சந்திரமுகி 2 – விமர்சனம்

நடிப்பு: ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன், விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சிருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, சாய் ஐயப்பன், சத்ரு, கார்த்திக் சீனிவாசன், சி.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்சீவ், மாஸ்டர் தர்ஷித், பேபி தீக்‌ஷா

எழுத்து & இயக்கம்: பி.வாசு

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

படத்தொகுப்பு: ஆண்டனி

இசை: எம்.எம்.கீரவாணி

தயாரிப்பு: ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ சுபாஸ்கரன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

2015ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி, மகத்தான வெற்றி பெற்று, வரலாறு படைத்த திரைப்படம் ‘சந்திரமுகி’. முதலில் பேய்ப்படம் போல் ஆரம்பித்து, பின்னர் ‘ஸ்பிலிட் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ என்ற மனநலப் பிரச்சனையை மையமாகக் கொண்ட படமாக அற்புதமாக உருமாறிய படம் அது. திகில், காதல், காமெடி, பாடல்கள், நடனம், ஆக்‌ஷன் என வெகுஜனங்களுக்கான அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்ததால் அது எல்லா தரப்பினரையும் மகிழ்வித்து வெள்ளிவிழா கொண்டாடியது.

அந்த ’சந்திரமுகி’ வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அதே பி.வாசு இயக்கத்தில், ஆனால் முருகேசனாக நடித்த வடிவேலு தவிர வேறு நடிகர் – நடிகைகள் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம், ‘மனநலப் பிரச்சனை’ என்றெல்லாம் ’கம்பி’ கட்டாமல், அச்சுஅசலான பேய்ப்படமாகவே, முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. இந்த ‘சந்திரமுகி 2’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

மிகப் பெரிய பணக்கார கூட்டுக்குடும்பத்தின் தலைவியாக இருக்கிறார் ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்). அவரது குடும்பத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து துயர சம்பவங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக, அக்குடும்பத்துக்குச் சொந்தமான காட்டன் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சிலர் இறக்கிறார்கள்; பலர் படுகாயம் அடைகிறார்கள். ரங்கநாயகியின் இளைய மகள் திவ்யா (லட்சுமி மேனன்) கார் விபத்தில் சிக்கி கால்கள் பாதிக்கப்பட்டதால், காலூன்ற முடியாமல், சக்கர நாற்காலியில் அமர்ந்து நகரும் நிலையில் இருக்கிறார். வேறு மதத்தவரை காதல் திருமணம் செய்ததால் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ரங்கநாயகியின் மூத்த மகள், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின் அகால மரணமடைகிறார். இத்யாதி… இத்யாதி…

“உங்கள் குலதெய்வமான துர்க்கையம்மனை வழிபட உங்கள் குடும்பம் மறந்துபோனதால் தான் இப்படிப்பட்ட துயர சம்பவங்கள் நடக்கின்றன. உங்கள் மூத்த மகளின் இரண்டு குழந்தைகள் உட்பட உங்களின் ரத்த சொந்தங்கள் மொத்தமும் ஒன்று திரண்டு குலதெய்வக் கோயிலுக்குப் போய், யாகபூஜை செய்து வழிபட்டால், எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார் ரங்கநாயகியின் குடும்ப ஜோதிடரான குருஜி (ராவ் ரமேஷ்).

இதன்படி, குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வக் கோயில் உள்ள வேட்டையபுரத்துக்கு கார்களில் கிளம்பிப் போகிறார்கள். மூத்த மகளின் இரண்டு பிள்ளைகளோடு (பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்சீவ்), அவர்களது கார்டியனான பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் செல்கிறார்.

குலதெய்வக் கோயில் பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கிறது. அதை சுத்தம் செய்து, புனரமைத்தபின் யாகபூஜை செய்து வழிபடலாம் என்றும், இந்த வேலைகள் முடியும் வரை முருகேசன் (வடிவேலு) பொறுப்பிலிருக்கும் வேட்டையபுர அரண்மனையை குத்தகைக்கு எடுத்து தங்கலாம் என்றும் முடிவு செய்கின்றனர்.

பல வருடங்களாகப் பூட்டிக்கிடந்த வேட்டையபுர அரண்மனைக்குள் ரங்கநாயகி குடும்பத்தினர் நுழைந்த பிறகு, அங்கே அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. அடைபட்டுக் கிடந்த சந்திரமுகியின் (கங்கனா ரனாவத்) ஆவி ஆக்ரோஷமாக வெளியே வருகிறது. அது குலதெய்வக் கோயிலை புனரமைக்க விடாமல் இடையூறு செய்கிறது. கோயிலை சுத்தம் செய்யச் சென்ற இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். செங்கோட்டையன் என்ற வேட்டையனை கொல்ல வேண்டும் என்று அது வெறிகொண்டு அலைகிறது. இப்போது “இதோ, வருகிறேன்” என்று வேட்டையனின் ஆவியும் ”லகலகலக” என்றவாறு அங்கே வந்து விடுகிறது.

