பிரிட்டன்: ரிஷி சுனக்கை வீழ்த்தி புதிய பிரதமர் ஆனார் லிஸ் டிரஸ்

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார். இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வந்தன.

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அந்த நாட்டின் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். ஆனால், அதன்பின் நடைபெற்ற பல்வேறு கட்ட தேர்தல்களில் அவர் பின்னடைவை சந்தித்தார்; லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

இந்த நிலையில், பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் 81,326 வாக்குகளுடன் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக் 60,399 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார்.

லிஸ் ட்ரஸ் 1975-ல் பிறந்தவர். 47 வயதாகும் இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யின் கீழுள்ள மெர்ட்டன் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர். லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் இளைஞரணியில் சேர்ந்த லிஸ், 1996-ம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை ஷெல் நிறுவனத்தின் பொருளாதாரப் பிரிவில் பணியாற்றினார். அதன் பிறகு நேரடி அரசியல் களமிறங்கினார்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் உணவு, குழந்தைகள் நலம், சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர், 2019-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பெண்கள், சமத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2021 செப்டம்பர் மாதத்தில் அவர் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரானார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில், உக்ரைன் பக்கம் நின்று, ரஷ்ய அதிபர் புதினுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்ததுடன், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததிலும் பங்கு வகித்தவர். போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளராகவும் பார்க்கப்படுபவர். சமீபத்திய பிரசாரங்களில் தனது கொள்கைகளை முன்வைத்து தெறிப்பான பேச்சுகள் மூலம் கட்சியினரை தன்பக்கம் ஈர்த்தவர்.

அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுள்ள ரிஷி சுனக் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனும் ஆவார்.