டீசல் – விமர்சனம்

நடிப்பு: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய்குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சண்முகம் முத்துசாமி

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம்.நாதன் & எம்.எஸ்.பிரபு

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

ஸ்டண்ட்: ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர்

கலை: ரெம்போன் பால்ராஜ்

இசை: திபு நினன் தாமஸ்

தயாரிப்பு: தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட், எஸ்பி சினிமாஸ் – தேவராஜுலு மார்க்கண்டேயன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

தமிழ்நாட்டு பூர்வக்குடிகளான மண்ணின் மைந்தர்களின் பல உண்மைக் கதைகள், இன்னும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாமலே இருக்கின்றன. அத்தகைய ஓர் உண்மைக் கதையைக் கையிலெடுத்து, அதில் கற்பனையாக புனைவுகள் சேர்த்து, ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் இந்த ’ ‘டீசல்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.

1979ஆம் ஆண்டு. சென்னை துறைமுகத்திலிருந்து தொலைதூரத்தில் உள்ள எண்ணை சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணையை எடுத்துச் செல்வதற்காக வடசென்னை கடற்கரை நெடுகிலும் ராட்சதக் குழாய்களைப் பதிக்கிறது அரசு. இது தங்கள் கிராமங்களையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்று மீனவ மக்கள் கொதித்தெழுந்து, இதற்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஆனால் காவல்துறை துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளைக் கையாண்டு, மீனவ மக்களை தோற்கடித்து வேறு பகுதிக்கு விரட்டியடிக்கிறது.

இதனால் மனக்காயம் அடைந்த மீனவர்களில் ஒருவரான மனோகரன் (சாய்குமார்), ராட்சச குழாயின் நடுவே துளை போட்டு, கச்சா எண்ணையைப் பெரிய அளவில் திருடி, ‘டீசல் மாஃபியா’வை கட்டியெழுப்புகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார். மேலும், பெற்றோரை இழந்த வாசு என்ற வாசுதேவனை தத்தெடுத்து மகனாக வளர்க்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கெமிக்கல் இன்ஜினியரான வாசு என்ற வாசுதேவன் (ஹரிஷ் கல்யாண்), தனது வளர்ப்புத் தந்தையின் டீசல் மாஃபியாத் தொழிலைத் தொடர்கிறார். இதனால் அவர் பெயரே ‘டீசல்’ என்றாகிறது. இந்நிலையில், அவருக்குப் போட்டியாக பாலமுருகன் (விவேக் பிரசன்னா) டீசல் மாஃபியா தொழிலில் இறங்க, பாலமுருகனுடன் காவல்துறை துணை ஆணையர் மாயவேலு (வினய் ராய்) கை கோர்க்கிறார். இதன்பின், யாருடைய கை ஓங்குகிறது என்ற போட்டியில் இரண்டு கோஷ்டிகளும் கடும் மோதலில் ஈடுபடுகின்றன.

இதனிடையே, பதான் (சச்சின் கெடேகர்) என்ற கார்ப்பரேட் முதலாளி, துறைமுகம் அமைப்பதற்காக, மீனவ மக்கள் தற்போது குடியேறி இருக்கும் நிலப்பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் அம்மக்களை அங்கிருந்தும் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனை எதிர்க்கும் டீசல் வாசு, மீனவ மக்களைத் திரட்டி, கார்ப்பரேட் மற்றும் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன் எடுக்கிறார்.

அதன்பின் என்ன நடந்தது? மக்கள் போராட்டம் வெற்றி பெற்று கார்ப்பரேட் முதலாளியான பதானை பின்வாங்க வைத்ததா, இல்லையா? டீசல் மாஃபியா தொழில் போட்டியில் மோதிக்கொண்ட டீசல் வாசு கோஷ்டியும், பாலமுருகன் கோஷ்டியும் இறுதியில் என்ன ஆனது என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘டீசல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.


நாயகன் டீசல் என்ற வாசு என்ற வாசுதேவனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். இதில் முதல்முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் அவர் அசல் மீனவராக வாழ்ந்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக சிரத்தை எடுத்து பின்னி பெடலெடுத்திருக்கிறார். நடனக் காட்சிகளில் லாகவமாகவும், எமோஷனல் காட்சிகளில் அழுத்தமாகவும் நடித்து நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்.

நாயகனின் வளர்ப்புத் தந்தை மனோகரனாக சாய்குமார் நடித்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் செம கெத்தாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

வஞ்சமும், வன்மமும் நிறைந்த பாலமுருகனாக வரும் விவேக் பிரசன்னா, மூர்க்கமான போலீஸ் அதிகாரி மாயவேலுவாக வரும் வினய் ராய், சுயநல வெறி பிடித்த கார்ப்பரேட் முதலாளி பதானாக வரும் சச்சின் கெடேகர் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

நாயகனைக் காதலிக்கும் வழக்கறிஞர் மலராக வரும் அதுல்யா ரவியும், மூர்க்கமான போலீஸ் அதிகாரி மாயவேலுவின் நியாய உணர்ச்சி கொண்ட மனைவி லட்சுமியாக வரும் அனன்யாவும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், ஜாகீர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இயல்பாக நடித்திருக்கிறது.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சண்முகம் முத்துசாமி. இதுவரை சொல்லப்படாத டீசல் மாஃபியா பிரச்சனையையும், துறைமுக கார்ப்பரேட் விவகாரத்தையும் கதையின் கருப்பொருளாக எடுத்துக் கொண்டதற்காக அவருக்கு நமது பாராட்டுகள். அவை வெறும் வடசென்னை மீனவர்களுக்கான பிரச்சனை மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான பிரச்சனை என்பதை உணர்ச்சிகரமாக விவரித்திருப்பது சிறப்பு. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம். எனினும், இயக்குநரின் சமூக அக்கறைக்கு நமது பாராட்டுகள்.

திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட். பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ்.பிரபு ஆகியோரின் ஒளிப்பதிவு கடலின் பிரமாண்டம், மீனவக் குப்பத்தின் வாழ்வியல், கச்சா எண்ணை குழாய் ஆகியவற்றின் காட்சிகளை அசத்தலாக பதிவு செய்திருக்கிறது.

சான் லோகேஷின் படத்தொகுப்பு, கருணை காட்டாமல் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்திருக்கலாம்.

ஸ்டன்ட் சில்வா, ராஜசேகர் ஆகியோரின் சண்டைக்காட்சிகள் அதிர வைக்கின்றன.

ராட்சதக் குழாய்கள், குடிசைக்கு நடுவே குரூட் ஆயில் எடுக்கும் லேப், கேன், குடிசைகள் என ரெம்போன் பால்ராஜின் கலை இயக்கம் ஸ்கோர் செய்திருக்கிறது.

‘டீசல்’ – தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை; அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

ரேட்டிங்: 3.5/5.