“97 சதவீத தலித்துகளுக்கு எதிராக பேசும் 3 சதவீத தலித்துகள்!” – எவிடன்ஸ் கதிர்

சில ஆண்டுகளுக்கு முன்பு கொட்டக்காச்சியேந்தல் பஞ்சாயத்து தலைவர் கருப்பன் அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் நாற்காலியில் உட்கார தடை விதிக்கின்றனர் என்கிற பிரச்சனை தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கருப்பன் அவர்களுக்கு எவிடன்ஸ் அமைப்பு சட்ட ரீதியாக தலையீடு செய்து உரிய நீதியினை பெற்றுக் கொடுத்தது.

இந்த பிரச்சனை உச்சத்தில் இருந்த சமயத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, “இது போன்று பாகுபாடு ரீதியாக ஒடுக்குகிறார்கள் என்று பரப்புரை செய்துகொண்டே இருக்காதீர்கள் கதிர். எங்காவது இது போன்று நடக்கும். அதை விட்டுவிடுங்கள். நாம் நம் மக்களை முன்னேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துவோம். பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்துகிற அரசியல் தேவையற்றது” என்றார்.

“உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. கருப்பனை நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு வருகிறேன். பிறகு இது குறித்து விரிவாக பேசலாம்” என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தேன். இதுவரை அந்த அதிகாரியிடம் நான் பேசியதில்லை.

சமீப காலமாக பார்க்கிறேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சில தொழிலதிபர்கள், சில உயர் அதிகாரிகள், சில அறிவுஜீவிகள் “பாதிக்கப்பட்டோர் அரசியல் தேவையற்றது” என்றும், “தீண்டாமை குறித்து பேசுவது அவசியமில்லாதது” என்றும் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், “நாம் ஏன் பெற வேண்டும்? கொடுக்கிற அளவிற்கு நாம் வளர வேண்டும்” என்றும் பேசுகின்றனர்.

இதையெல்லாம் எவரும் இங்கே மறுக்கவில்லை. ஆனால் கள நிலவரம் தெரியாமல், உண்மையை அறிந்தும் அறியாமல், இது போன்று மேம்படுத்துதல் அரசியலை மட்டும் மையப்படுத்தி, மீறல்களை மறைப்பது என்பது சமூக நீதியை கொடுத்துவிடாது.

நீங்கள் இடஒதுக்கீட்டில் வந்துவிட்டு, நீங்கள் அரசியல் பதவிகளை அனுபவித்துவிட்டு, நீங்கள் முக்கிய தொழில் சக்திகளோடு கூட்டாக இணைந்துகொண்டு வளர்ந்துவிட்டு நிற்பதனால் உங்கள் நிலையில் தான் எல்லா தலித்துகளும் இருக்கிறார்கள் என்று கருதுவது நியாயமல்ல, தர்மமுமல்ல.

வெறும் 3 சதவீத தலித்துகள் இன்றைக்கு உயர்ந்த பொறுப்பிற்கு வந்துவிட்டதனால் மற்ற 97 சதவீத தலித்துகளின் குரல்களை பதிவு செய்யவிடாமல் தடுப்பது வன்மம் என்பேன். சமூக நீதி, வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு போன்ற அனைத்தும் இணைந்து பெறுவது தான் உரிமையாகும். சிலர் அரசியல் சிவில் உரிமைகளில் பணி செய்வார்கள், சிலர் பொருளாதார உரிமையில் பணி செய்வார்கள், சிலர் கலை பண்பாட்டு தளத்தில் பணி செய்வார்கள். இத்தகைய ஆளுமை சக்திகள் இணைந்துதான் நம் மக்களை மேம்படுத்த வேண்டும்.

“கண்ணீரும் பிணங்களும் மட்டும் தான் கதிருக்கு தெரிகிறது. நம் சாதனைகள் தெரியவில்லையா?” என்று சிலர் என் காதுபட பேசுவதை கேட்கின்றேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் சாதனை செய்தால் கொண்டாடக்கூடியவன் நான். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவனுக்கு பாதிப்பு நடந்தால் அவற்றிற்கு எதிராக நீதி கிடைக்க போராட வேண்டும் என்று போராடக்கூடிய பலரில் நானும் ஒருவன். கொண்டாட்டம் எப்போதாவது கிடைக்கும். ஆனால் வலிகள் தினந்தோறும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதைவிட்டு வெளியே வாருங்கள் என்று பலர் என்னை அழைக்கின்றனர். அதற்கு பல மாற்று வழிகள் உண்டு. கல்வி, நிலம், வேலைவாய்ப்பு போன்ற பல உரிமைகள் கிடைப்பதனால் இந்த வன்கொடுமைகள் குறையும். ஆனால் அவையெல்லாம் 90 விநாடிக்குள் நடந்துவிடாது. பல ஆண்டுகள் இன்னும் சில தலைமுறைகள் தேவைப்படுகிறது. ஆகவே பொறுப்புணர்வோடுதான் இந்த பணியினை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.

ஜனநாயகம் என்பது ஓட்டப்பந்தயம் கிடையாது. சில தலித் ஆளுமைகள் 100 கி.மீ. வேகத்தில் ஓடுகிறார்கள். மகிழ்ச்சி. நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் தனியாகத்தான் ஓடுவீர்கள். யாரோடும் இணைய முடியாது. மற்ற 95 சதவீத தலித்துகள் 40 கி.மீ வேகத்தில் ஓடுகிறார்கள் என்று சொன்னால் அது அம்மக்களின் பிரச்சனையல்ல. இந்த சமூகம் அவர்கள் மீது ஆண்டாண்டு காலம் ஒடுக்கிய கடும் ஒடுக்குமுறையால் தான் இப்படி ஓடுகிறார்கள். ஆகவே அவர்களை 40 கி.மீ வேகத்தில் இருந்து 60 கி.மீ வேகத்திற்கு ஓட வைக்க முயற்சி செய்ய வேண்டும். நூறு கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கக்கூடிய நீங்கள் உங்கள் வேகத்தில் 40 கி.மீ குறைத்துவிட்டு அவர்களோடு 60 கி.மீ வேகத்தில் இணைந்து ஓட வேண்டும். அப்போதுதான் சாத்தியம். ஆக நான் 100 கி.மீ வேகத்தில் தான் ஓடுவேன் என்றால் ஓடுங்கள். உங்களை யாரும் இங்கே தடுக்கப் போவதில்லை. நான் 60 கி.மீ. வேகத்தில் தான் ஓடுவேன். எனக்கு பரிசை விட இணைந்து ஓடுவது முக்கியம்.

தனித்து இருப்பது வேறு, தனிமையாக இருப்பது வேறு. ஆனால் தனித்து இருக்கிறோம் என்கிற பெயரில் தனிமையாக இருக்கும் உங்களைப் பார்த்து என்னால் பரிதாபப்பட மட்டும் தான் முடியும்.

EVIDENCE KATHIR