கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் காலமானார்

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராகத் திகழ்ந்த டி. சீனிவாசனின் மகனாக 1936ஆம் ஆண்டு பிறந்தவர் சந்திரஹாசன். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், நடிகர் கமலஹாசனின் 2-வது சகோதரர் ஆவார்.

கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும், நிர்வாகியாகவும் சந்திரஹாசன் இருந்தார்.

சந்திரஹாசனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதன்பிறகு சந்திரஹாசன் லண்டனில் வசிக்கும் தன் மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்தது. மனைவி இறந்த 2 மாதத்தில் சந்திரஹாசனும் மரணம் அடைந்துள்ளார்.

மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தையின் மரணத்தை அடுத்து நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு விரைந்து உள்ளார்.

சந்திரஹாசன் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சங்கம் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களது ரெண்டாவது சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் திரு கமலஹாசன் அவர்களுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் திரு.சந்திரஹாசன். எனவே தான் அவரை தனது மூத்த சகோதரர் என்றில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் திரு.கமலஹாசன், மூத்த சகோதரர் நடிகர் திரு.சாருஹாசன் மற்றும் அவர்களது  குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறது.”