”கேடாய் முடியும் கூடா நட்பு”க்கு 10 தொகுதிகள்: தி.மு.க. ஒதுக்கியது!

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் இன்று (புதன்) மாலை சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள், ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”கூடா நட்பு கேடாய் முடியும்” என கருணாநிதியை சுயவிமர்சனம் செய்ய வைத்த காங்கிரஸ் கட்சிக்கு தற்போது மிக அதிகமாக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதை பெரும்பாலான தி.மு.க.வினரே ரசிக்கவில்லை. 2009 மே ஈழ இனப்படுகொலைக்குப் பின்னர் இளந்தலைமுறை தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை தமிழின எதிரியாக கருதுகிறார்கள். மேலும், தமிழக காங்கிரஸ் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்த்தும், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 8 தொகுதிக்ளில் மட்டுமே வெற்றி பெற்றதும் அக்கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் தரை தட்டிவிட்ட்து என்பதையே காட்டுகிறது. இந்நிலையில் தற்போது காங்கிரசுக்கு புதுவை உட்பட 7 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பெரும்பாலான தி.மு.க.வினர் கருத்து.