தந்த ஊக்கத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் மோகன் ஜி அதே ரிச்சர்ட் ரிஷியை நாயகனாக வைத்து ‘திரௌபதி 2’ என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்.

படக்கதை நிகழ்காலத்தில் ஆரம்பமாகிறது. கதையின் நாயகன் பிரபாகர் (ரிச்சர்ட் ரிஷி) வாத்தியார். மனைவியை இழந்தவர். தனது குழந்தையுடன் விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற ஊரில் வசித்து வருகிறார். அந்த ஊரிலுள்ள சில இந்துக்களின் பூர்விக நிலங்களை இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான வக்ஃபு வாரியம் அபகரித்துக் கொண்டதாக சர்ச்சை வெடிக்கிறது. அவ்விதம் அபகரித்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலங்களில் பழங்கால அம்மன் கோயிலும் ஒன்று. சிக்கலில் சிக்கிக்கொண்ட நிலங்களை மீட்டுத் தரக் கோரி ஊர்மக்கள் போராட, அவர்களுக்கு ஆதரவாக வாத்தியார் பிரபாகர் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார். இதன் மூலம் இந்த போராட்டச் செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது.

இந்த செய்தியை வெளிநாட்டில் தொழிலதிபராக இருக்கும் சேந்தமங்கலத்துக்காரர் ஒருவர் தொலைக்காட்சியில் பார்க்கிறார். தனது சொந்த ஊரில் அம்மன் கோயில் பாழடைந்து கிடப்பதையும் கவனிக்கிறார். அந்த கோயிலைப் புதுப்பித்துப் புனரமைப்பதற்கு நிதியுதவி செய்ய முன்வரும் அவர், அப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக தனது இரண்டு மகள்களை சேந்தமங்கலத்துக்கு அனுப்பி வைக்கிறார். அப்பெண்களுக்கு வழிகாட்ட வாத்தியார் பிரபாகர் முன்வருகிறார்.

பிரபாகரும் அவ்விரு பெண்களும் பாழடைந்த அந்த அம்மன் கோயிலுக்குள் நுழைகிறார்கள். உடனே மூத்த பெண்ணின் (ரக்‌ஷனா) உடலுக்குள் அமானுஷ்ய சக்தி புகுந்தது போல் அவரது குரல், பார்வை, முகபாவனை அனைத்தும் திடீரென விகாரமாக மாறுகிறது. பழைய ராஜா-ராணி திரைப்படங்களில் வரும் நாயகி போல தூய தமிழில் ஆவேசமாகப் பேச ஆரம்பிக்கிறார். “நான் திரௌபதி தேவி…” என்கிறார். பிரபாகரைச் சுட்டிக்காட்டி ‘ நீ என் பதி…” என்கிறார். ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டு விழிக்கும் பிரபாகருக்கு, சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் முன்ஜென்மக் கதையைக் கூறத் தொடங்குகிறார். (ஃபிளாஷ்பேக்…)

… அது கி.பி. 14ஆம் நூற்றாண்டு. கர்நாடக மாநிலம் மலநாடு என்ற பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹொய்சாளர் வம்சத்தில் வந்த மூன்றாம் வீர வல்லாள மகாராஜா (நட்டி நடராஜ்), திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக் கொண்டு அரசாட்சி நடத்தி வருகிறார். அவரது வீரம் செறிந்த கருடப்படையில், எதற்கும் அஞ்சாத வீர சிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி) இணைந்து பணியாற்றுகிறார். அந்த வீர சிம்ம காடவராயரின் மனைவி தான் திரௌபதி தேவி (ரக்‌ஷனா). நாட்டுப்பற்றும், ராஜவிசுவாசமும் மிகுந்த பெண்மணி.

அக்காலத்தில், மதுரையை மையமாகக் கொண்ட மதுரை சுல்தான் கியாசுதீன் தம்கானி (தினேஷ் லம்பா) தலைமையிலான இஸ்லாமியப் படைகள், மிதமிஞ்சி வரி வசூலிக்கவும், கட்டாய மதமாற்றம் செய்யவும் மக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். கொலை செய்கிறார்கள். அப்பாவிப் பெண்களைக் கடத்தி, அவர்களது கற்பை சூறையாடுகிறார்கள். இதற்கு இணையாக, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு வட இந்தியா முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் (சிராக் ஜானி) கவனம் தமிழகத்தின் மீது விழ, அவரும் இங்கு வருகிறார். இந்த இரண்டு ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகளால் சொல்லொணாத் துயர் அனுபவிக்கும் மக்களின் வாழ்க்கை முற்றிலும் சீர்குலைகிறது. ஒரு கட்டத்தில் எதிரிகளின் சதி மற்றும் துரோகத்தால் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா படுகொலை செய்யப்பட, குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பு முழுமையாக வீர சிம்ம காடவராயரின் தோள்களில் விழுகிறது.