இந்த இரண்டு ஆவிகளில் எந்தெந்த ஆவி யார் யார் உடம்புக்குள் புகுந்துகொண்டு, என்னென்ன பேயாட்டம் ஆடி, பீதியைக் கிளப்புகின்றன? சந்திரமுகி ஆவிக்கும் வேட்டையன் ஆவிக்கும் இடையிலான பயங்கர மோதலில் வெற்றி பெறுவது யார்? திட்டமிட்டபடி ரங்கநாயகி குடும்பம் குலதெய்வக் கோயிலில் வழிபாடு செய்ய முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான திருப்பங்களுடன், மயிர்கூச்செறியச் செய்யும் திகில்காட்சிகளுடன் விடை அளிக்கிறது ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1k

கதையின் நாயகன் பாண்டியனாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் காதல், காமெடி, நடனம், அதிரடி ஆக்‌ஷன் என அனைத்திலும் தனக்கே உரித்தான தனித்துவ பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். என்றாலும், படத்தின் இரண்டாம் பாதியில், வீரம் செறிந்த தளபதி செங்கோட்டையனாகவும், பின்னர் ராஜா வேட்டையனாகவும் வரும் அவர், வில்லாதி வில்லனாக எதிர்மறை நாயக நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி, பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

படத்தின் தலைப்பாக இருக்கும் ‘சந்திரமுகி’யாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் கங்கனா ரனாவத். விஜயநகரப் பேரரசின் அரசவையில் நடனம் ஆடுபவராக, சக நடனக் கலைஞரை உருக்கமாக காதலிப்பவராக, எவ்வளவு பெரிய ராஜாதிராஜனாக இருந்தாலும் அவன் விரிக்கும் காமவலையில் விழாதவராக, கத்திச்சண்டையில் சாகசம் புரிபவராக, கொல்லப்பட்ட பிறகும் பழி தீர்க்கும் வெறியுடன் பல தலைமுறைகளாக ஆவியாக அலைபவராக… பல்வேறு அடுக்குகளைக் கொண்ட சந்திரமுகி கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி, தேவையான நடிப்பை அழகாய், அருமையாய் வழங்கி ஸ்கோர் செய்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

சந்திரமுகியின் ஆவி இருக்கும் வேட்டையபுர அரண்மனையின் தற்போதைய உரிமையாளர் முருகேசனாக வருகிறார் வடிவேலு. அவர் திரையில் வரும்போதெல்லாம் திரையரங்கில் சிரிப்பு அலைமோதுகிறது. குறிப்பாக, ராகவா லாரன்ஸிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடுகள் காமெடி சரவெடி. உதாரணத்துக்கு ஒன்று: “பேய்க்கு வயசாகுமா, ஆகாதா? பேய்க்கு முடி கொட்டுமா, கொட்டாதா? பேய்க்கு பற்கள் விழுமா, விழாதா?” என்று வடிவேலு கேட்பதும், அதற்கு மிரள்கிற மாதிரி ராகவா லாரன்ஸ் திகிலாய் பதில் சொல்வதும் நினைத்து நினைத்து சிரிக்கத் தூண்டும் நகைச்சுவை. சுருக்கமாக சொல்வதென்றால், இந்த படத்துக்கு வடிவேலு மிகப் பெரிய பிளஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் லட்சுமி மேனன், ரங்கநாயகியின் இளைய மகள் திவ்யாவாக வருகிறார். காலூன்ற இயலாமல் சக்கர நாற்காலியில் வலம் வரும்போது பாவமாகவும், அவரது உடம்புக்குள் ஆவி புகுந்துகொண்டவுடன் சக்கர நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி வீசிவிட்டு, எழுந்து நின்று, கண்களை உருட்டி ஆக்ரோஷமாகவும் நடித்து, தானொரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார்.

வேட்டையபுரத்து பால்காரரின் மகளாகவும், நாயகனின் காதலியாகவும் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் வரும்  மகிமா நம்பியார், சிரித்த முகத்துடன் அழகுப் பதுமையாய் வந்து பார்வையாளர்களை தென்றல் போல் வருடி சிலிர்க்கச் செய்கிறார். கூட்டுக்குடும்பத்தின் தலைவி ரங்கநாயகியாக வரும் ராதிகா சரத்குமார், தனது வழக்கமான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்ப ஜோதிடர் குருஜியாக வந்து, இயக்குனர் பி.வாசுவின் குரலில் (!) அடித்தொண்டையில் பேசும் ராவ் ரமேஷ், கதையை நகர்த்துவதற்கும், விளக்கங்கள் அளிப்பதற்கும் பயன்பட்டிருக்கிறார்.

சிருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ், ஆர்.எஸ்.சிவாஜி, மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், பேபி மானஸ்வி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளார்கள்.

’தயாரிப்பாளர்களின் ஃபிரண்ட்லி டைரக்டர்’ என்றும், ‘வணிக ரீதியில் வெற்றிப்பட இயக்குனர்’ என்றும் பெயர் பெற்ற இயக்குனர் பி.வாசு இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு படைப்பைப் போல் இன்னொரு படைப்பு இருப்பதில்லை; ஒவ்வொன்றும் அதனதன் அளவில் தனித்தன்மை வாய்ந்தது என்பதால், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத்தை ஒப்பிட்டுப் பார்க்காமல், இதன் தனித்தன்மைகளை அலசி ஆராய்ந்தால், இயக்குனர் பி.வாசுவின் படைப்பாற்றலையும், இயக்கத் திறமையையும் கண்டுணர முடியும். சந்திரமுகி கதாபாத்திரத்தை திரையில் காட்டாதது போன்ற முதல் பாகத்தில் விடுபட்ட கண்ணிகளைக் கண்டறிந்து, அவற்றை இணைத்து வளர்த்து, இரண்டாம் பாகத்துக்கான கதையாக்கி, மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வேலை வாங்கி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து,  நல்ல பொழுதுபோக்கு படமாக இப்படத்தை படைத்தளிப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் பி.வாசு. பாராட்டுகள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, எம்.எம்.கீரவாணியின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு, தோட்டா தரணியின் கலை இயக்கம், கிராபிக்ஸ் கலைஞர்களின் அயராத உழைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அபாரமான பங்களிப்பு, இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘சந்திரமுகி 2’ –  இது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும் நல்ல ‘ஃபேமிலி எண்டர்டைனர்’ என்பதால், குடும்பத்துடன் போய் பார்த்து, ரசித்து மகிழலாம்!