பிருந்தாவனம் – விமர்சனம்

நீலகிரியில் உள்ள நவநாகரிக முடிதிருத்தகத்தில் வேலை பார்ப்பவர் நாயகன் அருள்நிதி. காது கேளாதவர், வாய் பேச முடியாதவர். சிறுவயதிலிருந்தே அவருடன் பழகிவரும் நாயகி தான்யாவுக்கு அவர் மீது காதல். தான்யாவை அருள்நிதிக்கு பிடித்திருந்தாலும், அவரது காதலை ஏற்க மறுத்து வருகிறார். காரணம், உண்மையில் அருள்நிதி காது கேளாதவரோ, வாய் பேச முடியாதவரோ அல்ல. அவருக்கு காது கேட்கும்; வாயும் பேசும். என்றாவது ஒரு நாள் இந்த உண்மை தான்யாவுக்கு தெரிய வந்தால் அது மிகப்பெரிய சிக்கலாகிவிடும் என்பதால் தான் அவரது காதலை ஏற்க மறுத்து வருகிறார் அருள்நிதி. அவர் சிறு வயதிலிருந்தே இப்படி பொய்யாய் நடித்து வருவது ஏன்? இந்த பொய் தான்யாவிடம் அம்பலம் ஆனதா? விளைவு என்ன? என்பது ‘பிருந்தாவனம்’ படக்கதை.

காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞராக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. ‘மொழி’ படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல, காது கேட்காத, வாய்பேச முடியாத ஓர் ஆண் என்ன செய்வான்? தனது கருத்துக்களை எப்படி வெளிப்படுத்துவான்? என்பதை சிறப்பாக நடிப்பில் காட்டிய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.

நாயகி தான்யா அசால்டு காட்டும் துணிச்சலான பெண்ணாக இப்படத்தில் வருகிறார்.. தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்.

விவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே நடித்திருக்கிறார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதிலும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்குப் பிறகு அவரது காமெடிகள் பட்டாசாய் வெடித்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.

சமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவரின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அருள்நிதியுடனேயே படம் முழுவதும் பயணம் செய்யும் ட்வுட் செந்தில் தனது பங்குக்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

இயக்குனர் ராதாமோகன் தனது தனித்துவமான பாணியில் இப்படத்தையும் மென்மையான உணர்வுகளால் நிரப்பி இருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தும் கலந்த கலவையாக பிருந்தாவனத்தை படைத்திருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

`பிருந்தாவனம்’ – கோடைக்கு ஏற்ற இதமான குளிர்ச்சி!