இதன்பின்பு டில்லி சுல்தான் மற்றும் மதுரை சுல்தான் ஆகிய எதிரிகளை எதிர்த்துப் போராடி, குடிமக்களை வீர சிம்ம காடவராயர் காப்பாற்றினாரா? இந்த போராட்டத்தில் அவரது மனைவி திரௌபதி தேவியின் பங்கு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு புனைவையும், வரலாறையும் கலந்து விடை அளிக்கிறது ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, நிகழ்காலத்தில் வாத்தியார் பிரபாகராகவும், சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வீர சிம்ம காடவராயராகவும் ரிச்சர்ட் ரிஷி நடித்திருக்கிறார். அவர் கடுமையாக உழைத்து அந்தந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்திருப்பது பாராட்டுக்கு உரியது. காதல் காட்சிகளில் கனிவாகவும், வீர வசனம் பேசும் காட்சிகளில் அனலாகவும், சண்டைக் காட்சிகளில் மிரட்டலாகவும் நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் மனங்களில் சுலபமாக இடம்பிடித்து விடுகிறார்.

நாயகியாக, வீர சிம்ம காடவராயரின் மனைவி திரௌபதி தேவியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார். பார்வைக்கு அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு. நாட்டுப்பற்றும், ராஜவிசுவாசமும் கொண்ட பெண்மணியாக இருந்தும் துரோகிகளின் வலையில் விழுந்து கணவனையே சந்தேகித்து உதறித் தள்ளுவது, பிறகு உண்மை தெரிந்து வெகுண்டெழுவது, கிளைமாக்ஸில் துணிச்சலாக வில்லனை எதிர்கொள்வது என கனம் மிகுந்த திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, அதற்கு உயிரூட்டி, அருமையாக நடித்திருக்கிறார்.

மூன்றாம் வல்லாள மகாராஜாவாக வரும் நட்டி நடராஜ், மதுரை சுல்தான் ஜியாசுதீன் தம்கானியாக வரும் தினேஷ் லம்பா, டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்காக வரும் சிராக் ஜானி, துக்ளக்கின் மனைவியாக வரும் தேவயானி ஷர்மா, நட்புக்கு இலக்கணமான ராஜநாராயண சம்புவராயராக வரும் வேல ராமமூர்த்தி, கோவிந்தனாக வரும் பரணி, அம்மன் கோயில் பூசாரியாக வரும் தர்மராஜ் மாணிக்கம், மற்றும் சரவண சுப்பையா, ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் கவுரங், திவி வைத்தியநாதன், அருணோதயன் லஷ்மணன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை – வசனத்தை பத்மா சந்திரசேகர், மோகன் ஜி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். 14ஆம் நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளோடு ருசிகரமான புனைவுகளையும் கலந்து, தங்களுக்கு நியாயம் என்று தோன்றிய கண்ணோட்டத்தில், சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

இயக்குநர் மோகன் ஜி இதை இயக்கியிருக்கிறார். தொய்வில்லாமல், பார்வையாளர்களுக்கு சோர்வு தட்டாமல், சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்று, தானொரு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் என்பதை நிரூபித்திருக்கிறார். கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் இத்தனை பிரமாண்டமான படத்தைக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதே சமயம், தனது முந்தைய படங்களான ‘திரௌபதி 1’, ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசுரன்’ ஆகிய படங்களில் சில சர்ச்சைக்குரிய வலதுசாரிக் கருத்துக்களைக் கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானதைப் போல, இதிலும் அளவுக்கு அதிகமாக அவர் மதச்சாயம் பூசியிருப்பது ஆட்சேபனைக்கு உரியது.

இந்தியரோ, இந்தியர் அல்லாத அந்நியரோ, இம்மதத்தவரோ, அம்மதத்தவரோ, யார் படையெடுத்து வந்தாலும், அவர்கள் தாக்குதல் நடத்திய பிரதேசக் குடிமக்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல கொடுமைகளை நிகழ்த்தினார்கள் என்பது மறுக்க முடியாத உலகளாவிய வரலாற்று உண்மை. எனவே, இப்படக்கதையை எவ்வித மதச்சாயமும் இல்லாமல், வெகுமக்களின் கோணத்திலிருந்து நேர்த்தியாக திரைக்கதை அமைத்துச் சொல்லியிருந்தால் அற்புதமான படைப்பாக நிச்சயம் வந்திருக்கும். இனிமேல் இயக்கும் படங்களுக்காகவாவது இயக்குநர் மோகன் ஜி இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பது நமது அன்பான வேண்டுகோள்.

ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தர் வரலாற்றுக் காட்சிகளை மனதை மயக்கும் வண்ண ஓவியம் போல் திரையில் வரைந்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. தேவராஜின் படத்தொகுப்பு, எஸ்.கமலின் கலை இயக்கம், ஆக்‌ஷன் சந்தோஷின் சண்டை அமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில் நுட்பங்களும் படத்தின் தரத்துக்கும், நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘திரௌபதி 2’ – வரலாறும் புனைவும் கலந்த அருமையான பொழுதுபோக்குத் திரைப்படம்; அள்ள வேண்டியதை அள்ளி, தள்ள வேண்டியதைத் தள்ளி, கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 4/5