காவிரி வழக்கு: ஏமாற்றும் மோடி அரசுக்கு ஒத்து ஊதிய உச்ச வழக்கு மன்றம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை உச்ச வழக்கு மன்றத்தில் இழுத்தடித்து, தமிழகத்தை ஏமாற்றும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. “கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர்கள் பிஸியாக இருப்பதால் ஸ்கீமில் கையெழுத்து வாங்க முடியவில்லை” என்று சாக்குப்போக்கு கூறியுள்ளது. இதை கண்டிக்காமல் ஒத்து ஊதும் வகையில் நடந்துகொண்டிருக்கிறது உச்ச வழக்கு மன்றம். (வழக்கு தொடுக்கலாம், ஆனால் நீதியை எதிர்பார்க்க முடியாது என்கிற ரீதியில் செயல்படும் மன்றத்தை ‘உச்ச வழக்கு மன்றம்’ என்று தானே அழைக்க வேண்டும்!)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச வழக்கு மன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை 6 வாரங்களுக்குள் அமைக்காமல் காலம் தாழ்த்திய மோடி அரசு 6வது வார முடிவில் ‘ஸ்கீம’் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு இழுத்தடித்தது.

“உச்ச வழக்கு மன்ற உத்தரவின்படி மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. வழக்கு மன்ற உத்தர‌வை அவமதித்த மோடி அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உச்ச வழக்கு மன்றத்தில் சும்மாங்காச்சுக்கும் முறையிட்டது தமிழக எடுபிடி அரசு. (அது மோடி அரசு மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தவே இல்லை.).

தன்னை மோடி அரசு அவமதித்தது பற்றி எந்த சொரணையும் இல்லாத உச்ச வழக்கு மன்றம், மோடி அரசு முழுமையான வரைவு திட்டத்தை (ஸ்கீம்) மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் அது பற்றி மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நரேந்திர மோடி இதுவரை காவிரி மேலாண்மை விவகாரம் சம்பந்தமாக தமிழக் எடுபிடி முதல்வரையோ, அனைத்துக்கட்சித் தலைவர்களையோ சந்திக்க மறுத்து வருகிறார். மத்திய அமைச்சர்களும் காவிரி வழக்கில் எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச வழக்கு மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச வழக்கு மன்றம் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. மாறாக, தாக்கல் செய்யாதது குறித்து மோடி அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வினோதமான விளக்கத்தை அளித்தார்.

“காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை, அவர்கள் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வந்தபின் தான் கையெழுத்து பெற்று தாக்கல் செய்ய முடியும். ஆகவே கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வேண்டும்” என அவர் விளக்கம் அளித்தார்.

இதற்கு உச்ச வழக்கு மன்றம், “கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை. காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பை நடைமுறைபடுத்துவதில் இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை முழு அறிக்கையாக மத்திய அரசு, 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நைசாக மோடி அரசுக்கு மேலும் 5 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது உச்ச வழக்கு மன்றம்.

மேலும், பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு அடிப்படையில், ஏற்கெனவே அறிவித்தபடி உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளது. இதன் மூலம் மோடி அரசுக்கு எதிரான பிளேட்டை லாவகமாக கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக திருப்பிப் போட்டிருக்கிறது உச்ச வழக்கு மன்றம்.

இப்படியாக உச்ச வழக்கு மன்றத்தில் பிரமாதமாக நடந்துகொண்டிருக்கிறது மேட்ச் ஃபிக்சிங் ஆட்டம்! தமிழகத்திலோ, விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் வகையில் பரிதாபமாக வறண்டு கிடக்கிறது காவிரி. ( பார்க்க – மேலே உள்ள படம்.)